வாக்காளர் பட்டியல் ஆட்சேபனை 2013.10.30ம் திகதி வரை
பெறுமதி மிக்க வாக்கு பலத்தின் மூலமே பிரதேசத்திற்கான மக்கள் பிரதிநிதிகளை தேர்ந்தெடுக்க முடியும். வாக்கு பலம் இல்லாத சமூகம் அரசியல் அநாதைகளாக்கப்பட்டு விடும்.
நடந்து முடிந்த 2013 வடமகாண சபை தேர்தல் பெறுபேறுகள் வடமாகாண மக்களுக்கு சிறந்த பாடம் ஒன்றினை புகட்டியுள்ளது. குறிப்பாக யாழ் மாவட்டத்தைச் சேர்ந்த முஸ்லிம் மக்களது வாக்குகளின் எண்ணிக்கை சுமார் 1200ற்கும் உட்பட்டவையாகவே உள்ளது. இந்த வாக்கு பலத்தின் மூலம் எதிர்காலத்தில் ஒரு மாநகர சபை உறுப்பினர் நியமனத்தை கூட பெற்றுக் கொள்ள முடியாத துரதிஸ்ட நிலையே உருவாகும். இந்த நிலையில் இருந்து மாற்றம் பெற்று எதிர்காலத்தில் கணிசமான வாக்கு பலமுள்ள சமூகமாக மிளிர முயற்சிக்க வேண்டும்.
2013ம் ஆண்டின் வாக்காளர் பெயர் பட்டியலுக்கான விண்ணப்பம் மற்றும் ஆட்சேபனைகளை தெரிவிப்பதற்கான கால எல்லை எதிர்வரும் 30ம் திகதி புதன்கிழமையுடன் நிறைவடையவுள்ளதாக தேர்தல்கள் செயலகம் தெரிவித்துள்ளது.
அவற்றில் புதிதாக உள்ளடக்கப்படவுள்ள பெயர்கள் மற்றும் 2013ஆம் ஆண்டிற்கான வாக்காளர் பெயர் பட்டியலில் இருந்து நீக்கப்படும் பெயர்களின் பட்டியல் மாவட்ட தேர்தல் அலுவலகம் , கிராம உத்தியோகத்தர் அலுவலகம், பிரதேச செயலகங்கள், உள்ளூராட்சி மன்ற அலுவலகங்கள் மற்றும் உப தபால் நிலையங்களில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளதாக பிரதித் தேர்தல்கள் ஆணையாளர் தெரிவித்துள்ளார்.
இந்த காலப்பகுதியில் உரிய தகுதியிருந்தும் 2013ம் ஆண்டுக்கான வாக்காளர் பட்டியலில் பெயர்கள் இணைத்துக் கொள்ளப்படவில்லை என்பது அறிந்தால் இதற்கான விண்ணப்பப்படிவத்தை பூர்த்தி செய்து தமது பெயர் உள்ளடக்கப்பட வேண்டிய மாவட்ட தேர்தல்கள் அலுவலகத்திற்கு அனுப்பி வைக்கவும்.
அதே போன்று தகுதியற்ற வாக்காளர் ஒருவரின் பெயர் பட்டியலில் உள்ளடக்குவதற்கு பிரேரிக்கப்ட்டிருந்தால் அதற்கான ஆட்சேபனையை தெரிவிக்கக்கூடிய விண்ணப்பங்களைப் பெற்று அதைப் பூர்த்தி செய்து சமர்ப்பிக்க முடியும்.
விண்ணப்பம் மற்றும் ஆட்சேபனைகள் கிடைக்கப் பெற்றதன் பின்னர் அது தொடர்பில் ஆராய்ந்து பார்த்து 2013ம் ஆண்டுக்கான வாக்காளர் பெயர் பட்டியல்களை தயாரிக்க இருப்பதனால் அனைவரும் இதனை அலட்சியப் போக்காக விட்டு விடாது கரிசணையோடு வாக்குப் பதிவினை மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றீர்கள்.
Post a Comment