இறந்த பச்சிளம் குழந்தையின் சிறுநீரகம் - 22 வயது இளம் பெண்ணுக்கு பொருத்தி சாதனை
பிரிட்டனில், பிறந்து ஐந்து வாரங்களே ஆன குழந்தையின் சிறுநீரகம், 22 வயது பெண்ணுக்கு, அறுவை சிகிச்சை மூலம் பொருத்தப்பட்டுள்ளது.
லண்டனை சேர்ந்தவர், சமீரா கவுசர், (வயது 22) இவரது சிறுநீரகம் செயல் இழந்ததால், பெரிதும் அவதிப்பட்டார். இதனால், லீட்ஸ் நகரில் உள்ள, செயின்ட் ஜேம்ஸ் பல்கலைக் கழக மருத்துவமனையில், டயாலிசிஸ் சிகிச்சை பெற்று வந்தார். அதே மருத்துவமனையில், சில மாதங்களுக்கு முன், ஒருவருக்கு குழந்தை பிறந்தது. எனினும், பிறந்த ஐந்தாவது வாரத்தில், இதயக் கோளாறு காரணமாக, அக்குழந்தை இறந்தது.
இதையடுத்து, குழந்தையின் பெற்றோர், தங்கள் குழந்தையின் உறுப்புகளை தானமாக வழங்க முன் வந்தனர். அதே மருத்துவமனையில், டயாலிசிஸ் சிகிச்சை பெற்று வந்த, சமீராவுக்கு, உயிரிழந்த குழந்தையின் சிறுநீரகத்தை பொருத்த, டாக்டர்கள் திட்டமிட்டனர். அதன் படி, குழந்தையின் சிறுநீரகம், சமீராவின் உடலில் பொருத்தப்பட்டது. "பச்சிளம் குழந்தையின் சிறுநீரகம், 22 வயது பெண்ணுக்கு எப்படி பொருந்தும்?' என, பலர் கேள்வி எழுப்பினர். எனினும், கருவில் வளரும் குழந்தைக்கு, 37 வாரங்களிலேயே, சிறுநீரகம் முழு வளர்ச்சி அடைந்து விடுவதாக, டாக்டர்கள் தெரிவித்தனர். அதன் படி, சமீராவின் உடலில் பொருத்தப்பட்டுள்ள சிறுநீரகம், நல்ல முறையில் செயல்படத் தொடங்கியுள்ளதாகவும், அதனால், அவர் ஆரோக்கியமாக இருப்பதாகவும் டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து, சமீராவுக்கு அறுவை சிகிச்சை மேற்கொண்ட டாக்டர் கூறியதாவது: பொதுவாக, பிறந்த குழந்தையின் சிறுநீரகத்தை, குறிப்பிட்ட சில சிகிச்சைகளுக்குப் பின், பெரியவர்களின் உடலில் பொருத்தி, நல்ல முறையில் இயங்க வைக்க முடியும். பச்சிளம் குழந்தையை இழந்த பெற்றோரிடம், உறுப்புகளை தானமாகப் பெறுவதில், மன சங்கடங்கள் ஏற்படும் என்பதால், பெரும்பாலும், இவ்வகை ஏற்பாடுகளை, டாக்டர்கள் தவிர்த்து விடுகின்றனர். இந்த புதிய முயற்சி வெற்றி அடைந்துள்ளதால், இனி வருங்காலங்களில் அனைத்து டாக்டர்களும், பெற்றோரிடம் தயக்கம் காட்டுவதை தவிர்ப்பர். பெற்றோர் மத்தியிலும், உறுப்பு தானம் பற்றிய விழிப்புணர்வு ஏற்படும். இவ்வாறு டாக்டர்கள் கூறினார்.
Post a Comment