புகைத்தலுடன் தொடர்புபட்ட பிரச்சினை - இலங்கையில் தினமும் 60 பேர் பலி
(எம்.எம்.ஏ.ஸமட்)
புகைத்தலுடன் தொடர்புபட்ட சுகாதாரப் பிரச்சினைகளினால் தினமும் ஏறக்குறைய 60 பேர் இலங்கையில் உயிரிழக்கின்றனர்.
தொற்றா நோய்கள் பலவற்றின் முக்கிய காரணியாக விளங்குவது புகைப்பிடித்தல் செயற்பாடாகும். புகைப்பபிடித்தலுடன் சம்பந்தப்பட்ட சுகாதாரப் பிரச்சினைகளினால் தினமும் ஏறக்குறைய 60 பேர் மரணிப்பதுடன், வருடமொன்றுக்கு 20 ஆயிரம் பேர் வரை உயிர்துறக்கின்றனர். இத்தகவலை சுகாதார அமைச்சர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
புகைத்தலினால் ஏற்படும் பாதிப்புக்களின் தன்மைகளை மாணவர்கள் நேரடியாக காண்பதற்காக மஹரகம புற்று நோய் வைத்தியசாலையை பார்வையிட அனுமதிக்க வேண்டும். கல்விச் சுற்றுலா மேற்கொண்டு கொழும்பு வரும் சிரேஷ்ட தர வகுப்பு மாணவர்கள் அங்கொடை தேசிய உளச் சுகாதார நிறுவத்திற்கும் மஹரகம புற்றுநோய் வைத்தியசாலைக்கும் அழைத்துச் செல்லப்படுதல் வேண்டும் எனவும் அவர் ஆலோசனை வழங்கியுள்ளார்.
மஹரகம புற்று நோய் வைத்தியசாலையில் சிகிச்சை பெறும் புற்றுநோயாளர்களில் அதிகமானோர் 35 வயதுக்கும் 45 வயதுக்குமிடைப்பட்டவர்கள். இவர்களில் அதிகமானோர் தீவிர புகைப்பிடித்தல் பழக்கமுடையவர்கள்.
வாய் மற்றும் நுரையீரல் புற்றுநோய்ச்சிகிச்சைக்காக அரசாங்கம் வருடமொன்றுக்கு 15 மில்லியன் ரூபாவை செலவு செய்கிறது. புகைத்தலால் பாதிக்கப்படுவோரை மருந்துகளினால் பாதுகாக்க முடியாது. ஒரு புற்றுநோயாளருக்கு ஊசி ஏற்றுவதற்காக 3 இலட்சம் ரூபா செலவிடப்படுகிறது, இருந்தும் புற்று நோயாள்களை மருந்துகளினால் காப்பாற்ற முடியாமல் இருக்கிறது.
புகைத்தலுக்கு விடுதலையளித்த பிரதேசமாக பொலனறுவைப் பிரதேச மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் இந்த இலக்கை அடைவதற்கு சகல தரப்பினரதும் ஒத்துழைப்பு எதிர்பார்க்கப்பட்டுள்ளதாகவும் அதற்கு சாதகமான பதில் வந்துள்ளதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.
Post a Comment