5 ஆம் தரப் புலமைப் பரிசில் பரீட்சை - விரைவில் உதவிக் கொடுப்பனவு
(எம்.எம்.ஏ.ஸமட்)
கடந்த ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற 5ஆம் தரப் புலமைப் பரிசில் பரீட்சைக்குத்தோற்றி தகைமைபெற்ற மாணவர்களுக்கு புலமைப் பரிசில் உதவிக் கொடுப்பனவு வழங்கவும் பிரபல பாடசாலைகளில் அனுமதிப்பதற்குமான விண்ணப்பப் படிவங்கள் கல்வி அமைச்சினால் விநியோகிக்கப்படவுள்ளன. இதற்கான நடவடிக்கைகளை கல்வி அமைச்சின் பாடசாலைகள் நடவடிக்கைப் பிரிவு மேற்கொண்டுள்ளது.
இதன்நிமித்தம், எதிர்வரும் 24ஆம் திகதி கல்வி அமைச்சில் இடம்பெறும் சகல வலயக் கல்விப் பணிப்பளர்களும் கலந்து கொள்ளும் கூட்டத்தின்போது இவ்விண்ணப்பப்படிவங்கள் வலயக் கல்விப் பணிப்பாளர்களிடம் ஒப்படைக்கப்படுமென அமைச்சின் அதிகாரியொருவர் குறிப்பிட்டார்.
இம்மாதம் முதலாம் திகதி வெளியிடப்பட்ட 5ஆம் தரப் புலமைப்பரிசில் பரீட்சையியின் பெறுபேறுகளின் பிரகாரம் இப்பரீட்சைக்குத் தோற்றிய 3 லட்சத்து 22 ஆயிரத்து 455 பரீட்சார்திகளுள் வெட்டுப் புள்ளிகளுக்குமேல் 32,607 மாணவர்கள் தகைமை பெற்றுள்ளனர். இது தவிர, 70 புள்ளிகளுக்கு மேல்; 191,301 பேரும், 70 புள்ளிகளுக்குக் கீழ் 98,547 பேரும் புள்ளிகளைப் பெற்றுள்ளனர்.
வெட்டுப் புள்ளிகளுக்குமேல் தகைமை பெற்றுள்ள 32,607 மாணவர்களில் வருமானம் குறைந்த குடும்பங்களைச் சேர்ந்த 15ஆயிரம் மாணவர்களுக்கு உதவிக் கொடுப்பனவு வழங்கப்படுவதுடன், கல்வி அமைச்சினால் நிர்ணைக்கப்படும் பாடசாலைகளுக்குரிய வெட்டுப் புள்ளிகளுக்கு ஏற்ப 15 ஆயிரம் மாணவர்கள் பிரபல்ய பாடசாலைகளில் 6ஆம் தரத்தில் அனுமளிக்கவும்படுவர் என்பது குறிப்பிடத்தக்கது.
Post a Comment