உங்கள் பிரார்த்தனையில் இந்தச் சிறுவனையும் இணைத்துக் கொள்ளுங்கள்..!
(இக்பால் அலி)
ஏறாவூர் பிச்சி நகர் கிராமத்தைச் சேர்ந்த நான்கு வயதுடைய ரிப்தி அஹமட் செவிபுலற்ற காரணத்தினால் பேச முடியாத சிறுபாலகனின் சத்திரச் சிகிச்சைக்காக பறகஹதெனிய ஜமாஅத் அன்சாரிஸ் சுன்னத்தில் முஹம்மதிய்யாவின் ஏற்பாட்டில் ரூபா 27 இலட்சம் காசோலை வழங்கி வைக்கும் நிகழ்வு 03-10-2013 ஏறாவூரில் அமைந்துள்ள தவ்ஹீத் ஜும் ஆப் பள்ளிவாசலில் நடைபெற்றது. ஜமாஅத் அன்சாரிஸ் சுன்னத்தில் முஹம்மதிய்யாவின் பொதுத் தலைவர் என். பீ. எம். அபூபக்கர் சித்தீக் மதனி, சிறுபாலகன் ரிப்தி அஹமட் கையில் காசோலையை வழங்கி வைப்பதையும் அருகில் சிறுவனின் தந்தை முஹமட் லெப்பை புஹாரி முஹமட் மற்றும் ஜமாஅத் அன்சாரிஸ் சுன்னத்தில் முஹம்மதிய்யாவின் பொதுச் செயலாளர் ஏ. எல் கலிலுர்ரஹ்மான் உள்ளிட் ஊர் முக்கிய பிரமுகர்கள் நிற்பதைப் படங்களில் காணலாம்.
சிறுபாலகன் ரிப்தி அஹமட் தந்தையின் 40 வயதுடைய புஹாரி முஹமட் கருத்துத் தெரிவிக்கையில்,
நான் இறைச்சிக் கடையில் சாதாரண தொழில் புரிபவன், என்னுடைய மனைவியின் பெயர் நஷPரா. வயது 33. தற்போது ஒரு கைக்குழந்தை உள்ளது. என்னுடைய மூத்த மகன்தான் ரிப்தி. மகனுக்கு தற்போது வயது நான்கு. மழலைப் பருவத்தில் மிக சுட்டித் தனமாக இருந்த போதிலும் கூட பேச முடியாமல் தவித்துக் கொண்டிருந்ததை நானும் என்னுடைய மனைவியும் அன்றாடம் மகன் முகத்தைப் பார்த்து உள்ளதால் ஜீரணித்துக் கொள்ள முடியாமல் நாங்கள் அழுத வண்ணம் இருப்போம். இந்தச் சோகம் எங்கள் குடும்பவத்தவர்கள் மத்தியிலும் தாக்கம் செலுத்தின. இந்த நோயைக் கண்டு பிடித்து குணப்படுத்த வேண்டும் என்ற நோக்கில் கொழும்பு ஏறாவூர் என அடிக்கடி சென்று வந்து பெரும் பொருளாதாரத்தை இதற்காக இழந்து ஒரு விரக்தி நிலையில் இருந்தோம். எனினும் என்னுடைய மனது கேட்வில்லை. இது குறித்து என்னை அறிந்த ஊடக நண்பர்களிடம் முறையிட்டேன். அவர்கள் அச்சு ஊடகம் இணையத்தள ஊடகம் என விலாவாரியான விளம்பரத்தை பெற்றுத் தந்தனர். அதன் பிற்பாடு ஊர் முக்கிய பிரமுகர்கள் ஒன்று சேர்ந்து என்னுடைய பிள்ளையின் சிகிச்சை நலன் குறித்து ஒரு குழுவொன்றை அமைத்து பாரிய முயற்சி ஒன்றில் ஈடுபட்டார்கள்.
