முதலமைச்சர் விக்னேஸ்வரனுடனான குடும்ப உறவு குறித்து அமைச்சர் வாசுதேவ நாணயக்கார..!
முதலமைச்சர் விக்னேஸ்வரனும், அமைச்சர் வாசுதேவ நாணயக்காரவும் சம்பந்திகள். முதலமைச்சரின் புதல்வர் அமைச்சரின் புதல்வியை திருமணம் செய்துள்ளார். விக்னேஸ்வரன் வடமாகாண முதலமைச்சர் வேட்பாளராக களமிறக்கப்பட்டதையடுத்தே இந்த உறவுமுறை தொடர்பான செய்திகள் பத்திரிகைகளில் வெளிவரத் தொடங்கின.
முதலமைச்சர் விக்னேஸ்வரனும் அமைச்சர் வாசுதேவ நாணயக்காரவும் 1958ம் ஆண்டில் சட்டக்கல்லூரியில் கல்வி பயின்ற பொழுதேிலிருந்தே குடும்ப நண்பர்களாக இருந்திருக்கின்றனர்.
பிள்ளைகளின் காதல் திருமணம் மற்றும் நண்பர் விக்னேஸ்வரன் பற்றி அமைச்சர் வாசுதேவ நாணயக்காரவிடம் கொழும்பிலிருந்து வெளிவரும் தமிழ் நாளிதழ் ஒன்று எழுப்பியுள்ள கேள்விகளும் பதில்களும் வருமாறு
கேள்வி - விக்னேஸ்வரனின் குடும்பமும் நாணயக்காரவின் குடும்பமும் உறவினர்களாவதற்கு முன்னரே நீங்களும் விக்னேஸ்வரனும் நெருங்கிய நண்பர்களாக இருந்தீர்கள் அல்லவா?
பதில் - ஆம். சட்டக்கல்லூரியில் எமது நட்பு ஆரம்பமானது. எனது புதல்வியும் விக்னேஸ்வரனின் புதல்வனும் தொடர்பு வைத்துக் கொள்வதற்கு முன்னர் 1958ம் ஆண்டளவில் நாங்கள் சந்தித்துக் கொண்டோம். அன்று முதல் நாங்கள் நல்ல நண்பர்களாக சகோதரர்களைப் போல பழகினோம். நான் அவரது இல்லத்துக்குச் செல்வேன். அவர் எனது இல்லத்துக்கு வருவார். அப்போது எனது தந்தை உயிருடன் இருந்தார். விஸ்வா எனது தந்தையுடன் நெருங்கிய நட்புக் கொண்டிருந்தார். எங்கள் தோட்டத்திற்கு வரும் விஸ்வா எனது தந்தையுடன் உரையாடிக் கொண்டிருப்பார்.
இப்போது உங்கள் தேயிலை தொழிற்சாலையில் எவ்வளவு தேயிலை உற்பத்தி செய்கிறார்கள்? ஒரு கிலோ தேயிலை உற்பத்தி செய்ய எத்தனை கிலோ தேயிலை கொழுந்து தேவைப்படும்? என்றெல்லாம் விஸ்வா எனது தந்தையிடம் கேள்வி எழுப்புவார். அப்போது எனது தந்தை என்னைச் சுட்டிக்காட்டி இவன் இது போன்ற கேள்விகளைக் கேட்பதில்லை. நீர் எனக்கு புதல்வனாக இருந்தால் நன்றாக இருந்திருக்கும் என்றார். நாங்கள் அவ்வளவு தூரம் நெருங்கி பழகியிருக்கின்றோம்.
கேள்வி - விக்னேஸ்வரனின் குடும்பப் பின்னணி எப்படியானது?
பதில் - அவரது தந்தை அரச ஊழியர். அவர் இப்போது உயிருடன் இல்லை. விக்னேஸ்வரனுக்கு இரு தங்கைகள் இருக்கின்றனர். ஒருவர் அகால மரணமடைந்து விட்டார். அடுத்த தங்கை இப்போது யாழ்ப்பாணத்தில் வசிக்கின்றார்.
கேள்வி - அவரது வீட்டுக்கு சென்று வரும் போது அவரது தங்கைகள் மீது உங்களது பார்வை படவில்லையா?
