23 வருடங்களாக தவிக்கும் வடமாகாண முஸ்லிம்களுக்கு விடிவு கிடைக்குமா..?
(சத்தார் எம். ஜாவித்)
இலங்கையின் இனப்பிரச்சினை வரலாற்றில் மறக்க முடியாத ஒரு சம்பவம்தான் தழிழீழ விடுதலைப் புலிகளால் வடமாகாண முஸ்லிம்கள் இனச் சுத்தி கரிப்புச் செய்யப்பட்ட விடயமாகும். அவ்வாறு வடமாகாணத்தில் இருந்து வெளியேற்றப்பட்ட மக்களின் வயது இன்று 23வருடங்களாகும்.
கடந்த 1990ஆம் ஆண்டின் ஒக்டோபர் மாத இறுதித்தினங்கள் என்றாலே வடமாகாண முஸ்லிம்களுக்கு புல்லரிக்கும் விடயமாகும். அந்தளவிற்கு எதிர்;பார்த்திராத ஒரு சதிவேளை இடம்பெற்ற காரிருள் சூழ்ந்து கொண்ட தூப்பாக்கிய நிகழ்வு இடம்பெற்ற காலமாகும்.
அடம்பன் கொடியும் திரண்டால் மிடுக்கும்போல் வடமாகாணத்தில் தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களின் உறவுகள் காணப்பட்டன இவ்வாறான உறுவுகளை ஆயுதப் போராட்டம் தொடங்கியதில் இருந்து சிறுகச் சிறுக ஆரம்பித்து ஈற்றில் முற்று முழுதாக இன உறவுகளை சின்னா பின்னப்படுத்தி வடமாகாண மக்களை பிரித்து விட்டது.
ஒரு இனத்தின் விடிவுக்காய் இன்னொரு இனத்தை விரட்டியடித்த வரலாற்றுத் தவறை விடுதலப் புலிகள் செய்ததன் காரணமாக இன்று எந்த இனத்திற்காக அவர்கள் செயற்பட்டார்களோ அந்த இனமும் சேர்ந்து இன்று அவர்களின் விடயத்தில் தோல்வியைத் தழுவிய வரலாறே இன்றைய நிலைமைகளாகும்.
இவ்வாறு வடமாகாண முஸ்லிம்கள் தமது பூர்வீகத்தில் இருந்து முற்றாக வெளியேற்றப்பட்டு இம்மாதத்துடன் சுமார் 23 வருடங்கள் கடந்தும் இன்றும் அவர்கள் மாற்றுப் பகுதிகளில் அகதி என்ற முத்திரையுடன் அவர்களது வாழ்வாதராம் வறுமையின் பிடிக்குள் சிக்கி தாண்டவமாடிக் கொண்டிருக்கின்ற நிலைமைகளை தற்போது காணக்கூடியதாகவுள்ளது.
இலங்கையில் இவ்வாறு ஒரு இனம் தமது பூர்வீகத்தை விட்டு விரட்யடிக்கப்பட்டு பல்வேறுபட்ட துன்ப துயரங்களை அனுபவித்துக் கொண்டிருக்கும் வேளையிலும் கூட அவர்களின் மீள் குடியேற்ற அல்லது முன்னேற்ற விடயங்களில் மாற்றாந் தாய் மனப்பான்மையான போக்கில் கைவிடப்பட்டுள்ளனர்.
தற்போது இடம்பெயர்ந்த முஸ்லிம்களில் ஒரு சிலர் தமது வறுமை மற்றும் தொழில் ரீதியான விடயங்களுக்காக மீள் குடியேறினாலும் அவர்கள் மீள் குடியேறிய பகுதிகளில் தாம் அகதிகளாகவே வாழ்வதாகவும் எந்த விடயமும் ஒரு கிராமத்திற்கேனும் பூரணமாக செய்து தரப்படவில்லையென்ற கோரிக்கைகளையே முன் வைக்கின்ற நிலைமைகள் தொடருகின்றன.
வடமாகாண முஸ்லிம்கள் இன்று ஒரு திடமான தலைமைத்துவங்களோ அல்லது வழிகாட்டல்களோ இல்லாது செல்லும் நிலைமைகளிலேயே தமது வாழ்வாதாரத்தை கடினமான நிலையில் கொண்டு நடத்திக் கொண்டிருக்கின்றனர். இவர்களின் நிலைமைகள் இன்று வரை கைவிடப்பட்ட ஒரு சமுகமாக காணப்படுவதானது கவலைக்குரிய விடயமாகும்.
