Header Ads



அம்பாறையில் காணாமல் போகும் ''அந்தக் காலம்''

(ஏ.எல்.ஜுனைதீன்)

  அம்பாறை மாவட்டம் விவசாய செய்கையில் முன்னணி வகிக்கும் ஒரு மாவட்டமாகும். இம் மாவட்டத்தில் சுமார் 50 வருடங்களுக்கு முன்னர் வேளாண்மைச் செய்கையின்போது பாரம்பரிய நடைமுறைகள் பல இருந்தன. அவைகளில் பல நடைமுறைகள் நாளுக்கு நாள் மறைந்து இன்று அவைகள் இல்லாமல் போய் விட்டன.

  அன்றிருந்த வேளாண்மைச் செய்கையின் பாரம்பரிய நடைமுறைகளை தற்போதய இளம் வயதினர் அறிந்திருக்க வேண்டும் என்பதற்காகவும் வயோதிபர்கள் பசுமையான அந்தக் காலத்தை மீட்டுப் பார்த்துக் கொள்வதற்காகவும் சில நடைமுறைகளை இங்கு தருகின்றோம்.

  பல ஏக்கர் பரப்புடைய வேளாண்மை செய்யக்கூடிய காணிச் சொந்தக்காரர்களை 'போடியார்' என்பர். இவர்களின் வேளாண்மையை செய்கை பண்ணி அறுவடை செய்து நெல் வீட்டுக்கு வந்து சேரும் வரை சேவை செய்பவரை 'வயற்காரன்' என்பர்.

  போடியார் தன்னுடைய பல வயல் வெளிகளுக்குப் போய் கண்காணிக்க நேரமின்மையால் அவற்றைப் பார்வையிட வேறொருவரை நியமித்திருப்பார். அவரை 'முல்லைக்காரன்' என அழைப்பார்கள்.

  நாளைக்கு வயல் விதைப்பதாக இருந்தால் போடியார் வீட்டில் மா இடிப்பதும் நடுச்சாமம் வரை ரொட்டி சுடுவதும் வழக்கமாகும். இந்த ரொட்டியும் இறைச்சிக் கறியுமே வயல் விதைக்கும் நாளில் காலை உணவாகும்.

  அன்று அதிகாலை மூன்று மணிக்கு முன்பே வயற்காரனும் வண்டிக்காரனும் போடியார் வீட்டுக்கு  வந்து விடுவார்கள். தூரத்திலுள்ள வயல்களுக்கு நேர காலத்தோடு முளை வண்டிகள் செல்லும். அவ்வண்டியில் உணவுப் பொருட்கள் விதைக்க வரும் கூலி ஆட்களுக்குரிய மண்வெட்டிகள் கைப்பெட்டிகள் வண்டிக்காரனின் மட்டம் அடிக்கும்  முட்கலப்பை அல்லது மட்டப்படுத்தும் பலகை என்பன செல்லும்.

  கூலி ஆட்களாக சுமார் எட்டுப் பேர் செல்வர். வயலில் முளை விசுறுபவர் (எறிபவர்) அதற்கென அனுபவம் பெற்றவராக இருப்பார். விதைக்கும் வயல் ஐந்து ஏக்கர் எனின் காலை 8.00 மணிக்கு தொடங்கி மதியம் 1.00 மணியளவில் முடிந்து விடும்.

  வயல் விதைத்து 'ஊசிப்பயிர்' வரும் காலத்தில் வட்டை விதானையின் கட்டளைப்படி வட்டை வேலியை வயற்காரர்கள் கம்பிஇ கட்டைஇ முட்கம்பி கொண்டு அமைப்பார்கள். இந்த வேலிக்குத் தேவையான கம்புஇ கட்டைகளை காட்டில் தறித்துக் கொண்டு வந்திருப்பார்கள்.

  ஒரு வாரப் பயிரை 'ஊசிப்பயிர்' என்றும், ஒரு மாதப் பயிரை 'குஞ்சு வேளாண்மை' என்றும் இரண்டு மாதப் பயிரை 'இசாப் பருவம்' என்றும் மூன்று மாதப் பயிரை 'குடலைப் பயிர்' என்றும் அதன் பின்னர் 'அலவாக் கதிர்' ( அங்கும் இங்கும் கதிர் தள்ளி இருப்பதை) எல்லாப் பயிர்களும் கதிர் தள்ளியவுடன் 'கதிர் பருவம்' என்றும் கூறுவர்.