பதில் - பார்வை பட்டது. ஆனால் அது நீடிக்கவில்லை.இக்காலகட்டத்தில் தான் சட்டக் கல்லூரியில் எனது மனைவியைச் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. நாங்கள் மூவரும் நெருங்கிய நண்பர்களானோம். அதன் பின்னர் நான் திருமணம் செய்து கொண்டேன். விஸ்வாவும் திருமணம் செய்து கொண்டார்.தனது இனத்தைச் சேர்ந்த உறவு முறையான பெண்ணைத் தான் அவர் மணமுடித்தார். திருமணத்தின் பின்னர் விஸ்வாவின் மனைவியும் எனது மனைவியும் நெருங்கிய தோழிகளாகினர். இந்தப் பின்னணியில் தான் எமக்கு குழந்தைகள் பிறந்தன. நாங்கள் தொடர்ந்தும் உறவினர்களைப் போல் பழகி வந்தோம்.
கேள்வி - உங்கள் நட்பு உங்கள் இருவரது பிள்ளைகளால் உறவாக மாறியதா?
பதில் - இவருக்கும் குழந்தைகள் பிறந்தன. எனக்கும் குழந்தைகள் பிறந்தன. அவர்களும் ஒருவருக்கொருவர் மிகவும் நட்பாகப் பழகி வந்தனர். எமது இரு குடும்பத்துக்கிடையில் இருந்த நெருங்கிய தொடர்பு காரணமாக அவரது குழந்தைகள் எமது இல்லத்துக்கு வருவார்கள். நாங்கள் அவர்களது இல்லத்தக்குச் செல்வோம்.
கேள்வி - உங்களது புதல்வி அவரது புதல்வருடன் காதல் தொடர்பு கொண்டிருந்ததை எப்படி அறிந்து கொண்டீர்கள்?
பதில் - ஒருநாள் எனது புதல்வி என்னிடம் வந்து அப்பா நான் தமிழ் படிக்க வேண்டும் என்றார். அது நல்ல விடயம் எனக்கூறி அவருக்கு தமிழ் கற்பதற்கு ஆலோசனையையும் வழிகாட்டலையும் வழங்கினேன். நான் எனது புதல்வியின் தமிழ் கற்கும் முயற்சியை மனதிற்குள் பாராட்டிக் கொண்டேன். நான் பின்னர் ஏன் எனது புதல்வி தமிழ் கற்றுக் கொள்வதில் ஆர்வம் காட்டுகின்றார் என்று சிந்திக்க ஆரம்பித்தேன்.
சிறிது நாட்கள் கடந்த பின்னர் விஸ்வாவின் புதல்வனுக்கும் எனது புதல்விக்குமிடையில் சாதாரண நட்புக்கும் மேலதிகமாக ஏதோவொரு தொடர்பு இருக்க வேண்டுமென நினைத்தேன். இந்த இருவரும் ஒருவருக்கொருவர் விரும்புகின்றனர் என்று எனது மனைவி என்னிடம் தெரிவித்தார். இதைக்கேட்டு நான் மிகவும் மகிழ்ச்சியடைந்தேன்.
எமது இரு குடும்பங்களுக்கிடையே இருந்த நெருங்கிய தொடர்பு காரணமாக இது போன்ற நிகழ்வு இடம்பெறுவது சாதாரணமான விடயமல்லவா? அத்துடன் அவர்கள் இருவரும் திருமணம் செய்து கொள்ளத் தீர்மானித்திருந்தனர். நான் இந்தத் திருமணம் குறித்து உண்மையிலேயே மகிழ்ச்சியடைந்து அவர்களுக்குத் திருமணம் செய்து வைத்தேன்.
கேள்வி - நீங்கள் முற்போக்குச் சிந்தனை கொண்டவராதலால் நீங்கள் இதற்கு சம்மதித்தீர்கள். உங்கள் மனைவி மற்றும் உறவினர்கள் இந்தத் திருமணத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லையா?
பதில் - எனது மனைவி என்னைப் போன்றே சிந்தனையுடையவர்தான் எங்களது உறவினர்கள் எங்களைப் போலல்ல. அவர்கள் இனம், குலம் போன்றவற்றை ஆராய்ந்தனர். இருந்தும் இறுதியில் அவர்களும் சம்மதம் தெரிவித்தனர்.