கடந்த காலங்களைப் பொருத்தவரையில் முஸ்லிம்களின் வறுமை நிலைமைகளைப் போக்குவதற்கான வழிகளி இருந்தும் அவை முஸ்லிம் தலைமைகளாலும், முஸ்லிம் அமைச்சர்கள் மற்றும் அதிகாரம் கொண்ட முஸ்லிம் அரசியல் வாதிகளினால் கைநலுவ விடப்பட்டதானது முஸ்லிம் சமுகத்திற்கான பாரியதொரு இழப்பாகவே நோக்கப்படுகின்றது.
23 வருட காலம் என்பது ஒரு சாதாரண காலப்பகுதியல்ல இவ்வாறானதொரு காலப்பகுதியில் ஒரு சமுகம் அகதிகளாக இருக்கும்போது அவர்களை தத்தமது சொந்த இடங்களில் மீள் குடியமர்த்தும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படாது இன்று வரை இலங்கையின் பல பாகங்களிலும் அபிவிருத்திகள் மேற் கொள்ளப்படுவதானது இடம்பெயர்ந்த முஸ்லிம் மக்களிடத்தில் பாரியதொரு மன உழசை;சலையே ஏற்படுத்தியுள்ளது.
இலங்கையில் கடந்த மூன்று தஸாப்த கால வரலாற்றில் முற்றாக பாதிக்கப்பட்ட அல்லது சகலதையும் இழந்த ஒரு சமுகமாகவே வடமாகாண முஸ்லிம் சமுகம் காணப்படுகின்றனர். இவர்கள் விடயத்தில் கடந்த 2009 ஆம் ஆண்டு யுத்த வெற்றிக்குப் பின்னர் அவர்களின் இடம்பெயர்வு விடயத்தில் எடுக்கப்படும் முடிவுகள் எல்லாம் வாய்ச் சொல்லில்; மட்டுமே காணப்டுகின்றதே தவிர செயல் வடிவங்களில் உள்ள விடயங்கள் உள்ளங் கையில் நெல்லிக்கணியான விடயமாகவே பாதிக்கப்பட்ட மக்களால் நோக்கப்படுகின்றது.
வடமாகாண முஸ்லிம்களுக்கு ஏற்பட்ட மேற்படி விடயங்கள் ஒரு வரலாற்றுத் தவறாக இருக்கும்போது அதைச் செய்தவர்களும் அதற்கு உடந்தையாக இருந்தவர்களும் கூட வடமாகாணத்தில் இருந்து முஸ்லிம்கள் விரட்டப்பட்டதை ஒரு வராற்றுத் தவறாக ஏற்றுக் கொள்ளப்பட்ட போதிலும் இன்று வரை அதனை ஏற்று அதற்கான சரியாதொரு தீர்வினை அரசு இன்னும் வழங்கவில்லை என்ற விடயத்தில் முஸ்லிம் புத்தி ஜீவிகள் விசனம் தெரிவிக்கின்றனர்.
வடக்கில் இருந்து முஸ்லிம்கள் பலவந்தமாக விரட்டப்பட்டார்கள் என்ற அழுத்தங்களைக் கூட எமது முஸ்லிம் தலைமைகள் உறுதியாக கொடுக்க வில்லையென்ற வாதங்கள் கூட அடிக்கடி பாதிக்கப்பட்ட மக்கள் மத்தியில் இடம்பெறத்தான் செய்கின்றன.
இலங்கை ஒரு ஜனநாயக நாடு என்ற ரீதியில் முஸ்லிம்களின் விடயத்தில் அதீத கவனஞ் செலுத்த வேண்டும் ஆனால் அந்த விடயம் இன்று வரை முஸ்லிம்கள் விடயத்தில் மேற் கொள்ளப்படவில்லை. அவ்வாறு இடம்பெற்றிருக்குமாயின் இன்று வரை சுமார் ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் அகதிகளாக இருக்கவேண்டியதில்லை.
