தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் அரசாங்கத்தை பழிவாங்குவதாக நினைத்து..!
(vi) பொதுநலவாய அரச தலைவர்கள் உச்சி மாநாட்டில் இந்தியா பங்கேற்கும். மன்மோகன் சிங் இலங்கை விஜயத்தினை மேற்கொள்வார் என்ற நம்பிக்கை எமக்கு உண்டு. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் நாட்டிற்கு எதிராக செயற்படுகின்றனர் என்பது சம்பந்தனின் பேச்சில் தெளிவாகியுள்ளது என தேசப்பற்றுள்ள தேசிய இயக்கம் குறிப்பிட்டுள்ளது.
மேலும் தமிழ் மக்களைச் சாட்டி கூட்டமைப்பின் தனிப்பட்ட விருப்பங்களை சர்வதேச நாடுகளிடம் முன்வைக்கின்றனர். சம்பந்தன், விக்னேஸ்வரனின் செயற்பாடுகள் வருந்தத்தக்க வகையில் அமைந்துள்ளது எனவும் அக்கட்சி தெரிவித்துள்ளது. இது தொடர்பாக தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின் தலைவர் குணதாச அமரசேகர கருத்துத் தெரிவிக்கையில்,
சம்பந்தன் முறையிட்டதாலோ அல்லது தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் தமது எதிர்ப்புக்களை தெரிவிப்பதாலோ இந்தியா பொது நலவாய உச்சி மாநாட்டினை புறக்கணிக்கப் போவதில்லை. இந்தியா கூட்டமைப்பை ஆதரிப்பது போல் ஒரு புறமும் அரசாங்கத்தை ஆதரிப்பது போல் மறுபுறமும் நாடகமாடி தமது காரியங்களை சாதித்துக் கொள்ள முயற்சிக்கின்றது.
இலங்கையின் வளங்களையும் சீனாவினை இலங்கையிடம் இருந்து பிரிப்பதையும் தனது இலட்சியமாக வைத்துள்ள இந்தியா இலங்கையில் நடைபெறும் பொதுநலவாய மாநாட்டினை புறக்கணிப்பதற்கான வாய்ப்பில்லை.
இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் இலங்கைக்கு வருவார் பொதுநலவாய மாநாட்டில் கலந்து கொள்வார் என்ற நம்பிக்கை எமக்கு இருக்கின்றது.
மேலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் அரசாங்கத்தை பழிவாங்குவதாக நினைத்து இலங்கையின் அபிவிருத்தி பொருளாதாரம் என அனைத்தையும் தடுக்கும் செயற்பாட்டினை செய்து வருகின்றது. தமிழ் மக்களையும் வடக்கின் சூழலையும் வைத்து கூட்டமைப்பின் சுயநலமான கொள்கைகளை நிறைவேற்றிக் கொள்ளவே முயற்சிக்கின்றனர்.
சம்பந்தன் கூட்டணியினர் அரசாங்கத்துடன் இணைந்து செயற்பட வேண்டும் என்பது எமது நோக்கமல்ல. ஆனால் இலங்கையின் நிலைமையினையும் வெளிநாட்டு உறவு முறைமைகளையும் தடுக்கும் வகையில் செயற்படுவதானது வருந்தத்தக்கதாகும் எனவும் அவர் தெரிவித்தார்.
Post a Comment