Header Ads



பட்டப்பகலில் 3 நிமிடத்தில் ரூ.10 கோடி கொள்ளை

பாரிஸ் நகரில் பிரபல நகைக்கடையில்  பட்டப்பகலில் 15 பேர் கும்பல் நுழைந்து மூன்றே நிமிடத்தில் இந்திய ரூ.10 கோடி மதிப்புள்ள கைக்கடிகாரங்களை அள்ளிச்சென்றது. பாரிஸ் நகரில் பட்டப்பகல் கொள்ளை நடப்பது அதிகரித்து வருகிறது. பிரான்ஸ்  தலைநகர் பாரிசில் கடந்த வெள்ளியன்று நண்பகல் இடைவேளைக்காக பிரபல நகைக்கடை மூடப்பட்டிருந்தது. 

கோல்டு வாட்ச்கள் விற்பனையில் பிரபலமான இந்த கடைக்கு அப்போது டிப்டாப்பான இளைஞர்கள் 2 பேர் வந்தனர். ஒருவர் காலிங் பெல்லை அழுத்த கடை ஊழியர் திறந் தார்; நொடிப்பொழுதில் அந்த இருவரை தாண்டி ஒரு ஆசாமி, கையில் துப்பாக்கியுடன் நுழைந்து, ஊழியர் நெற்றியில் துப்பாக்கியை அழுத்தியபடி நுழைந்தான். அடுத்த நிமிடங்களில் என்ன நடந்தது  என்பதே ஏதோ சினிமாவில் வரும் காட்சி போன்றது. அடுத்தடுத்து ஏழு பேர் நுழைந்தனர். எல்லார் கையிலும் பேஸ்பால் பேட் அல்லது கோடாரி இருந்தது. சில நொடிகளில் கடையின்  எல்லா ஷோகேஸ்களும்  அடித்து நொறுக்கப்பட்டு அவற்றில் இருந்த விலை உயர்ந்த வாட்சுகள் அள்ளப்பட்டன. இவை ரூ.10 கோடி மதிப்புள்ளவை. 

இவ்வளவு பேரும் கொள்ளையில் ஈடுபட்டிருக்க ஊழியர்களை ஒருவன் துப்பாக்கி  முனையில் பயமுறுத்தி நிறுத்தி வைத்திருந்தான். இன்னொருவன் ‘ஸ்டாப் வாட்ச்’ வைத்து உன்னிப்பாக பார்த்துக்கொண்டே, ‘சீக்கிரம்...சீக்கிரம் நேரம் ஆகிறது...’ என்று கூறியபடி அவசரப்படுத்தினான். மூன்றே நிமிடத்தில் ஸ்டாப் வாட்ச் அலாரம் அடிக்க , கொள்ளையையும் முடித்து கொண்டு வெளியேறியது கும்பல். 

வெளியே  ஏற்கனவே காத்திருந்த மற்றவர்கள், தயாராக வைத்திருந்த சத்தமே வராமல் புகை குண்டுகளை போட்டு புகையை பரப்பிவிட்டு சாலையில் இருந்த அவ்வளவு ‘சிசிடிவி’க்களின் கண்களிலும் மண்ணை தூவி விட்டு நடந்தே சென்று விட்டனர். போலீஸ் வந்து துருவி துருவி ஆராய்ந்ததில்,  அடையாளம் வைத்து இருவரை பிடித்தனர். சாலையோர சாக்கடையில் கொள்ளையர்கள் கையுறை, கோடாரிகள் கிடந்தன. 

பாரிஸ் நகரில் இப்படி பட்டப்பகலில் கொள்ளை நடப்பது சமீப காலமாக அதிகரித்து விட்டது. கடந்த மாதம் ஒரு ஓட்டலில் நடந்த நகை கண்காட்சியில் பல கோடி நகைகள் கொள்ளை போயின. அதுபோல, இன்னொரு நகை கடையில் கொள்ளை போனது. ‘கிழக்கு ஐரோப்பிய நாடுகளை சேர்ந்த சிலர் தான் இப்படி கைவரிசையில் ஈடுபடுகின்றனர்’ என்று போலீசார் கூறினர்.

No comments

Powered by Blogger.