ஆறு மாதங்களுக்கும் மேலாக இறந்த மகளின் உடல் உறுப்புகளுக்காக காத்திருந்த பெற்றோர்
இங்கிலாந்தின் பர்மிங்ஹாமில் வசித்துவரும் சீக்கியக் குடும்பம் ஒன்று கடந்த ஏப்ரல் மாதம் விடுமுறைக்காக இந்தியா வந்திருந்தனர்.அப்போது அவர்களின் 8 வயதுப் பெண்ணான குர்கிரனும் முதன்முதலாக இந்தியா வந்திருந்தார். இங்கு இருந்தபோது உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்ட அந்தச் சிறுமியை அவரது பெற்றோர்கள் பஞ்சாபின் கன்னா நகரில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர்.
அங்கு ஊசிமருந்து செலுத்தப்பட்ட சிறிது நேரத்திலேயே குர்கிரன் மரணமடைந்தார்.பிரேதப் பரிசோதனைக்குப்பின் அந்தப் பெண்ணின் உடல் அவளது பெற்றோர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. சிறுமியின் மரணத்தில் சந்தேகமடைந்த பெற்றோர்கள் இங்கிலாந்து சென்றவுடன் அங்கு மறுமுறை பிரேதப் பரிசோதனைக்கு அணுகியபோது அவளது உடல் உறுப்புகள் இல்லாதநிலையில் பரிசோதனை செய்ய மறுக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து நடைபெற்ற விசாரணையில் பஞ்சாப் காவல்துறையினரால் பரிசோதனைக்காக எடுக்கப்பட்ட சிறுமியின் இதயம், நுரையீரல் மற்றும் மூளை உள்ளிட்ட உறுப்புகள் மொஹாலியில் உள்ள தடயவியல் ஆய்வகத்தில் பாதுகாக்கப்பட்டுள்ளது தெரியவந்தது.
இந்த விபரம் தங்களுக்குத் தெரியாது என்று மறுத்த சிறுமியின் குடும்பம் அந்த உறுப்புகளை இங்கிலாந்திற்கு அனுப்புமாறு மனு அளித்தனர். அதன்பின் இந்த உறுப்புகள் முறையே பதப்படுத்தப்பட்ட நிலையில் சென்ற ஞாயிறன்று இங்கிலாந்தில் குர்கிரனின் பெற்றோர் வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
சிறுமியின் உடல் உறுப்புகள் இல்லாதநிலையிலேயே அவரது இறுதிச் சடங்கு செய்யப்பட்டுள்ளது. இந்த உடல் உறுப்புகளை இங்கிலாந்திற்கு வரவழைக்க அவரது தந்தை 6 லட்ச ரூபாய்க்கும் மேலாக செலவு செய்துள்ளார்.
ஆயினும், இதற்கான செலவை ஏற்க காப்பீட்டு நிறுவனம் மறுத்துவிட்டது. இது உணர்ச்சி மிகுந்த ஒரு போராட்டமாக மாறிவிட்டது என்று சிறுமியின் குடும்ப உறவினர்களில் ஒருவரான ஷரன்ஜித் கவுர் கூறினார்.
Post a Comment