இவ்வாறு நீண்டதொரு அகதி வாழ்விற்கு முஸ்லிம் தலைமைகள் சரியான திட்டங்களை வகுத்து பாதிக்கப்பட்ட மக்களின் கருத்துக்களை உள்வாங்கி சமுகம் அல்லது இனம் என்ற என்னத்தில் நடவடிக்கைகளை மேற் கொண்டிருந்தால் இன்றைய 23 வருட கால அவலம் முஸ்லிம் சமுகத்திற்கு ஏற்பட்டிருக்காது,
கடந்த 23 வருட காலத்தில் வடமாகாண முஸ்லிம்கள் அகதிகளாக இருந்தே பல்வேறுபட்ட தேர்தல்களுக்கு முகம்கொடுத்த வேளையில் எல்லாம் தமக்கு விமோசனம் கிடைக்கும் என்ற ஆதங்கத்துடன் அரசியல் தலைமைகளுக்கு வாக்களித்து வாக்களித்து இறுதியில் ஏமாற்றம் அடைந்ததுதான் இடம்பெயர்ந்த முஸ்லிம்களின் நிலைமைகள்.
ஒவ்வொரு வருடமும் நிறைவடையும் போதெல்லாம் தமக்கு அடுத்த வருடம் விமோசனம் கிடைக்கும் என்று கனவுகள் கண்டதே தவிர தமது சொந்த இடத்தில் மீள்குடியேறுவதற்கான எந்தவித முனைப்புகளும் மேற் கொள்ளப்படவில்லை என்பதே உண்மை.
வடமாகாண முஸ்லிம்களின் மீள் குடியேற்றம் மற்றும் அவர்களின் இழப்புக்களுக்கான நஷ்ட ஈடுகள் வழங்கள் போன்ற விடயங்களில் முற்றிலும் வெற்றி கிட்டாத நிலையில் மற்றய சமுகத்திற்க வழங்கும் நிலையில் இவர்களை கிள்ளுக்கீரைகளாக அரசியல் வாதிகள் வைத்திருந்தமை எல்லாம் இச்சமுகத்தின் வீழ்ச்சிக்கு வித்திட்டது எனலாம்.
வடமாகாணத்தில் முஸ்லிம் பிரதேசங்களை நேரில் சென்று பார்க்கும்போது முஸ்லிம்களின் இழப்புக்களுக்கு வேறெந்த ஆதாரங்களும் தேவைப்படாது. ஆனால் இவ்வாறான இழப்புக்களுக்கு முகம் கொடுத்த ஒரு சமுகம் இன்று நாதியற்று சமுகத் தலைமைகள் இன்றி நிலைதடுமாறும் ஒரு நிலைக்கு பின்தள்ளப்பட்டமைக்கு முஸ்லிம் அரசியல் தலைமைகளைலே காரணம் என வடமாகாண முஸ்லிம்கள் தெரிவிக்கின்றனர்.
மக்கள் இடம்பெயர்ந்து பல்வேறுபட்ட மாவட்டங்களில் தத்தளிதுக் கொண்டிருந்த நேரத்தில் மக்கள் சரியான முறையில் அடையாளங் காணப்பட்டு அவர்களின் நலன்களில் ஆக்கபூர்வமான எந்த நடவடிக்கைகளையும் முஸ்லிம்களைப் பிரிதி நிதிதத்துவப் படுத்தும் அரசியல்வாதிகள் செய்திருக்கவில்லை அவ்வாறு செய்திருந்தால் இன்று முஸ்லிம்கள் மேற் குறிப்பிட்டதுபோல் நீண்டதொரு வரலாற்றை அகதி வாழ்க்கையில் கழித்திருக்கவேண்டிய தேவை ஏற்பட்டிருக்காது.
இன்று 23 வருடங்கள் கடந்துள்ள நிலையில் முஸ்லிம்களின் மீள் குடியேற்ற விடயத்தில் உறுதிப்பாடான நடவடிக்கைகளை மேற் கொள்வதற்கு ஒரு முஸ்லிம் அமைச்சு இல்லாது வடமாகாணத்தில் முஸ்லிம்கள் சார்பாக இருந்த அமைச்சர் றிஷாட் பதியுதீனுக்கு தற்போதைய அரசில் வேறு ஒரு அமைச்சு வழங்கப்பட்டதால் முஸ்லிம்களின் மீள் குடியேற்றம் கேள்விக்குறியாகி விட்டது.
வடமாகாண முஸ்லிம்களின் பல பூர்வீகங்கள் இன்று அழிவுக்குமேல் அழிவினையே அடைந்து செல்வதுடன் முஸ்லிம்களுக்குச் சொந்தமான பல இடங்கள் சூறையாடப்பட்டுக் கொண்டே வருவதாக பாதிக்கப்பட்ட முஸ்லிம்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
வடமாகாணத்தைப் பொருத்தமட்டில் இன்று அதிகமான இழப்புக்களுக்கு உள்ளானவர்கள் மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்த முஸ்லிம்களே காணப்படுகின்றனர். இவர்களின் சொந்த இடங்களில் பெரும்பான்மையான பகுதிகள் அழிவடைந்து காணப்படுகின்றன.
