தம்புள்ள கோயிலுக்கு பொலிஸ் பாதுகாப்பு வழங்க சுவாமிநாதன் எம்.பி. கோரிக்கை
தம்புள்ள பத்திரகாளி அம்மன் கோயிலுக்கு பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும் என ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் டி.எம்.சுவாமிநாதன் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
குறித்த கோயிலின் கூரை கடந்த திங்கட்கிழமை இரவு கழற்றி வீழ்த்தியிருப்பதுடன் கோயிலின் முன்புறமாக பறக்க விடப்பட்டிருந்த இந்து கலாசார மையத்தினால் வழங்கப்பட்டிருந்த கொடி மற்றும் கொடிக்கம்பம் ஆகியனவும் கழற்றி வீசப்பட்டுள்ளன எனவும் அவர் குறிப்பிட்டார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். குறித்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
புனித தலமான கோயில்கள் மீது மேற்கொள்ளப்படும் இவ்வாறான தாக்குதல் சகல இந்து மக்களையும் புண்படுத்தும் செயலாகும்.
இரவு வேளையில் பெண்கள் கோயிலில் தங்கி பாதுகாப்பு வழங்கி வருகின்றனர். இச்சந்தர்ப்பத்தில் மழை காரணமாக இரண்டு நாட்களாக பாதுகாப்பிற்கு எவரும் வராத சந்தர்ப்பத்திலேயே இச்செயல் இடம்பெற்றுள்ளது.
இதன் மூலம் இந்த செயற்பாடு ஒரு குழுவினால் மிகவும் திட்டமிடப்பட்டு மேற்கொள்ளப்பட்ட ஒரு தாக்குதலாகவே கருத வேண்டும்.
இந்த தாக்குதலை மேற்கொண்டவர்களை உடனடியாக கைது செய்வதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும் மத்திய மாகாண சபை முதலமைச்சர் இவ்விடயத்தை கவனத்தில் கொள்ள வேண்டும் எனவும்
வேண்டிக்கொள்கிறேன்.
எந்த ஒரு தரப்பினருக்கும் எதுவித இடையூறுமின்றி இயங்கிவரும் இக்கோயிலை அகற்றுவதற்கு பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட போதிலும் இப்பிரதேசத்தில் வசித்தி வரும் சிறுபான்மை மக்களின் விடா முயற்சியினாலே இக்கோயில் பாதுகாக்கப்பட்டு வருகின்றது.
மதச் சுதந்திரத்தைக் கட்டுப்படுத்தும் இவ்வாறான இழிவான செயற்பாடுகளை நிறுத்தி, மக்கள் சுதந்திரமாக தமது மத வழிபாடுகளை மேற்கொள்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
தொடர் தாக்குதலுக்கு இலக்காகி வரும் இக்கோயிலுக்கு உரிய பாதுகாப்பை வழங்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், தமிழ் மக்களின் மத உரிமையை உறுதிப்படுத்தப்பட வேண்டும் எனவும் வேண்டிக்கொள்கிறேன் என்றார்.
Post a Comment