வட மாகாணசபை தொடக்க அமர்வு, நிகழ்வுகளில் பங்கேற்பேன் - ஆளுனர் சந்திரசிறி
(Pp)வடக்கு மாகாணசபையின் தொடக்க அமர்வு தொடர்பான எல்லா, நிகழ்வுகளிலும் தான் பங்கேற்பேன் என்று வடக்கு மாகாண ஆளுனர் மேஜர் ஜெனரல் ஜி.ஏ.சந்திரசிறி தெரிவித்துள்ளார்.
வடக்கு மாகாணசபையின் புதிய கட்டட திறப்பு மற்றும், மாகாணசபையின் தொடக்க கூட்டம் ஆகியன தொடர்பான சமய நிகழ்வுகள் உள்ளிட்ட எல்லா நிகழ்வுகளிலும் தான் பங்கேற்பேன் என்று அவர் உறுதிப்படுத்தியுள்ளார்.
வடக்கு மாகாணசபையின் முதல்வர் மற்றும் அமைச்சர்கள், சபை உறுப்பினர்கள், வடக்கு மாகாண ஆளுனர் முன்பாக பதவியேற்கவில்லை.
இந்தநிலையில், வரும் 25ம் நாள் வடக்கு மாகாணசபையின் முதலாவது கூட்டம் நடக்கவுள்ளது.
இதில் ஆளுனர் சந்திரசிறி பங்கேற்பாரா என்ற கேள்வி இருந்து வந்த நிலையிலேயே, தாம் எல்லா நிகழ்வுகளிலும் பங்கேற்கப் போவதாக அறிவித்துள்ளார்.
மாகாணசபைக் கூட்டத்தொடரை, மாகாண ஆளுனரே தொடக்கி வைக்க வேண்டும் என்பது நடைமுறையில் உள்ள சம்பிரதாயமாகும்.
அதேவேளை, முதலாவது அமர்வில், சபை முதல்வர் மற்றும், பிரதி சபை முதல்வர் நியமனங்கள் இடம்பெறவுள்ளன.
சபை முதல்வராக, யாழ்.மாவட்டத்தில் இருந்து தெரிவு செய்யப்பட்ட சி.வி.கே.சிவஞானத்தையும், பிரதி சபை முதல்வராக முல்லைத்தீவு மாவட்டத்தில் இருந்து தெரிவு செய்யப்பட்ட அன்ரனி ஜெகநாதனையும் நியமிக்க தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முடிவு செய்துள்ளது.
அதேவேளை, எதிர்க்கட்சித் தலைவராக, ஈபிடிபியை சேர்ந்த கந்தசாமி கமலேந்திரனை நியமித்துள்ளதாக, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் செயலரான அமைச்சர் சுசில் பிறேம் ஜெயந்த தெரிவித்துள்ளார்.
Post a Comment