ஹலாலுக்கு எதிராக போராட்டம் முடிந்த பின்னரே, கசினோ சூதாட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிப்போம்
அரசினால் நாடாளுமன்றில் நிறைவேற்றப்படவுள்ள கஸினோ சட்டமூலத்திற்கு கடுமையாக எதிர்ப்புத் தெரிவித்த பெளத்த அமைப்புகள் இம்மாத இறுதிக்குள் ஆர்ப்பாட்டங்களை நடத்தத் தீர்மானித்துள்ளன. சூதாட்ட நிலையமான கஸினோவை சட்டரீதியாக்கும் சட்டவரைபு எதிர்வரும் 24 ஆம் திகதி நாடாளுமன்றுக்கு கொண்டுவரப்படவுள்ளது.
இந்நிலையில், அரசின் இந்த செயற்பாட்டுக்கு கடும் எதிர்ப்புத் தெரிவித்த பொதுபலசேனா அமைப்பு வெகுவிரைவில் இதற்கு எதிரான ஆர்ப்பாட்டம் ஒன்றை நாடளாவிய ரீதியில் நடத்தவுள்ளதாகத் தகவல்கள் தெரியவந்துள்ளன.
நாளை (22 ஆம் திகதி) ஹலாலை எதிர்த்து கிருலப்பனையிலிருந்து தலதாமாளிகை வரையிலான ஓர் ஆர்ப்பாட்டத்தைப் பொதுபலசேனா அமைப்பு நடத்தவுள்ளது. இந்த ஆர்ப்பாட்டம் முடிவடைந்தவுடனேயே கஸினோவுக்கு எதிர்ப்புத் தெரிவித்து ஓர் ஆர்ப்பாட்டத்தை நடத்துவதற்கான பேச்சில் பொதுபலசேனா அமைப்பு ஈடுபட்டுவருவதாக அவ்வமைப்பின் நிறைவேற்றுக் குழு உறுப்பினரான பேராசிரியர் டிலாந்த விதானகே தெரிவித்தார்.
இதேவேளை, கடும் போக்குடைய அமைப்பான சிங்களராவய அமைப்பும் கஸினோ எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்றை மேற்கொள்ளவிருப்பதாகத் தெரியவந்துள்ளது. இதுசம்பந்தமாக 29 ஆம் திகதி அமைப்பின் உறுப்பினர்களுக்கிடையில் கலந்தாலோசித்து, மிகவிரைவில் நாடளாவிய ரீதியிலான ஓர் மாபெரும் ஆர்ப்பாட்டத்தை மேற்கொள்ள சிங்கள இராவய அமைப்பு தயாராகி வருவதாக அமைப்பின் பொதுச் செயலாளர் வண. அக்மீமன தயாரத்னதேரர் தெரிவித்தார்.
பொதுபலசேனாவின் ஹலால் ஒழிப்புப் போராட்டத்திற்கு தம்மால் முடிந்த ஒத்துழைப்புகளை வழங்கத் தயாராக இருப்பதாகத் தெரிவித்த இவர், கஸினோ எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் தொடர்பில் இம் மாதத்திற்குள் அறிவிப்பதாகவும் தெரிவித்தார்.
Post a Comment