சட்டவிரோத இஸ்ரேலின் ஆக்கிரமிப்பினால் பலஸ்தீனுக்கு வருடாந்தம் 3.4 பில்லியன் டொலர் இழப்பு
(tn) மேற்குக் கரையில் இஸ்ரேலின் கட்டுப்பாடுகளால் பலஸ்தீன பொருளாதாரம் ஆண்டுதோறும் சுமார் 3.4 பில்லியன் டொலர்களை இழந்து வருவதாக உலக வங்கி நேற்று வெளி யிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டு ள்ளது.
இந்நிலையில் மேற்குக் கரையின் சுமார் 60 வீதமான பகுதியில் நிலவும் இஸ்ரேலின் கட்டுப்பாடு தளர்த்தப்பட்டால் பலஸ்தீன பொருளாதாரம் மூன்று மடங்காக விரிவடையும் என அந்த அறிக்கையில் விபரிக்கப்பட்டுள்ளது.
“விவசாயம் மற்றும் வளங்கள் நிறைந்த பாதிக்கும் அதிகமான மேற்குக் கரை நிலத்தை பலஸ்தீனர்களால் பயன்படுத்த முடியாமலுள்ளது” என்று உலக வங்கி அறிக்கையில் கூறப்பட்டு ள்ளது.
மேற்குக் கரையில் கட்டுப்பாட்டுக்கு உட்படுத்தப்பட்டிருக்கும் நிலப்பகுதி குறித்து உலக வங்கியின் விரிவான ஆய்வு அறிக்கையாக நேற்று வெளியிடப்பட்ட அறிக்கை கருதப்படுகிறது.
இஸ்ரேலின் முடக்குதலுக்கு உட்பட்டிருக்கும் நிலத்தில் விவசாய மற்றும் வியாபார நடவடிக்கைகளை அபிவிருத்தி செய்ய அனுமதி அளித்தால் பலஸ்தீனின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 35 வீதத்திற்கும் அதிகமான பங்கு அதிகரிக்கும்.
மேற்குக் கரை மற்றும் காசாவுக்கான உலக வங்கி இயக்குநர் மரியம் ஷர்மான், மேற்குக் கரையில் மக்கள் செரிந்து வாழும் நகரப் பகுதிகள் மீதே அதிக அவதானம் செலுத்தப்பட்டு வருவதாக குறிப்பிட்டார். “ஆனால் தற்போது கட்டுப்பாட்டுக்கு உள்ளாகியிருக்கும் பகுதிகளை பலஸ்தீனர்களுக்கு பயன் படுத்த அனுமதி அளித்தால் புதிய பொருளாதார தளங்கள் உருவாக் கப்படுவதோடு அது ஸ்திரமான பொருளாதார வளர்ச்சிக்கு உதவும்” என்று ஷர்மான் வலியுறுத்தினார்.
பலஸ்தீன உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி மந்தமாக செயற்பட்டுவருவதாக சர்வதேச நாணய நிதியம் அறிவித்திருந்தது. பலஸ்தீன உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி கடந்த 2011ம் ஆண்டில் 11 வீதமாக இருந்ததோடு 2012 ம் ஆண்டில் அது 5.9 வீதமாகவும் நடப்பு ஆண்டில் அது 4.5 வீதமாக வும் இருப்பதாக சர்வதேச நாணய நிதியம் குறிப்பிட்டது.
மறுபுறத்தில் இஸ்ரேல் - பலஸ்தீன த்திற்கு இடையிலான புதிய சுற்று அமைதிப் பேச்சுவார்த்தை நேற்று முன்தினம் திங்கட்கிழமை ஆரம்பமானது. இதில் பேச்சுவார்த்தையை விரைவுபடுத்த இருதரப்பு இணங்கியதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
இஸ்ரேல் - பலஸ்தீனத்திற்கு இடையிலான நேரடி அமைதி பேச்சு மூன்று ஆண்டு இடைவெளிக்கு பின்னர் கடந்த ஜூலையில் ஆரம்பமானது. எனினும் தொடருக்கும் அமைதிப் பேச்சுவார்த்தை குறித்து வெளியுலகுக்கு தெரிவிக்காமல் இருக்க இரு தரப்பும் இணங்கியுள்ளன. எவ்வாறாயினும் இதுவரை இடம்பெற்ற பேச்சுவார் த்தைகளில் எந்தவித முன்னேற்றமும் ஏற்பட்டதற்கான அறிகுறியும் தென்பட வில்லை. பலஸ்தீன நிர்வாகத்தின் ஜனாதிபதி மஹ்மூத் அப்பாஸ் நேற்று முன்தினம் இஸ்ரேல் பாராளுமன்ற உறுப்பினர்களுடன் அரிதான சந்திப்பொன்றில் பங்கேற்றார். அதில் அவர் தீர்வொன்றை எட்டுவதற்கான கடைசி வாய்ப்பாக இது இருக்கும் என்று எச்சரித்தார். இந்நிலையில் பலஸ்தீன சிரேஷ்ட அதிகாரி ஒருவர் ராய்ட்டருக்கு அளித்த தகவலில் அமைதிப் பேச்சுவார்த்தை தொடர்ச்சியாகவும் நாளொன்றுக்கு 8 மணி நேரத்தை விடவும் அதிக காலம் எடுக்கவும் இருதரப்பும் இணங்கியிருப் பதாக குறிப்பிட்டார்.
“பேச்சுவார்த்தையை விரைவுபடுத்துமாறு அமெரிக்கர்கள் கோருகின்றனர். தற்போதைய சூழலில் நாம் எதனையும் அடையவில்லை” என்று மேற்படி பலஸ்தீன அதிகாரி விபரித்தார்.
Post a Comment