Header Ads



பாராளுமன்ற நடவடிக்கைகள் இன்றுமுதல் நேரடி ஒளிபரப்பு


பாராளுமன்ற சபை நடவடிக்கைகள் இன்று முதல் நவீன டிஜிட்டல் தொழில்நுட்ப உதவியுடன் 'ஜயந்திபுர' சந்தியில் அமைக்கப்பட்டுள்ள அகண்ட திரையினூடாக நேரடி ஒளிபரப்புச் செய்யப்படவுள்ளது. இன்று பிற்பகல் 4.00 மணிக்கு இந்த நேரடி ஒளிபரப்பு உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்படவுள்ளது.

தொலைக்காட்சியில் நேரடியாக சபை நடவடிக்கைகளை ஒளிபரப்புவது தொடர்பில் பின்னர் ஆராயப்படுமென சபாநாயகர் சமல் ராஜபக்ஷ தெரிவித்தார். 

இன்று பிற்பகல் இடம்பெறும் ஆரம்ப நிகழ்வில் சபை நடவடிக்கைகள் பாதிக்கப் படாத வகையில் ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் இந்நிகழ்வில் கலந்துகொள்ள முடியும் எனத் தெரிவித்த சபாநாயகர், அதற்கான அழைப்பினையும் விடுத்தார். இந்த நிகழ்வில் கலந்துகொள்ளும் பாராளுமன்ற உறுப்பினர்கள் பாராளுமன்றத்தின் கெளரவத்தைப் பாதுகாக்கும் வகையில் செயற்படுவது முக்கியம் எனவும் கேட்டுக்கொண்டார். 

இந்த நேரடி ஒளிபரப்பு நடவடிக்கைகள் தமது கட்டுப்பாட்டிலேயே இடம்பெறும் என குறிப்பிட்ட அவர், இதன் பிரதிபலன்களுக்கமைய தொலைக்காட்சிகளில் சபை நடவடிக்கைகளை நேரடியாக ஒளிபரப்புச் செய்வது தொடர்பில் பின்னர் கவனத்திற் கொள்ளப்படும் எனவும் சபாநாயகர் தெரிவித்தார். பாராளுமன்ற அமர்வுகளை தொலைக்காட்சியில் நேரடி ஒளிபரப்பு செய்வது தொடர்பில் எதிர்க்கட்சி எம்.பி. ஜோசப் மைக்கல் பெரேராவும் சபாநாயகரின் கவனத்திற்குக் கொண்டு வந்தார். இதற்குப் பதிலளித்த சபாநாயகர், பின்னர் அதுபற்றி கவனத்திற்கொள்ளப்படும். பாராளுமன்ற சபை நடவடிக்கைகளை நேரடி ஒளிபரப்புச் செய்வதன் முதற்கட்ட நடவடிக்கையாகவே இன்று ஜயந்திபுரவில் அகண்ட திரையில் ஒளிபரப்பப்படவுள்ள தாகவும் அவர் தெரிவித்தார். 

No comments

Powered by Blogger.