இம் மக்கள் தமது சொந்த இடங்களை தமக்கு மீளப் பெற்று அதற்கான வசதிகளைச் செய்து தருமாறு கூறிய போதிலும் அது இன்றுவரை குறைத்து மதிப்பிடப்படும் ஒரு விடயமாகவே நோக்கவேண்டியுள்ளது.
தற்போது அரசாங்கத்தின் மீள் குடியேற்ற நடவடிக்கைகள் இடம்பெற்றாலும் அது அம்மக்களுக்கு போதுமானதாக இல்லை என்றே கூறுகின்றனர். குறிப்பாக போக்குவரத்து, குடிநீர், மின்சாரம் போன்ற விடயங்கள் முக்கிய மக்களுக்குத் தேவையான போதும் அவை இன்று பல மீள் குடியேற்ற கிராமங்களுக்கு நிறைவானதாக செய்து கொடுக்கப்படவில்லை என்றும் தமக்கான நிரந்தர வீட்டு விடயத்தில் இந்திய வீடமைப்புத் திட்டம் என்ற போர்வையில் பல்வேறுபட்ட இழுத்தடிப்புக்களே இடம்பெற்று வருவதுடன் மக்களும் ஏமாற்றப்பட்டுக் கொண்டிருப்பாதாக கூறப்படுகின்றது.
வடமாகாணத்தில் உள்ள முஸ்லிம் மக்களின் மீள் குடியேற்றம் உள்ளிட்ட அனைத்து விடயங்களும் இனிவரும் காலங்களிலாவது நல்ல திடமாக திட்டங்களை திறமை வாய்ந்தவர்களால் தீட்டப்படும்போது ஓரளவுக்காவது முன்னெடுத்துச் செல்ல முடியும்.
ஆனால் தற்போதுள்ள நிலையில் எந்தவொரு கட்சியாலும் முஸ்லிம்கள் விடயத்தில் ஒற்றுமைப்படாத வரையில் முஸ்லிம்கள் தொடர்பான எந்தவொரு விடயங்களிலும் முன்னேற்றம் காண முடியாது என்பதே அரசியல் ஆய்வாளர்களின் கூற்றாகும்.
கடந்த காலங்களில் வடமாகாண முஸ்லிம்களின் மீள் குடியேற்றத்தின் குறைபாடுகளையாவது கவனத்திற் கொண்டு இனியாவது அவர்களின் மீள் குடியேற்ற முன்னேற்றங்களில் அக்கறை செலுத்தப்படல் வேண்டும்.
வடமாகாணத்தில் இருந்து இடம் பெயர்ந்த முஸ்லிம்களை அவர்களின் சொந்த இடங்களின் மீள் குடியேற்ற வேண்டுமானால் அதற்குத் தனியானதொரு மீள் குடியேற் அமைச்சினை பாதிக்கபப்ட்ட பகுதியைப் பிரதி நிதித்துவப்படுத்தும் ஒரு முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினருக்கு அரசு வழங்கும் பட்சத்தில் அந்த நடவடிக்கைகளில் ஓரளவாவது முன்னேற்றம் காணலாம் என 23 வருடங்களாக அகதிகளாக வாழும் மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
இந்த விடயத்தில் முஸ்லிம் சமுகம் குறிப்பாக புத்தி ஜீவிகள் அடங்கிய பொது நலவாதிகள் ஒன்று சேர்ந்து வடமாகாண முஸ்லிம்களின் மீள் குடியேற்றத்திற்காவது ஒரு தனியான அமைச்சினை வழங்குவதற்கு ஜனாதிபதிக்கு அழுத்தங் கொடுக்கவேண்டும் என வடமாகாண முஸ்லிம்கள் கோரிக்கைகள் முன் வைக்கின்றனர்.
இனிவரும் காலங்களிலாவது இடம்பெயர்ந்த மக்களின் நலன்களில் அரசாங்கம் அதீத கவனம் செலுத்தி இடம்பெயர்ந்த மக்களின் தற்போதைய புள்ளிவிபரங்களை பாரபட்சமற்ற விதத்தில் மேற் கொள்வதற்கு தூர நோக்குடன் ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை மேற் கொள்வதே பாதிக்கப்பட்ட மக்களுக்கு பயனுள்ள விடயங்களாக அமையும்.
Post a Comment