440 ஆசிரியர்களும், 240 அதிபர்களும் கௌரவம் பெறுகிறார்கள்
(எம்.எம்.ஏ.ஸமட்)
ஆசிரியர் தினத்தை முன்னிட்டு ஆசிரியர்களைக் கௌரவிக்கும் முகமாக கல்வி அமைச்சு வருடா வருடம் நடத்தும் 'பிரதிபா பிரபா' கௌரவிப்பு விழா மூன்றாவது முறையாகவும் கல்வி அமைச்சர்; பந்துல குணவர்தன தலைமையில் சனிக்கிழமை (05) காலை 10 மணிக்கு மஹரகம தேசிய கல்வி நிறுவகத்தின் கேட்போர் கூடத்தில் நடைபெறவுள்ளது.
நாளை நடைபெறும் இவ்விழாவில் பிரதம அதிதியாக பிரதமர் ரி.எம்.ஜயரத்ன கலந்துகொள்ளவுள்ளார்.
உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் வேறு திகதிகளில் ஆசிரியர் தினம் கொண்டாடப்படுகிறது. இலங்கையில் வருடம்தோரும் ஒக்டேபர் 6ஆம் திகதியே ஆசிரியர் தினம் அனுஷ்டிக்கப்பட்டு வருகிறது.
கல்வியை மட்டும் போதிக்காது ஒழுக்கம், பண்பு, ஆன்மீகம், பொது அறிவு என அனைத்தையும் மாணவர்களுக்கு எடுத்துக் கூறி அவர்களை சிறந்த மனிதர்களாக்கும் சிறந்த ஆசிரியர்கள் பாராட்டப்படுவதும் கௌரவிக்கப்படுவதும் அவசியம்.
அந்தவகையில், கல்வி அமைச்சின் சுற்றுநிருபத்தின் நிபந்தனைகளுக்கு ஏற்ப வலய,மாகாண மட்டங்களிலும்; கல்வி அமைச்சினாலும் தெரிவு செய்யப்பட்ட ஆசிரியர்கள், ஆசிரிய மதகுருமார், அதிபர்கள், விஷேட தேர்ச்சியுள்ள ஆசிரியர்கள், அதிபர்கள் அவர்களுடன் பிரிவினாக்களின் அதிபர்கள், ஆசிரியர்கள் என ஏறக்குறைய 800 பேர் 'பிரதிபா பிரபா' விழாவின்போது விருதுகளையும் சான்றிதழ்களையும் பெறுகின்றனர்.
இவர்களில் 440 ஆசிரியர்களும் 240 அதிபர்களும் ஆசிரிய மதகுருமார் 8 பேரும் அதிபர் மதகுருமார் 8 பேரும் அடங்குவர்.
அத்துடன், விஷேட தேர்ச்சி பெற்ற ஆசிரியர்கள் மற்றும் அதிபர்கள் 11 பேரும் பிரிவினாக்களைச் சேர்ந்த அதிபர்கள் ஆசிரியர்கள் அடங்களாக 92பேரும் இவ்விழாவின் போது விருதுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கி கல்வி அமைச்சினால் கௌரவிக்கப்படவுள்ளனர்.
இவ்வாறு, 'பிரதிபா பிரபா' விழாவின்போது கௌரவிக்கப்படும் 800 பேரில் 161 தமிழ்மொழி மூல ஆசிரியர்களும் 87 அதிபர்களும் அடங்குகின்றமை குறிப்பிடத்தக்கது
Post a Comment