உங்களை பற்றிய விபரமும் அமெரிக்காவிடம் இருக்கலாம்..!
யாஹு, ஜீமெயில், பேஸ்புக், ஹொட் மெயில் போன்ற இணையத்தள சேவைகள் மூலம் லட்சக்கணக்கானவர்களின் தொடர்புகளை அமெரிக்க உளவுப் பிரிவுகளில் ஒன்றான தேசிய பாதுகாப்பு அமைப்பு (என்எஸ்ஏ) சேகரித்து வைத்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
எனினும், இது குறித்து என்எஸ்ஏ அமைப்பு செய்தி தொடர்பாளர் கூறுகையில், “சாதாரண அமெரிக்கர்களின் விவரங்களை சேகரிப்பது எங்கள் நோக்கம் இல்லை. பயங்கரவாதிகளுடன் தொடர்புடையவர்களை மட்டும்தான் நாங்கள் கண்காணிக்கிறோம்.
குறிப்பிட்ட முகவரிகளை மட்டுமே நாங்கள் கையகப்படுத்தி தகவல்களை சேகரித்து வருகின்றோம்” என்று தெரிவித்தார்.
அமெரிக்காவில் பயங்கரவாதிகளின் அச்சுறுத்தல் தொடர்ந்து இருந்துகொண்டு வருகிறது. இதைத் தடுக்க அமெரிக்க அரசின் கீழ் பல உளவுப் பிரிவு அமைப்புகள் இயங்கி வருகின்றன. பயங்கரவாதிகளின் செயல்பாடுகள் மற்றும் ஊடுருவல்களை இந்த அமைப்புகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றன.
இந்நிலையில் என்எஸ்ஏ இணையதள சேவைகள் மூலம் அமெரிக்கர்கள் உள்பட லட்சக்கணக்கா னவர்களின் விவரங்களை சேகரித்து வைத்துள்ளதாக அமெரிக்காவின் வொஷிங்டன் போஸ்ட் செய்தித்தாள் திங்கட்கிழமை செய்தி வெளியிட்டுள்ளது. அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
யாஹு, ஜீமெயில், பேஸ்புக், ஹொட் மெயில் போன்ற இணையத்தள சேவைகள் மூலம் அனுப்பப்படும் தகவல்களை கொண்டு லட்சக்கணக்கான அமெரிக்க மக்களின் விவரங்களை என்எஸ்ஏ சேகரித்து வைத்துள்ளது. இதுபோல் நாள்தோறும் ஆயிரக்கணக்கான மக்களின் தகவல்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன.
அமெரிக்க உளவுப் பிரிவுகளின் செயல்பாடுகளை உலகத்துக்கு வெளிச்சம் போட்டு காட்டிய ஸ்னோடென் வெளியிட்ட ஆவணங்கள் மூலம் இது குறித்து தெரிய வந்துள்ளது. அவ்வாறு சேகரித்த மக்களின் விவரங்களை கொண்டு சர்வதேச அளவில் ஏதேனும் பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்பு உள்ளதா என்பதை என்எஸ்ஏ அமைப்பு ஆய்வு செய்து வருகிறது.
கடந்த ஆண்டு 4,40, 000 க்கும் அதிகமான இ.மெயில் தொடர்புகளை என்எஸ்ஏ சேகரித்துள்ளது. இதுபோன்ற செயற்பாடுகளை பல்வேறு நாடுகளின் ஒத்துழைப்புடன் என்எஸ்ஏ செய்து வருவதாக அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Post a Comment