Header Ads



எகிப்து இராணுவம் மீண்டும் வெறியாட்டம் - 46 பேர் மரணம், 268 பேர் காயம்


அரபு- இஸ்ரேலியப் போர்  1973-ம் ஆண்டில் நடைபெற்றது. இதன் நினைவு தினம் நேற்று எகிப்தில் அனுசரிக்கப்பட்டது. கடந்த ஜூலை மாதம் எகிப்து ராணுவத்தால் ஆட்சியிலிருந்த முகமது மோர்சி பதவி இறக்கம் செய்யப்பட்டபின் அவர் சார்ந்த இஸ்லாமிய சகோதரத்துவக் கட்சியும் கடுமையாக ஒடுக்கப்பட்டது.

இந்த நினைவு தினத்தை முன்னிட்டு மோர்சியின் ஆதரவாளர்கள் கெய்ரோவின் மத்திய பகுதியில் உள்ள முக்கிய சதுக்கம் ஒன்றில் கூடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடத் திட்டமிட்டிருந்தனர். இதற்காக தாகிர் சதுக்கத்தின் முன்னால் கூடியபோது காவல்துறையினர் துப்பாக்கிகளால் சுட்டு அவர்களை விரட்டினர். அப்போது ஏற்பட்ட கலவரத்தில் 46 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

தலைநகரின் தென்பகுதியிலும் காவல்துறையினருடன் ஏற்பட்ட கலவரத்தில் ஐந்து பேர் கொல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது மட்டுமின்றி, நேற்று இந்த நினைவு தினத்தை முன்னிட்டு நடைபெற்ற வன்முறைகளில் நாடு முழுவதும் மொத்தம் 268 பேர் காயமடைந்துள்ளதாகவும் சுகாதார அமைச்சகத்தின் மூத்த அதிகாரியான அஹமது அல் அன்சாரி பத்திரிகையாளர்களிடம் தெரிவித்துள்ளார். பெரும்பாலும் இவர்கள் துப்பாக்கிக் குண்டுகளாலேயே காயமடைந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

கடந்த ஆகஸ்ட் 14-ம் தேதி தொடங்கி இதுவரை நடைபெற்ற இஸ்லாமிய காவல்துறை மோதலில் இதுவரை ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். அவற்றுள், நேற்று நடந்த சம்பவமே அதிக அளவு இறப்பு எண்ணிக்கையைக் கொண்டதாகத் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.



No comments

Powered by Blogger.