  கதிர் முற்றிப் பழுத்து மஞ்சள் நிறமாகியவுடன் தலை குனிந்து காணப்படும். பின்னர் அறுவடை செய்வதற்கு ஆயத்தமாவார்கள். இதற்கான தொழிலாளர்கள் நூற்றுக்கணக்கானவர்கள் இருந்தார்கள். ஒவ்வொரு குழுவிலும் சுமார் இருபது பேர் இருப்பார்கள். இக் குழுவின் தலைவரை 'முகாமையாளர்' என்பர். அல்லது 'முகாமைக்காரன்' என்றும் அழைப்பர்.

  அறுவடை செய்த நெற் கதிர்களை 'உப்பட்டி' என்பார்கள். இவை அடுத்த நாள் சூரிய ஒளியில் நன்றாகக் காய்ந்த பின் மூன்றாம் நாளில் கட்டிச் சூடுகளை வைப்பார்கள். உப்பட்டிகளைப் புரட்டி காய்ந்த பின்பே கட்டுகளாகக் கட்டி சூடுகளைக் கூம்பு வடிவமாக வைப்பார்கள். இவ்வேளையில் ஏழைச் சிறுவர்கள்இ சிறுமிகள்இ வயோதிபப் பெண்கள்  சிதறுண்டு வயல் வெளியில் கிடக்கும் நெற் கதிர்களை பொறுக்குவார்கள். இப்படியான வேலை காலை 9.00 மணி தொடக்கம் மாலை 5.00 மணி வரை நடைபெறும்.

  சூடுகளை வைத்து முடிந்ததும் கட்டுகள் மேலதிகமாக மிஞ்சினால் அவற்றையும் சிறிய சூடு போன்று பெரிய சூட்டின் பக்கத்தில் வைப்பார்கள். இதனைக் 'கந்து' என அழைத்தார்கள். சூடு வைக்கும் வரவையை 'களவெட்டி வரவை' என்பார்கள்.

  வயல் கட்டி சூடு வைக்கும் நாளில் போடியாருக்கு சேவை செய்யும் ஒஸ்தா (தலை முடி வழிப்பவர்) வண்ணான் என்பவர்களும் செல்வர். அவர்களுக்கு போடியார் ஒவ்வொரு கட்டுக் கொடுக்கும் வழக்கமும் இருந்தது.

  வயற்காரன் சூடு மிதிப்பதற்கான பல ஒழுங்குகளைச் செய்ய வேண்டியிருக்கும். சுமார் 30 அடி அகல நீளமான வயல் நிலத்தைச் சூட்டோரமாகச் செதுக்கி சீமெந்துத் தரை போன்று அமைப்பார். பக்கத்திலுள்ள சிறு காடுகளுக்குச் சென்று 'கோலம்' ( நெல் கூட்டும் மிலாறு) கட்டை மிலாறு (கூழன்களை ஒதுக்கும் மிலாறு) அவரிக்குரிய கம்புகளைத் தயார்படுத்துவார். ( உயரத்தில் ஏறி நின்று நெல் தூற்றும் முக்கால்களைக் கொண்ட உபகரணம்)

  போடியாரும் வயற்காரனும் தீர்மானிக்கும் நாட்களில் சூடு மிதிக்கத் தொடங்குவர். சூடு மிதிக்க எட்டுப் பேர் வரை தேவைப்பட்டனர். இக் கூலியாட்கள் 'வேலைக்காரக் கம்பு' என்னும்  முடக்குக் கம்பு ஒவ்வொன்றையும் உணவுக்காக அரிசி, தேங்காய் கத்தரிக்காய். மிளகாய், உப்பு, வெங்காயம் என்பவைகளையும் ஒவ்வொரு பிங்கானுமாக ஓர் உமலில் கட்டி கூலி நெல்லை வாங்குவதற்காக ஒரு சாக்கும் கொண்டு செல்வர்.

