Header Ads



விக்னேஸ்வரனும், சம்பந்தனும் ஜனாதிபதி விரித்த வலையில் வீழ்ந்து விட்டனரா..?

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் விருப்பத்தை ஏற்று வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கு ஜனாதிபதி பதவிப் பிரமாணம் செய்து வைத்தமையானது இந்த அரசாங்கம் அண்மைக் காலத்தில் மேற்கொண்ட மிகச் சிறந்த அரசியல் நடவடிக்கைகளில் ஒன்றாகவே தேசிய ஐக்கிய முன்னணி கருதுகின்றது என்று தெரிவித்துள்ளார் அதன் தலைவரும் மத்திய மாகாண சபை உறுப்பினருமான அஸாத் சாலி. 

அவர் இது சம்பந்தமாக வெளியிட்டுள்ள அறிக்கையில் தொடர்ந்து தெரிவித்துள்ளதாவது.

மத்திய மாகாண சபையின் முதலாவது அமர்வு இன்று (9.10.13) இடம்பெறுவதாலும்,  அதில் நான் கட்டாயம் கலந்து கொள்ள வேண்டி இருப்பதாலும் நான் வழமையாக புதன்கிழமைகளில் பங்கேற்கும் செய்தியாளர் மாநாட்டில் இன்று கலந்து கொள்ள முடியவில்லை. இதனால்; அதிகாரத்தைப் பகிர்ந்து நாட்டை ஐக்கியப்படுத்தும் இயக்கத்தின் சார்பாக நடத்தப்படும் இன்றைய செய்தியாளர் மாநாட்டில் நான் பேச எண்ணியிருந்த விடயங்களை இந்த அறிக்கை வாயிலாக சமர்ப்பிக்கின்றேன்.

விக்னேஸ்வரனுக்கு ஜனாதிபதி சத்தியப்பிரமாணம் செய்து வைத்துள்ளமையானது அரசாங்கத்தை இனவாதத்தின் பால் தூண்டிவரும் சக்திகளுக்கு கிடைத்துள்ள பாரிய தோல்வியாகும். இது கறைபடிந்து போன அவர்களின் முகங்களில் மேலும் கரியை பூசியுள்ளது. விக்னேஸ்வரனும் சம்பந்தனும் ஜனாதிபதி விரித்த வலையில் வீழ்ந்து விட்டனர் என்று சில ஊடகங்கள் செய்திகள் வாயிலாகவும் கேலிச் சித்திரங்கள் மூலமாகவும் சித்தரிக்க முனைகின்றன. இது முற்றிலும் தவறானதோர் பார்வை. இதை நாம் வன்மையாகக் கண்டிக்கின்றோம். யாரும் யாருடைய வலையிலும் வீழ்ந்துவிட்டதாக இதற்கு அர்த்தம் கொள்ள முடியாது. இது அரசியல் புரிந்துணர்வையும் தேசிய நல் இணக்கத்தையும் நோக்கிய மகிழ்ச்சிக்குரிய, மிகச் சரியான நகர்வாகும். இதேபோல் அரசும் வட மாகாண நிர்வாகத்தைக் கைப்பற்றியுள்ள தமிழ் தேசியக் கூட்டமைப்பும் புரிந்துணர்வு, விட்டுக் கொடுப்பு என்பனவற்றுடன் வட பகுதி மக்களின் வாழ்வில் சூழ்ந்துள்ள இருள் படிந்த அத்தியாயத்தை துடைத்தெறிய முன்வரவேண்டும்.

ஒரு கட்சிக்குள் ஏற்படுகின்ற ஜனநாயக ரீதியான பிரச்சினைகளை தமக்கு சாதகமாக்கி அரசாங்கம் அதில் குளிர்காய முனைகின்றது. நாட்டின் எந்தப் பகுதியில் கலவரங்கள் நடந்தாலும் அதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டியது பொலிஸாரின் பொறுப்பு. ஆனால் பொலிஸார் இந்த விடயத்தில் தொடர்ந்தும் வேடிக்கை பார்க்கும் பிரிவினராகவே இருந்து வருகின்றனர்.அமைச்சர்களின் மெய்ப் பாதுகாவலர்களும், இணைப்புச் செயலாளர்களும் காணாமல் போகும் அளவுக்கு நாட்டில் சட்டமும் ஒழுங்கும் சீhகுலைந்துள்ளது. இந்த நிலைமை நாட்டுக்கு நல்லதல்ல. பொலிஸ் திணைக்;களத்தை தனி ஒரு அமைச்சின் கீழ் கொண்டுவந்து அதை யாரிடம் ஒப்படைப்பதாலும் எந்தப் பிரயோசனமும் இல்லை என்ற ஒரு நிலையே தற்போது காணப்படுகின்றது. இதனால் தான் சுதந்திரமான பொலிஸ் ஆணைக்குழு அவசியம் என்பதையும் அதை ஸ்தாபிக்கக் கூடிய அரசியல் யாப்பின் 17வது திருத்தம் முழுமையாக அமுல் செய்யப்பட வேண்டும் என்பதையும் நாம் தொடர்ந்தும் வலியுறுத்தி வருகின்றோம்.

நாளை மேலும் 21 பாராளுமன்ற உறுப்பினர்கள் பிரதி அமைச்சர்களாக நியமிக்கப்படவுள்ளதாக இன்றைய பத்திரிகைகளில் செய்திகள் வெளியாகியுள்ளன. அப்படி என்றால் அரச தரப்பில் சாதாரண பாராளுமன்ற உறுப்பினர்கள் என்று எவருமே இருக்க மாட்டார்கள் போல் தெரிகின்றது. எல்லோருமே அமைச்சர்களும் பிரதி அமைச்சர்களும் தான். ஏற்கனவே வாழ்க்கைச் செலவு அதிகரிப்பை தாங்க முடியாமல் தவித்துக் கொண்டிருக்கும் மக்கள் தான் இனிமேல் இந்தச் சுமையையும் தாங்க வேண்டியிருக்கும். நாட்டின் பொருளாதாரத்தில் சிக்கன போக்கை கடைபிடித்து மக்களின் சுமைகளைக் குறைக்க நடவடிக்கை எடுப்பதற்கு பதிலாக அரசாங்கம் மக்களின் சுமைகளை மேலும் அதிகரிக்கும் நடவடிக்கைகளில் தொடர்ந்தும் ஈடுபடுவது கண்டிக்கத்தக்கதாகும்.

No comments

Powered by Blogger.