'கூகுள் எர்த்' உதவியால் 26 ஆண்டுக்கு பின் குடும்பத்துடன் இணைந்தவர்
ரயில் பயணத்தின் போது, தன் சகோதரனை பிரிந்த, ஐந்து வயது சிறுவன், 26 ஆண்டுகளுக்குப் பின், 'கூகுள் எர்த்' இணையதளம் உதவியுடன் தன் வீட்டை அடைந்தார். இதனால், தொலைந்த சிறுவனின் உறவினர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
ரயிலில் பயணம்:
மேற்குவங்க மாநிலத்தை சேர்ந்தவர், சரோ முன்ஷி கான், 26 ஆண்டுகளுக்கு முன், தன், 14 வயது சகோதரனுடன் ரயிலில் பயணம் செய்து கொண்டிருந்தார். ரயில் பயணத்தில் தன் அண்ணனை தொலைத்த சரோ முன்ஷி கான், செல்லும் இடம் தெரியாமல், ஊர்ஊராக அலைந்துள்ளார். வீதிகளில் திரிந்த சரோ, அனாதை இல்லம் ஒன்றில் வளர்ந்து வந்துள்ளார். சில ஆண்டுகளில், சரோவை ஆஸ்திரேலியாவை சேர்ந்த தம்பதி தத்து எடுத்து சென்றனர். பல ஆண்டுகளாக, தன் வீட்டு நினைவாகவே இருந்த சரோ, 5 வயதில் தன் நினைவில் இருந்தவைகளை மீண்டும், மீண்டும் நினைவுபடுத்தி, இணையதளத்தில் தேட ஆரம்பித்தார். சரோவின் விடா முயற்சியால், கூகுள் எர்த்தில், சரோ தன் ரயில் பயணத்தில் சகோதரனை பிரிந்த இடத்தை கண்டறிந்தார்.அதன் பின், தன் வீட்டிலிருந்து எவ்வளவு தொலைவு பயணித்திருக்க முடியும் என்ற யூகத்தின் அடிப்படையில், கூகுள் எர்த்திலேயே, தன் சொந்த ஊர் பற்றி தகவல்களை தேடினார். இறுதியில், தன் பிறந்த ஊர் பற்றி தகவல்களை அறிந்த சரோ, 26 ஆண்டுகளுக்குப் பின், தன் தாய் மற்றும் ரயில் பயணத்தில் பிரிந்த சகோதரனுடன் ஒன்று சேர்ந்துள்ளார்.சரோவின் வருகையால், அவனது குடும்பத்தினர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இது சூப்பர்மேன் செயல் போல உணர்வதாக, சரோவின் சகோதரர் கூறியுள்ளார். கூகுள் எர்த் உதவியுடன், தான் பிறந்த இடத்தை கண்டறிந்து, உறவினர்களுடன் சேர்ந்ததில் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளதாக, சரோ உணர்ச்சி பொங்க தெரிவித்துள்ளார்.
சீனாவை சேர்ந்தவர்:
இதற்கு முன், சீனாவை சேர்ந்த ஒருவர், 23 ஆண்டுகளுக்குப் பின், கூகுள் எர்த் இணையதளம் உதவியுடன், தன் குடும்பத்தினருடன் ஒன்றிணைந்துள்ளார். தற்போது இந்தியாவிலும் இந்த அதிசயம் நிகழ்ந்துள்ளது.
Post a Comment