  சூடடிப்பவர்கள் சூட்டுக் களவெட்டியுள் மாலை 5.00 மணியளவில் ஒன்று சேர்ந்துவிடுவார்கள். இருவர் சூட்டின் மேல் ஏறி நிற்பர். கீழே நான்கு பேர் இரு சோடிகளாக 'சூட்டுக் கம்பு'களைப் பிடிப்பார்கள். சூட்டின் மேல் நிற்பவர்கள் கதிர்களைத் தள்ளி விடுவர். அவற்றை சூடு கட்டும் கம்புகளால் கொண்டு சென்று நடுக்களவெட்டிக்குள் குவிப்பர். சூட்டைச் செங்குத்தாகவே தள்ளுவர்.
  முதலில் இரு சோடி மாடுகளை மட்டும் சாய்ப்பார்கள்.அப்போது பின்வரும் பாடலையும் மாடு சாய்ப்பவர் பாடுவார்.

                மாதா பொலி  மனம் மகிழப் பொலி   
                பூமி பொலி   பூமா தேவி பொலி
                பொன்னின் களமே பொலி   தாயே பொலி
                கலந்தரப்பா பொலி    மாதா பொலி
                மனம் மகிழப் பொலி  அம்மா பொலியே

  என்று பாடியவுடன் அங்கிருக்கும் எல்லோரும் ஓகோ.....கோ எனக் கோசம் இடுவர்.

                திட்டிகள் போலத்  திடருகள் போல
                மாவடிப்பள்ளி மாமரம் போல பொலி
                பொலியம்மா பொலி
                பூமா தேவி பொலி  பொன்னின் களமே பொலி
                தாயே பொலி   இரவும்  பகலும்
                ஏற்றியிறக்கப் பொலியம்மா பொலியே..........
                ஓகோ..............கோ.................என்பார்கள்.
  சுமார் இரு மணித்தியாலங்களாக ஐந்தி பிணையல் மாடுகளை களவெட்டிக்குள் வட்டமாகச் சாய்ப்பர்.

  சூட்டடி நெல்லை ( சங்கு முத்துவைக் ) கோலத்தால் தள்ளிக் களவெட்டிக்குள் விடுவர். பின்னர் மாடுகளைக் களைப்பாற்ற களவெட்டியிலிருந்து வெளியேற்றுவர். பின்பு தொழிலாளர்கள் அவர்களது வேலைக்காரக் கம்புகளுடன் வந்து கிளறி நெல்லைக் கீழாகவும் பொலிக் கொடிகளை மேலாகவும் ஆக்குவார்கள். மீண்டும் அதன் மேல் மாடுகளை ஏற்றி வளைப்பர்.
  முதல் நிற்கும் மாட்டை 'அரக்கு' என்றும் கடைசியில் நிற்கும் மாட்டை 'வாட்டி' என்றும் அழைத்தனர்.

  இவ்வாறான வேலைகள் அதிகாலை 4.00 மணி வரை நடைபெறும். பொலிக் கொடிகளை ( வைக்கோல் ) வேறாக்கி களவெட்டியின் ஓரமாக வட்டமாகக் குவிப்பர். நெல்லைக் கோலத்தால் ஒதுக்கி நடுவில் குவிப்பர். 

    களவெட்டியில் ஒருவர் காவல் இருக்க ஏனையவர்கள் பரண் அல்லது புரைக்குச் சென்று தூங்குவார்கள். காலையானதும் குளித்துவிட்டு காலை உணவை உண்ட பின் 10.00 மணியளவில் பொலியில் கட்டமிலாறு கொண்டு கூழங்களை வெளியேற்றுவர்.

  பகல் உணவு உண்ட பின் இரு அவரிகளில் இருவர் ஏறுவர். இருவர் பொலியைக் கட்டிக் ( அள்ளி ) கொடுப்பார்கள். காற்றின் உதவியுடன் நெல் கீழேயும் பதறுஇ கூழங்கள் தூரத்திலும் பறக்கும். தூற்றிய பொலியின் இரு பக்கமும் வழியும் பதறுகளைக் கையால் வருகிக் குவிப்பார்கள். இதனைக் 'கொம்புகட்டுதல்' எனக் கூறுவார்கள். இவ்வாறு மூன்று முறை தூற்றி நெல் எடுக்கப்படும். மூன்றாம் பொலியை மதிப்பீடு அதனை வயற்காரருக்கு போடியார் கொடுத்து விடுவார்.

