விக்கினேஸ்வரன் கதாநாயகனாக நடிக்கும் திரைப்படத்தின் இறுதிக் காட்சிகள்..!
அமெரிக்கா திரைக்கதை எழுத இந்தியா இயக்குநராக செயற்பட விக்கினேஸ்வரன் கதாநாயகனாக நடிக்கும் திரைப்படத்தின் இறுதிக் காட்சிகள் அடுத்த வருடம் மார்ச் மாதம் எடுக்கப்படும் போது தான் இலங்கை அரசாங்கத்திற்கு ‘‘தலைசுற்றும்’’ என தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின் பொதுச் செயலாளர் வசந்த பண்டார தெரிவித்தார்
இது தொடர்பாக டாக்டர் வசந்த பண்டார மேலும் தெரிவிக்கையில்,
வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் நாகரீகமான முறையில் மிகவும் முன்னேற்றகரமான பாதையில் தனது அரசியல் காய் நகர்த்தல்களை முன்னெடுக்கின்றார். ஜனாதிபதி முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்து முதலமைச்சர் பதவி மற்றும் அமைச்சுப் பதவிகளை ஏற்பது, அரசுடன் நட்புறவுடன் செயற்பட தயாரென தெரிவிப்பது,
மாகாண சபை அதிகாரங்கள் ஊடாக மக்களுக்கு சேவைகளை முன்னெடுப்பதே தனது நோக்கம் என்பதை வெளிப்படுத்துவதிலும் கூட்டமைப்புக்குள் உள்ள கடும் போக்காளர்களின் போக்கை ஏற்றுக்கொள்வதில்லையென்ற தனது போக்கினை வெகுவாக பிரபல்யப்படுத்தி வருகிறார். இது அமெரிக்கா எழுதிய கதை. இந்தியா அதனை இயக்குகின்றது. கதாநாயகனாக சிறப்பாக விக்கினேஸ்வரன் நடிக்கின்றார்.
உணர்வுகளை தூண்டி விட்டு சிறுபிள்ளைத்தனமான அரசியலை விக்கினேஸ்வரன் மேற்கொள்ளவில்லை. மாறாக நாகரிகமான முன்னேற்றகரமான அரசியல் பாதையில் பயணிக்கின்றார். இத்திரைப்படத்திற்கு அரசாங்கம் ஏமாந்து விட்டது. கூட்டமைப்பு இரண்டாக பிரிந்து விட்டது என கனவு காண்கிறது. ஆனால் அமெரிக்காவினதும் இந்தியாவினதும் திரைப்படத்தின் இறுதிக் காட்சிகள் அடுத்த வருடம் மார்ச் மாதம் படமாக்கப்படும்.
அக்காட்சிகளில் அரசாங்கத்துடன் நட்புறவை பேணினோம். மத்திய அரசாங்கத்தை மதித்தோம். ஆனால் வட மாகாண சபைக்கு அரசாங்கம் அதிகாரங்களை வழங்க மறுக்கின்றது என்ற இறுதிக்காட்சியை விக்கினேஸ்வரன் ஐ.நா.வில் நடிப்பார்.
அப்போது தான் அரசாங்கத்தின் தலை சுற்றப் போகின்றது. காணி, பொலிஸ் அதிகாரங்களை இவ் இறுதிக் காட்சி ஊடாக விக்கினேஸ்வரன் பெற்றுக் கொள்வார். அதன் பின்னர் தனித் தமிழீழத்துக்கான அரசியல் போராட்டம் ஆரம்பமாகும் என்றும் டாக்டர் வசந்த பண்டார தெரிவித்தார்.s
Post a Comment