முஸ்லிம்களின் மார்க்க விடயத்தில், பொதுபலசேனா தலையிடுவதை ஏற்றுக்கொள்ள முடியாது
நாட்டின் இனவாத மழை ஓய்ந்துள்ள இவ்வேளையில் மீண்டுமொரு முறை இனவாத தீயினை மூட்டி விடுவதற்கு சில பெளத்த அமைப்பு முயற்சிப்பதாக தேசிய மொழிகள் மற்றும் சமூக ஒருமைப்பாடு அமைச்சர் வாசுதேவ நாணயக்கார குற்றம் சுமத்தியுள்ளார்.
பொதுபலசேனா போன்ற பெளத்த இனவாத அமைப்புக்கள் முஸ்லிம்களின் மார்க்க விடயத்தில் அதிகமாக தலையிட்டு மீண்டுமொரு முறை யுத்த சூழலை ஏற்படுத்த முயல்வதை எங்களால் ஒரு போதும் ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் அவர் தெரிவித்தார்.
எம்.வி. ரஸ்மின் எழுதிய போர்க்கால "சிங்கள இலக்கியங்கள் ஒரு பன்மைத்துவ நோக்கு என்ற நூல் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,
நாட்டின் முப்பது வருட கால யுத்தம் நிறைவடைந்து இனவாத மழை பெய்து ஓய்ந்திருக்கும் இவ்வேளையில் பொதுபலசேனா, ராவணா பலய போன்ற பெளத்த இனவாத சக்திகள் நாட்டில் மீண்டுமொரு முறை இனவாத தீயினை மூட்டி விடுவதற்கு முயற்சிக்கின்றன.
இவ்வாறு மீண்டுமொரு முறை இந்நாட்டில் யுத்த சூழலை உருவாக்க பெளத்த அமைப்பு முயற்சிக்கின்றமையை எங்களால் ஒரு போதும் ஏற்றுக்கொள்ள முடியாது.
இலங்கையை சிறந்த ஜனநாயக நாடாக கட்டியெழுப்புவதாயின் அனைத்து இனத்தவர்களுக்கும் சமவுரிமை மற்றும் சம அந்தஸ்து வழங்கப்பட்டு ஒருமைப்பாட்டுடன் கூடிய ஜனநாயகத்தை கட்டியெழுப்ப வேண்டும்.
தற்போது நமது நாட்டில் சிறுபான்மையினர் பல்வேறு இன்னல்களுக்கு முகம் கொடுத்து வருகின்ற இவ்வேளை மேற்படி நாட்டின் சூழ்நிலை காணப்பட்டால் இலங்கையை கட்டியெழுப்ப முடியாத சூழ்நிலை உருவாகும்.
தமிழர் முஸ்லிம்கள் எப்படிப்பட்ட பண்பைக் கொண்டவர்கள் என்பதை அவர்களுடைய இலக்கியங்கள் மூலமாக சிங்களவர்கள் அறிந்து கொள்ள வேண்டும். இல்லையென்றால் இந்நாடு இன ரீதியாக பிளவுபடுவதற்கு வாய்ப்புள்ளது. இவையனைத்தையும் புரிந்துணர்வுடன் தீர்த்து ஒருமைப்பாட்டுடன் கூடிய ஜனநாயக நாடாக இலங்கையை கட்டியெழுப்ப அனைவரும் முன்வர வேண்டும்.
அதற்கான எடுத்து காட்டே ரஸ்மின் எழுதிய போர்க்கால சிங்கள இலக்கியங்கள் என்ற நூலாகும். ரஸ்மினின் நூலை சிங்களத்தில் மொழி பெயர்த்து வெளியிட வேண்டியது காலத்தின் தேவையாகவுள்ளது. எனவே இலங்கையை இனவாத சக்திகளிடமிருந்து மீட்டு சமத்துவம், சமாதானம் நிறைந்த நாடாக இலங்கையை கட்டியெழுப்ப வேண்டும் என்றார்.
Post a Comment