Header Ads



தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையை ரத்து செய்ய வேண்டும் - தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை

(tn)  பிள்ளைகளுக்கு பாதுகாப்பளிக்கும் புதிய கொள்கையின் அடிப்படையில் தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையை ரத்து செய்ய வேண்டும் என்று தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் தலைவி அனோமா திஸாநாயக்க தெரிவித்துள்ளார். 

இந்த ஐந்தாம் தர புலமைப் பரீட்சையினால் பிள்ளைகளுக்கு கல்வி கற்க வேண்டும் என்று அளவுக்கதிகமான அழுத்தங்களை ஆசிரியரும், பெற்றோரும் ஏற்படுத்தி, அவர்களை இந்தப் போட்டிப் பரீட்சைக்கு தயார்படுத்துவது பிள்ளைகளுக்கு கல்வியில் இருக்கும் ஆர்வத்தை 

குறைத்துவிடுவதுடன் அவர்களுக்கு உளரீதியிலான தாக்கங்களை ஏற்படுத்துகின்றது என்று அனோமா திஸாநாயக்க தெரிவித்துள்ளார். அதிகார சபை தயாரித்துள்ள இந்தப் புதிய கொள்கையில் ஐந்து வயது முதல் 16 வயதுக்கு இடைப்பட்ட பிள்ளைகள் கட்டாயம் பாடசாலைகளுக்கு அனுப்பப்பட வேண்டும் என்பது வலியுறுத்தப்பட்டுள்ளது. தற்போது இந்த வயது எல்லை 5 முதல் 14 வரையிலேயே இருப்பது குறிப்பிடத்தக்கது.

இந்தப் புதிய கொள்கையை நாங்கள் பொதுமக்களுக்கு தெரியப்படுத்தி நாட்டில் பரந்த அடிப்படையில் இது குறித்து கருத்துப் பரிமாறல்களை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளோம் என்று கூறினார்.

பாடசாலைகளில் பிள்ளைகளை நல்வழிப்படுத்துவதற்கு அவர்களை அடித்து துன்புறுத்துவது நிறுத்தப்பட வேண்டும் என்றும் இது தொடர்பாக பாடசாலை அதிபர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் வன்முறை அற்ற முறையில் கல்வியைக் கற்பிக்கும் செய்முறை அளிக்கப்படும் என்றும் கூறினார்.

இந்த புதிய கொள்கைக்கு சிறுவர் மற்றும் மகளிர் விவகார அமைச்சு அங்கீகாரம் அளித்துள்ளது. இந்தப் புதிய கொள்கை அமைச்சரவையின் அங்கீகாரத்திற்கு அனுப்பி வைக்கப்படும்.

No comments

Powered by Blogger.