ஆசிரியர் தினத்தில், 804 பட்டதாரிகள் ஆசான்களாகிறார்கள்
(எம்.எம்.ஏ.ஸமட்)
ஒக்டோபர் 6ஆம் திகதி உலக ஆசிரியர் தினம். இத் தினத்தில் 804 பட்டதாரிகள் ஆசிரிய நேவையில் இணைத்துக் கொள்ளப்படுகின்றனர்.
இதற்கமைய, பாட ரீதியாக தேசிய பாடசாலைகளில் நிலவும் பட்டதாரி ஆசிரியர்; வெற்றிடங்களை நிரப்பும்பொருட்டு, 804 பட்டதாரிகளுக்கு ஆசிரியர் நியமனம் வழங்கும் வைபவம் ஞாயிற்றுக்கிழமை (6) காலை 10 மணிக்கு மஹரகம தேசிய கல்வி நிறுவகத்தில் கல்வி அமைச்சர் பந்துல குணவர்தன தலைமையில் நடைபெறவுள்ளது.
மொழி, அரசியல் விஞ்ஞானம், புவியியல் போன்ற உயர்தரப் பிரிவுக்கான பாடங்களுக்குரிய பட்டதாரி ஆசிரியர்களுக்கான வெற்றிடம் நாட்டிலுள்ள 350 தேசிய பாடசாலைகள் பலவற்றில்; தொடர்ந்து நிலவி வருகிறது.
இவற்றைக் கருதிக்கொண்டு, பட்டதாரிகளை ஆசிரியர் சேவையில் இணைத்துக்கொள்ளும் பொருட்டு, கல்வி அமைச்சினால் உரிய பட்டதாரிகளிடமிருந்து போட்டிப் பரீட்சைக்கான விண்ணப்பங்கள் இவ்வருடத்தின் முற்பகுதியில் கோரப்பட்டிருந்தன.
இதற்கமைய போட்டிப் பரீட்சை நடாத்தப்பட்டு உரிய புள்ளிகளைப் பெற்றவர்கள் நேர்முகப் பரீட்சையினூடாக ஆசிரியர் நியமனத்துக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளனர். போட்டிப் பரீட்சைப் புள்ளிகள் மற்றும் நேர்முகப் தேர்வு என்பவற்றின் ஊடகாப் பெற்ற புள்ளிகளின் அடிப்படையில் பட்டதாரி ஆசிரியர் நியமனத்துக்காக தெரிவு செய்யபட்டுள்ள 804 பட்டதாரிகளே இவ்வாசிரியர் நியமனத்தைப்; பெறுகின்றனர்.
இவ்வாறு தேசிய பாடசாலைகளுக்காக பாட ரீதியாக பட்டதாரி ஆசிரியர் நியமனம் பெறுவோரில் 214 பேர் தமிழ் மொழி மூல பட்டதாரி ஆசிரியர்கள்; என்பது குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, மாகாணப் பாடசாலைகளில் காணப்படும் பட்டதாரி ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்பும் நடவடிக்கைகளை அந்தந்த மாகாணக் கல்வி அமைச்சுக்களும் மாகாண பொதுச் சேவை ஆணைக்குழுக்களும் மேற்கொண்டு வருகின்றன. இதன்நிமித்தம்; மேல் மாகாணத்தின் களுத்துறை மாவட்ட மாகாணப் பாடசாலைகளில் நிலவும் பட்டதாரி ஆசிரியர்களுக்கான வெற்றிடங்களை நிரப்பும்பொருட்டு அண்மையில் 110 பட்டதாரிகளுக்கு ஆசிரியர் நியமனம் வழங்கப்பட்டமை தெரிந்ததே.
Post a Comment