அந்தவகையில் அவர்களுடைய ஏற்பாட்டில் கொழும்பு லங்கா வைத்தியசாலையில் இந்தியாவைச் சேர்ந்த வைத்திய நிபுணர் ஜா இத்துறையில் சிறப்பு தேர்ச்சி மிக்கவர். பேச வைக்க முடியும் பெருந்தொகையான பணம் தேவை எனக் குறிப்பிட்டார். இதற்காக பணம் சேகரிக்கும் முயற்சியில் இறங்கவில்லை. ஏனென்றால் அவ்வாறு ஊர் ஊராகச் சென்று பணம் சேகரிக்க எனக்கு விருப்பமில்லை. அல்லாஹ்வின் உதவியால் ஊரின் முக்கிய பிரமுகர்கள என்னுடைய மகனுக்காக எல்லோரும் ஒன்று பட்டார்கள். அந்தச் சந்தர்ப்பத்தில் ஊரிலுள்ளவர்கள் சொல்வார்கள் பறகஹதெனியவிலுள்ள ஜமாத் அன்சாரிஸ் சுன்னத்தில் முஹம்மதிய்யா நிறுவனத்திடம் போய் கதையுங்கள் அவர்கள் ஏதாவது செய்வார்கள் என்று.
அல்லாஹ் இவர்களைச் சந்திக்க ஊரிலுள்ள சகோதரர்கள் ஏற்பாடுகள் செய்து தந்தார்கள். அதற்கேற்ப அவர்களினால் ஏறாவூரில் மிகப் பிரமாண்டமான ஜும்ஆப் பள்ளிவாசல் திறப்பு விழா நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அந்த சந்தர்ப்பத்தில் கொழும்பிலிருந்து ஹெலிக் கொப்டரில் ஜமாஅத் அன்சாரிஸ் சுன்னத்தில் முஹம்மதிய்யாவின் பொதுத் தலைவர் அபூபக்கர் சித்தீக் மதனி மற்றும் குவைட் நாட்டு அரபிகள் எங்கள் ஊருக்கு வருகை தந்திருந்தார்கள். இவர்கள் எங்கள் ஊரிலுள்ள அத்துப்பெட்டிக் கிராமத்தைப் பார்வையிட்டுக் கொண்டிருக்கும் போது என்னை அங்கு வந்து நேரடியாகச் சந்திக்குமாறு ஏற்கெனவே கூறியிருந்தனர். அதன் பிரகாரம் அவர்களை அவ்விடத்தில் சென்று சந்தித்தேன். என்னுடைய பிரச்சினைகளை முழுமையாக அங்கு வருகை தந்து குவைட் நாட்டு அரபியிடம் எடுத்துக் கூறினேன். அவர்கள் கேட்டது ஒரே ஒரு கேள்வி. அதாவது அதற்கு நாங்கள் உதவி செய்தால் நீங்கள் என்ன செய்வீர்கள் எனக் கேட்டார்கள். அதற்கு என் மகனை புனித இஸ்லாத்தினுடைய மார்க்கப் பணிக்காக உழைப்பதற்கு ஆளாக்குவேன் என்று கூறினேன்.
மறுகணம் உடனே என்னை கொழும்பு வரும்படி அழைப்பு விடுத்தார்கள். அவர்கள் கூறியபடி மறுநாள் நான் மகனுடன் கொழும்பு சென்றோம். கருணையுள்ளம் கொண்ட நிறுவனத்தின் தலைவர் அபூபக்கர் சித்தீக் மதனி அவர்கள் லங்கா வைத்தியசாலைக்குச் சென்று என் மகனுடைய முழு சிகிச்சை தொடர்பாக சகல ஆவணங்களையும் பெற்று அரபியிடம் ஒப்படைத்தார்.
ஊர்ப் பிரமுகர்கள் ஒன்று சேர்ந்து சுமார் 15 இலட்சம் ரூபா நிதி சேகரித்து வைத்திருந்தார்கள். மாஷஅல்லாஹ் 27 இலட்சம் கிடைத்துள்ளது. இவ்வளவு பெரியதொரு தொகைப் பணம் கிடைக்கும் என்று நான் எதிர்பார்க்கவில்லை. சிகிச்சைக்காக இந்த நிதிகிடைக்கப் பெற்றமை என்பது மகன் பேசுவான் என்ற நம்பிக்கை எனக்குள் எழுந்து விட்டது. இவ்வேளையில் என் பிள்ளையின் சிகிச்சைக்கு உதவியவர்களுக்காக நான் பிரார்த்தனை செய்கின்றேன். என் மகன் பேசுவதற்கு நீங்களும் பிரார்த்தனை செய்யுங்கள் என்று ரிப்தியின் தந்தை மேலும் இவ்வாறு குறிப்பிட்டார்.
Post a Comment