Header Ads



சவூதி அரேபியாவின் தீர்மானத்திற்கு கத்தார் வரவேற்பு

(Tn)

ஐ.நா. பாதுகாப்புச் சபையின் நிரந்தரமற்ற அங்கத்துவ அந்தஸ்தை புறக்கணித்த சவூதி அரேபியாவின் முடிவை மீள்பரிசீலனை செய்யுமாறு அரபுலக நாடுகள் அழுத்தம் கொடுத்துள்ளன. வளைகுடா ஒத்துழைப்பு கெளன்ஸில் மற்றும் கட்டார், சவூதியின் முடிவை வரவேற்றுள்ளது.

ஐ. நா. சபையின் அரபு நாடுகளின் பிரதிநிதிகள் நேற்று முன்தினம் கூட்டாக வெளியிட்ட அறிக்கையில், சவூதியின் நிலைப்பாட்டை புரிந்து கொள்வதாகவும் மதிப்பதாகவும் குறிப்பிட்டுள்ளது. ஆனால் வளைகுடா இராச்சியம் பாதுகாப்புச் சபையில் தனது அங்கத்துவத்தை நிலை நிறுத்தி எமது விவகாரங்கள் குறித்த தைரியமான செயற்பாட்டை முன்னெடுக்க பாதுகாப்புச் சபையை களமாக பயன்படுத்த வேண்டும் என்று அரபு நாடுகள் அழுத்தம் கொடுத்துள்ளன.

மறுபுறத்தில் வளைகுடா ஒத்துழைப்பு கெளன்ஸில் வெளியிட்ட அறிக்கையில் சவூதி அரேபியாவின் நிலைப்பாட்டுக்கு ஆதரவளித்துள்ளது. இதில் பாதுகாப்புச் சபையில் சீர்திருத்தம் மேற்கொள்ள சவூதி அரேபியா விடுத்த அழைப்பையும் அந்த கெளன்ஸில் வரவேற்றது.

வளைகுடா ஒத்துழைப்பு கெளன்ஸிலின் செயலாளர் நாயகம் அப்துல் லதிப் பின் ரஷித் அல் சயானி, அல் ஜkரா தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், பாதுகாப்புச் சபை முறைமையில் அடிப்படை மாற்றங்கள் கொண்டுவர அழைப்பு விடுத்தது யதார்த்தமானதும் முக்கியமானதுமாகும் என்றார்.

கட்டார் அரசும் சவூதியின் முடிவுக்கு ஆதரவளித்துள்ளது. சவூதி பாதுகாப்புச் சபை ஆசனத்தை புறக்கணித்த முடிவுக்கு கட்டார் தனது இணக்கத்தை தெரிவிக்கிறது என அந்நாட்டு வெளியுறவு அமைச்சு வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஐ. நா. பாதுகாப்புச் சபையின் இரண்டு ஆண்டு தவணை கொண்ட அங்கத்துவத்தை சவூதி கடந்த வெள்ளிக்கிழமை புறக்கணித்தது. சிரியா மற்றும் அரபுலக பிரச்சினைகளை ஐ. நா. கையாளும் விதத்திற்கு அதிருப்தி வெளியிட்டே சவூதி இந்த முடிவை எடுத்தது.

சிரியா அரசுக்கு எதிராக போராடும் கிளர்ச்சியாளர்களுக்கு ஆதரவளிக்கும் சவூதி, சிரியா தொடர்பில் பாதுகாப்புச் சபையில் கடுமையான நடவடிக்கை எடுக்காதது, அமெரிக்கா, ஈரான் நாட்டுடன் நேரடி பேச்சுவார்த்தையில் ஈடுபடுவது குறித்து சவூதி அரேபியா கோபமடைந்திருப்பதாக அவதானிகள் குறிப்பிடுகின்றனர்.

1 comment:

  1. கண்கள் திறக்கப்படுகிறதா? இல்லை வேறு காரனங்களா?

    ReplyDelete

Powered by Blogger.