இன ஒற்றுமையை ஏற்படுத்த பாடுபடவேண்டும் - கோத்தா
"வடக்கில் சட்டம், ஒழுங்கை முதலமைச்சர்தான் நிலைநாட்ட வேண்டும். அதற்கான பொறுப்பு முதலமைச்சருக்குத் தான் உண்டு. விழிப்புக்குழுக்கள், சிவில் பாதுகாப்புக்குழுக்களை அமைத்துப் பொலிஸாருக்கு உதவுவதன் மூலம் வடக்கில் இடம்பெறும் களவு மற்றும் கொள்ளைச் சம்பவங்களைத் தடுக்கமுடியும்''
இவ்வாறு பாதுகாப்புச் செயலர் கோத்தபாய ராஜபக் நேற்று நடைபெற்ற தமிழ்ப் பத்திரிகை ஆசிரியர்களுடனான சந்திப்பில் தெரிவித்தார்.
"தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் மீண்டும் பழைய விடயங்களையே கூறி வீண் குழப்பங்களை ஏற்படுத்தாது வடக்கில் தற்பொழுது கிடைத்துள்ள சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி மக்களுக்குச் சேவை செய்ய வேண்டும். அர்த்தமற்ற தேவையற்ற பேச்சுகளை சம்பந்தன் நிறுத்திக்கொள்ள வேண்டும்.'' என்றும் அவர் கூறினார்.
பாதுகாப்புச் செயலர் அலுவலகத்தில் நேற்றுப் பகல் இடம்பெற்ற இந்தச் சந்திப்பின்போது, வடக்கின் காணிப்பிரச்சினை, அங்கு நிலைகொண்டுள்ள இராணுவம், இந்திய மீனவர்களின் அத்துமீறல்கள் மற்றும் பொதுபல சேனாவின் நடவடிக்கைகள் குறித்து எழுப்பப்பட்ட கேள்விகளுக்குப் பாதுகாப்புச் செயலர் பதிலளித்தார்.
சமீபத்தில் வடமராட்சியில் இடம் பெற்ற கொள்ளைச் சம்பவங்கள் குறித்து எழுப்பப்பட்ட கேள்விகளுக்குப் பதிலளிக்கையிலேயே வடக்கில் சட்டம், ஒழுங்கை நிலைநாட்டும் பொறுப்பு முதலமைச்சருக்கு உண்டு. பொலிஸாருடன் இணைந்து இதனைச் செயற்படுத்த முடியும் என்று பாதுகாப்புச் செயலர் பதிலளித்தார்.
கூட்டமைப்பிடம் வடக்கில் போதுமான நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருக்கிறார்கள். மாகாணசபை உறுப்பினர்கள் இருக்கிறார்கள். பிரதேசசபை உறுப்பினர்கள் இருக்கிறார்கள்.
அவர்கள் மீண்டும் மீண்டும் பழைய விடயங்களையே கூறிக்கொண்டிருக்காது வீண் குழப்பங்களை ஏற்படுத்தாது தற்பொழுது கிடைத்துள்ள சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி மக்களுக்குச் சேவை செய்யவேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.
சுமார் ஒன்றேகால் மணி நேரம் இடம்பெற்ற இந்தக் கலந்துரையாடலில் பாதுகாப்புச் செயலர் தெரிவித்த முக்கிய விடயங்கள் வருமாறு:
காணி
வடக்கில் உள்ள காணிகளை இராணுவம் அபகரித்து வைத்திருப்பதாகக் கூட்டமைப்பினர் குற்றஞ்சாட்டுகிறார்கள். முப்பது ஆண்டுகளுக்கு மேலாக வடக்கின் சில பகுதிகளில் இராணுவத்தின் கட்டுப்பாட்டில் காணிகள் இருந்து வந்துள்ளன.
அப்பொழுது பேசாதிருந்தவர்கள் தற்பொழுது இராணுவம் தானாக முன்வந்து காணிகளைக் கையளிக்க ஆரம்பிக்கும் போது பிரச்சினை கிளப்புகிறார்கள். பலாலிப் பகுதியில் உள்ள காணிகளில் பெரும்பாலானவை அரச காணிகள்.
விடுவிக்கப்பட்டுள்ள காணிகளில் விவசாய நடவடிக்கைகளுக்காக விடுவிக்கப்படும் காணிகளும் உள்ளன. இராணுவத்தின் தேவைக்காக குறைந்த அளவு காணிகளை வைத்துக்கொண்டு மிகுதியைப் படிப்படியாக விடுவிப்பதே அரசின் நோக்கம்.
இராணுவத் தேவைகளுக்காக சுவீகரிக்கப்படும் தனியார் காணிகளுக்குப் போதுமான நஷ்டஈடு வழங்கப்படும். தற்பொழுது மயிலிட்டியில் உள்ள காணிகளை விடுவிப்பதற்கான நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளோம்.
வடக்கிலிருந்து இராணுவம் வெளியேற வேண்டும் என்று கூட்டமைப்பு கோருகிறது. இராணுவத்துக்கு எது கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த பகுதியோ அங்குதான் இராணுவம் நிலைகொண்டிருக்க வேண்டும்.