கேள்வி - எப்படி திருமணம் நடந்தது? சிங்கள முறைப்படியா? இல்லை தமிழ் முறைப்படியா?
பதில் - திருமணம் இரண்டு முறைப்படியும் நடந்தது. முதலாவதாக எமது சிங்கள பாரம்பரியத்தின்படி நடந்தது. இரண்டாவதாக இந்து பாரம்பரியத்தின்படியும் நடைபெற்றது. அதாவது இந்துக் கோவிலிலும் ஹோட்டலிலும் திருமணம் நடந்தது. அதன் பின்னர் அவர்களுக்கு குழந்தைகளும் பிறந்தனர். இப்போது எனது பேத்திக்கு மூன்று வயது. அவருக்கு மூன்று மொழிகளும் தெரியும். தமிழ், சிங்களம், ஆங்கிலம் மூன்று மொழிகளிலும் நன்றாகப் பேசுவார்.
நான் அமைச்சர் பொறுப்பை ஏற்ற தினத்தன்று எனது பேத்தியையும் எனது அமைச்சிற்கு அழைத்து வந்திருந்தேன். இன ஒற்றுமைக்கு ஓர் அடையாளமாகவே எனது பேத்தியை அழைத்துச் சென்றிருந்தேன். இந்தச் சம்பவத்தின் மூலம் நானும் விக்னேஸ்வரனும் மேலும் நெருக்கமானோம். துரதிஷ்டவசமாக விக்னேஸ்வரனின் மனைவி திருமணத்திற்கு முன்னரே மறைந்து விட்டார்.
கேள்வி - சட்டக் கல்லூரியில் பயின்ற போது விக்னேஸ்வரனுக்கு வடக்கு பிரச்சினை குறித்து எவ்விதமான சிந்தனை இருந்தது?
பதில் - எம் இருவருக்கும் மிகவும் நெருங்கிய கருத்துகளே இருந்தன. நான் அப்போது சட்டக் கல்லூரி மாணவ தலைவர். ஒரு வருட காலத்துக்கு இந்தப் பதவி நீடிக்கும். அதன் பின்னர் இந்தச் சங்கத்தின் தலைவர் ஒரு தமிழரொருவராக இருக்க வேண்டுமென நினைத்தேன். ஏனென்றால் இப்பதவிக்கு அதிகமாக சிங்களவர்களே தெரிவு செய்யப்பட்டிருந்தனர்.
இனப் பிரச்சினை இல்லாதிருக்கும் வகையில் தமிழர் ஒருவரை முன்நிறுத்த வேண்டும் என நினைத்து நான் விக்னேஸ்வரனின் பெயரை முன்மொழிந்து தேர்தலை நடத்தினோம். தேர்தலுக்கு மறுதரப்பிலும் தமிழர் ஒருவரின் பெயரே பிரேரிக்கப்பட்டிருந்தது. அதனால் தேர்தல் சுமுகமாக நடைபெற்று விக்னேஸ்வரன் வெற்றி பெற்றார்.
முதலமைச்சர் பதவிக்காக அவருக்கு அழைப்பு விடுக்கப்பட்ட போது நான் விஸ்வாவிடம் முதலமைச்சர் பதவிக்கு போட்டியிடப் போவதாக தெரிவிக்கப்படுகின்றதே உண்மையா? எனக் கேட்டேன். அப்போது அவர் ஆம், ஆம் ஒருமுறை நான் விரும்பாமலே என்னைத் தேர்தலுக்கு நீ இழுத்துச் சென்றாய். இப்போது மீண்டும் நான் விரும்பாத தேர்தலொன்றுக்கு என்னை இழுத்துச் செல்கின்றார்கள் என்றார்.
நான் என்ன செய்யட்டும் என்றார். தேர்தலுக்குப் பின்னர் நான் அவருடன் தொடர்பு கொண்டு நீர் எப்போதும் விருப்பமில்லாத விடயங்களில் வெற்றி பெறும் மனிதர் என்று கூறினேன்.
Post a Comment