  தூற்றிய நெல்லை சாக்கில் கட்டி உடனே வண்டியில் ஏற்றமாட்டார்கள். வைக்கோற் பட்டறையில் கொட்டிப் பக்குவப்படுத்தி வைக்கோலால் மூடி விடுவார்கள்.

  களவெட்டியில் பட்டறையில் கட்டப்பட்டுள்ள நெல் சில நாட்களுக்கு  அப்படியே இருக்கும். வயற்காரன் காவல் காத்துக் கொண்டு அங்கேயே பரணில் இருப்பார். இதற்கு காரணம் வண்டிக்காரன் ஏனைய வயல் களவெட்டிகளை முடித்து வர பல நாட்கள் செல்லும்.

  வண்டிக்காரன் அவனது ஏனைய வண்டிக்கார நண்பர்களோடு வெளிக்கிட்டு களவெட்டியை வந்தடைவார். அவருடைய 10 மரைக்கால் நெல் கொள்ளக்கூடிய சாக்குகளில் அளந்து கட்டி வண்டிகளில் ஏற்றுவர்.

  இரவு உணவு உண்ட பின் வண்டிகள் ஊரை நோக்கிப் புறப்படும். அதிகாலை 5.00 மணியளவில் வண்டிகள் போடியார் வீட்டை வந்தடையும். வண்டிக்காரர்கள் போடியார் வீட்டிலுள்ள 'பட்டறை'களில் நெல்லை சொரிந்து அவர்களது சாக்குகளை மீளப் பெற்றுக் கொள்வர். ஏனெனில் வேறு களவெட்டி நெல்லைப் பிடிக்க அவர்களுக்கு சாக்குத் தேவைப்படும். அச் சாக்குகளின் வாயின் ஓரத்தில் சுமார் ஒரு யார் நீளமுடைய கயிறுகளையும் பொருத்தியிருந்தார்கள். அச் சாக்குகளில் அவர்களுடைய பெயர்களின் முதல் எழுத்துக்களைச் சாயத்தினால் எழுதியும் இருப்பார்கள்.

  வண்டிக்காரர்களுக்கு பொடியார் தனது வீட்டில் காலை உணவாக இடியப்பம், இதயிர், வாழைப் பழம் அல்லது ரொட்டியும் இறைச்சிக் கறியும் கொடுத்துப் பசியாற்றுவார்.

  சூட்டுக் களவெட்டியில் பரிமாறப்படும் பொருட்களுக்குப் பரிபாசையான பெயர்கள் (சொற்கள்) இருந்தன. இப் பொருட்களின் உண்மைப் பெயர்களைக் களவெட்டிக்குள் சொல்ல மாட்டார்கள். அவையாவன:
  பொருட்கள்                              களவெட்டியில் கூறப்படும்     
                                            பரிபாசையான சொற்கள்.
 நெல்                                       பொலி
 வைக்கோல்                                 பொலிக்கொடி
 கயிறு                                      நெடுவாலன்
 சாக்கு                                      தோல்வாயன்
 வேலைக்காரன் கம்பு                         பல்லுவாயன்
 மண் வெட்டி                                 வெட்டுவாயன்
 மரைக்கால்                                   கணக்கன்
 கைப்பெட்டி                                   குஞ்சுவாயன்
 கடகம்                                        பெருவாயன்
 மாடு                                          வாரிக்காலன்
 பாக்கு                                         கருங்காயன்
 புகையிலை                                    புகை ஞான்
 மீன்                                           கடற்கரும்பு
 தண்ணீர்                                       வெள்ளம்
 தேங்காய்ப் பாதி                                பல்லிளிச்சான்
 வாழைப்பழம்                                  கரைச்சான்
 சூட்டடி நெல்                                   சங்குமுத்து
 மாட்டுச் சாணம்                                கோல்
 அள்ளுஇ தூக்கு                                  கட்டு
 சாப்பிடுவோம்                                  வெள்ளம் வெருகுவோம்.

1 comment:

  1. thanks i enjoyed and recall my father and grand father memories

    ReplyDelete

Powered by Blogger.