கடந்த மாகாணசபைத் தேர்தலில் கூட்டமைப்புக்கு வாக்களித்த மக்கள் வடக்கிலிருந்து இராணுவம் வெளியேறவேண்டும் என்பதற்காக வாக்களிக்கவில்லை. வடக்கில் நாளாந்த கடமைகளில் இருந்து இராணுவம் விலக்கிவைக்கப்பட்டுள்ளது. வீதித்தடைகள் நீக்கப்பட்டுள்ளன.
தற்பொழுது மக்கள் களவு, கொள்ளைகள் பற்றி முறையிடுகிறார்கள். தற்போதைய போக்குத் தொடருமானால் பாதாள உலகக் கும்பல்கள், கிரிமினல்களின் ஆதிக்கம் வடக்கில் ஏற்படலாம்.
இந்திய மீனவர் ஊடுருவல்
இந்திய மீனவர்கள் வடக்கில் மீன் வளத்தைச் சூறையாடுகிறார்கள். அவர்கள் பயன்படுத்தும் பிரமாண்டமான கடல் அடி இழுவை ரோலர்கள் மீன் குஞ்சுகள் உட்பட மீன் பெருக்கத்துக்கான வளங்களை அழித்துவிடக் கூடியவை. இந்த முறைமையைப் பயன்படுத்தியதால் இந்தியக் கடல் பகுதியில் மீன்வளம் அழிந்துவிட்டது.
தற்பொழுது அவர்கள் இலங்கையில் கடல் பகுதிக்குள் அத்துமீறி நுழைந்து இந்தத் தடைசெய்யப்பட்ட மீன்பிடி முறைமை மூலம் கடல் வளத்தை அழிக்கிறார்கள். இந்திய மீன்பிடி நிறுவனங்களின் இறால், சிங்கி இறால், நண்டு ஆகியவற்றுக்கு சிங்கப்பூரில் நல்ல கிராக்கி இருக்கிறது. நல்ல விலை போகிறது. இவையயல்லாம் இலங்கையின் கடல்பரப்பில் அத்துமீறி நுழைந்த இந்திய மீனவர்களால் பிடிக்கப்பட்டவைதான். இதில் பாதிக்கப்படுபவர்கள் வடபகுதி மீனவர்கள்தான்.
சம்பந்தன் தமிழ்நாடு சென்று தேவையற்ற விடயங்களையெல்லாம் கூறுகிறார். வடபகுதி மக்களுக்கு முக்கியமான மீனவர் பிரச்சினை இருப்பது குறித்துப் பேசத் தவறிவிட்டார்.
இந்தியாவிடம் மிகவும் பலம் வாய்ந்த கரையோரப் பாதுகாப்புச் சேவை உண்டு. இந்திய மீனவர்களின் அத்து மீறல்களை இந்தியாதான் நிறுத்த வேண்டும். யுத்த காலத்தில் தொழில் இழந்து பாதிக்கப்பட்டிருந்த வடபகுதி மீனவர்கள் தற்பொழுதுதான் அந்தப் பாதிப்பிலிருந்து படிப்படியாக மீண்டு வருகிறார்கள்.
அப்படியான நேரத்தில் இந்திய மீனவர்கள் அத்துமீறுவதும் மீன் வளங்களை அழிப்பதும் ஏற்றுக் கொள்ள முடியாதவை. இலங்கை மீனவர்கள் எங்கும் சுதந்திரமாகச் சென்று மீன்பிடிக்க முடியும். அவர்களுக்கு "பாஸ்' நடைமுறை எதுவும் கிடையாது.
பொதுபலசேனா
பொதுபலசேனாவின் நடவடிக்கைகளில் ஒரு தரப்பை மட்டும் குறைகூற முடியாது. கிராண்ட்பாஸ் பள்ளிவாசல் பிரச்சினை இன்று நேற்று ஏற்பட்டதல்ல. அது நீண்ட காலப் பிரச்சினை. இப்படியான பிரச்சினைகள் வெளிநாடுகளிலும் உள்ளன. முன்னேற்றமடைந்த சமூகங்களிலும் உள்ளன. மதங்கள் ஒழுக்கம் பற்றிப் போதிக்கின்றன.
ஆனால் ஒழுக்கம் சீர்கெடுவதற்கு இங்கு மதங்கள்தான் காரணமாகின்றன. மதத் தலைவர்கள், அரசியல் தலைவர்கள் இப்பிரச்சினைகளில் தலையிட்டுத் தீர்வு காணவேண்டும். மேற்கண்டவாறு பாதுகாப்புச் செயலர் கூறினார்.
இன ஒற்றுமைக்கு
பத்திரிகைகள்
நாட்டில் இன ஒற்றுமையை ஏற்படுத்த பத்திரிகைகள் பாடுபடவேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார். 1974ஆம் ஆண்டு தாம் வடக்கில் கடமையாற்றிய பசுமையான நினைவுகளை பாதுகாப்புச் செயலர் இந்தக் கலந்துரையாடலின் போது பகிர்ந்து கொண்டார்.
ஈழம் பற்றிப் பேசுவதும் பழையதை மீண்டும் மீண்டும் பேசுவதும் பயனளிக்காது. தெற்குடன் சண்டை போடுவதை விட மக்களுக்கு சேவையாற்றுவதே முக்கியம் என்றும் அவர் தெரிவித்தார்.
Post a Comment