சிறுபான்மை + சிறிய கட்சிகளின் பிரதிநிதிகளுக்கு பிரதி அமைச்சுப் பதவிகள் வழங்கப்படும் - பஷில்
மூன்று கட்டங்களாக மேலும் சில பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு பிரதியமைச்சுப் பதவிகளை வழங்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இரண்டாம் அல்லது மூன்றாம் கட்டத்தில் மூன்று சிறுபான்மை கட்சிகளின் பிரதிநிதிகளுக்கு பிரதியமைச்சுப் பதவிகள் கிடைக்கும் என்று பொருளாதார அபிவிருத்தி அமைச்சரும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தேசிய அமைப்பாளருமான பஷில் ராஜபக்ஷ தெரிவித்தார்.
பாராளுமன்ற உறுப்பினர்களான பிரபா கணேசன் பி. திகாம்பரம் உள்ளிட்டவர்களுக்கு பிரதியமைச்சுப் பதவிகள் வழங்கப்படுமா? என்பது குறித்து கேட்டபோதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் இந்த விடயம் குறித்து மேலும் குறிப்பிடுகையில்
முக்கிய அமைச்சுக்களுக்கு பிரதியமைச்சர்கள் இன்மையினால் அவற்றுக்கு பிரதியமைச்சர்களை நியமிக்கும் செயற்பாடுகளை அரசாங்கம் முன்னெடுத்துவருகின்றது. அந்த வகையில் நான்கு வகைப்படுத்தல்களின் கீழ் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு அமைச்சுப் பதவிகளை வழங்க நடவடிக்கை எடுத்துள்ளோம்.
குறிப்பாக முன்னர் மாகாண சபைகளில் அமைச்சுப் பதவிகளை வகித்தோர், கடந்த 2010 ஆம் ஆண்டு பாராளுமன்றத் தேர்தலில் கூடிய விருப்பு வாக்குகளை பெற்றோர், இரண்டாவது அதி கூடிய விருப்பு வாக்குகளை பெற்றோர் மற்றும் சிறுபான்மை கட்சிகளின் பிரதிநிதிகள் போன்ற அடிப்படையிலேயே வகைப்படுத்தல்கள் அமைந்துள்ளன.
முதல் கட்டமாக ஒரு வகைப்படுத்தலின் கீழ் பிரதி அமைச்சுப் பதவிகள் வழங்கப்பட்டுள்ளன. அதில் முன்னர் மாகாண சபைகளில் அமைச்சுப் பதவிகளை வகித்தோர் மற்றும் விருப்பு வாக்குகள் போன்ற விடயங்கள் கவனத்திற்கொள்ளப்பட்டன.
அடுத்ததாக இரண்டாவது கட்டத்திலும் சில பிரதியமைச்சுப் பதவிகள் வழங்கப்படவுள்ளன. இந்த இரண்டாவது அல்லது மூன்றாவது கட்ட பிரதியமைச்சுப் பதவி வழங்கும் செயற்பாட்டின் போது நிச்சயமாக சிறுபான்மை கட்சிகளின் பிரதிநிதிகளுக்கும் பதவிகள் வழங்கப்படும். இது கட்டாயமாக நடைபெறும்.
குறிப்பாக சிறுபான்மை மற்றும் சிறிய கட்சிகளின் பிரதிநிதிகளுக்கு இவ்வாறு அமைச்சுப் பதவிகள் வழங்கப்படும் என்பதனை தெரிவிக்கின்றேன் என்றார். vi
Post a Comment