Header Ads



கல்முனை ஸாஹிரா கல்லூரி பழைய மாணவர் சங்கம் கண்டிக்கின்றது..!

கல்முனை ஸாஹிரா கல்லூரியின் பிரதி அதிபர் ஏ.கபூர் மீது பிரதி கல்வி பணிப்பாளரினால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலை அப்பாடசாலையின் பழைய மாணவர் சங்கம் மிக வண்மையாக கண்டிக்கின்றது.

பிரதி கல்வி பணிப்பாளர் ஏ.எல்.எம்.முக்தாரின் அனாவசிய தலையீடுகளின் காரணாமாக இந்த தாக்குதல் இடம்பெற்றமை ஒரு கவலைக்குரிய விடயமாகும் எனவும் பழைய மாணவர் சங்கம் தெரிவித்துள்ளது

அத்துடன் பாடசாலை நடவடிக்கைகளில் குறித்த பிரதி கல்வி பணிப்பாளரின் தலையீடுகளை முற்றாக தடுத்து நிறுத்துமாறு கல்முனை ஸாஹிரா கல்லூரியின் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் சார்பாக பழைய மாணவர் சங்கம் கல்வி அதிகாரிகளிடம் கோரிக்கை விடுக்கின்றது.  

இது தொடர்பில் கல்முனை ஸாஹிரா கல்லூரியின்; பழைய மாணவர் தாய்ச் சங்கம் மற்றும் கொழும்பு கிளை ஆகியன இணைந்து வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

குறித்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, 

நாடாளாவிய ரீதியில் பிரபல்யம் பெற்ற பாடசாலைகளில் ஒன்றாக கல்முனை ஸாஹிரா கல்லூரி பல தசாப்தங்களாக திகழ்ந்து வருகின்றது. 

இந்த நிலையில் கல்லூரியின் செயற்பாடுகளில் அதிக தலையீடுகளை மேற்கொண்டு கல்லூரியை ஸ்தம்பிதமடைய செய்யும் நடவடிக்கைகளில் பல தடவைகள் பிரதி கல்வி பணிப்பாளர் ஏ.எல்.எம்.முக்தார் ஈடுபட்டுள்ளார்.

இப்பாடசாலையின் முன்னேற்றத்தை விரும்பாதவராகவும் மேலும் பாடசாலைக்கு வருகின்ற அபிவிருத்தி திட்டங்களை முடக்குகின்ற செயற்பாடுகளிலும் தொடர்ச்சியாக ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

அத்துடன் கல்லூரிக்காக பாடுபடும் அதிபர் மற்றும் ஆசிரியர்களுக்கு பலத்த அச்சுறுத்தல்களையும் விடுத்துள்ளார். இந்த நிலையில் சிறப்பாக செயற்படும் பழைய மாணவர் சங்கத்தினையும் கடுமையாக விமர்சித்துள்ளார்.

கல்லூரிக்கு அலுவலக ரீதியாக விஜயம் செய்யும் அதிகாரி ஆசிரியரை ஒருபோதும் தாக்க முடியாது. எனினும் அந்த செயற்பாட்டினை பிரதிக் கல்விப் பணிப்பாளர் முக்தார் மேற்கொண்டுள்ளார். 

இதுவொரு பாராதுரமான செயற்பாடாகும். இந்த செயற்பாட்டினை பழைய மாணவர்கள் என்ற வகையில் வண்மையாக கண்டிப்பதுடன் இதற்கான தகுந்த நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ளுமாறு கல்வி அதிகாரிகளை மிகவும் வினயமாக வேண்டிக்கொள்கிறோம்.

அத்துடன் பாடசாலையில் ஏற்பட்ட பதட்ட நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து உரிய நடவடிக்கையை மேற்கொண்ட கல்முனை பொலிஸாருக்கு நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்' என குறித்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments

Powered by Blogger.