Header Ads



ஆலயத்தில் சுமார் 150 பவுண் எடையுள்ள தங்க நகைகள் கொள்ளை

(Tn) பொன்னாலை வரதராஜப் பெருமாள் ஆலயத்தில் சுமார் 150 பவுண் எடையுள்ள தங்க நகைகள் திருடப்பட்டுள்ளன. இத் திருட்டுச் சம்பவம் நேற்று முன்தினம் புதன்கிழமை இரவு இடம்பெற்றுள்ளது.

கூரை ஓடுகளைப் பிரித்து உள்நுழைந்த திருடர்கள் அங்கு பெட்டகத்தில் வைக்கப்பட்டிருந்த 150 பவுண் எடையுள்ள தங்க நகைகளை திருடிச் சென்றுள்ளனர். அத்துடன் சுவாமிக்கு அணிவித்திருந்த வெள்ளி அங்கிகளும் திருடப்பட்டுள்ளன. சுமார் ஒரு கோடி ரூபா பெறுமதியான பொருட்கள் திருடப்பட்டுள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது.

புதன்கிழமை நள்ளிரவுக்குப் பின்னர் இத்திருட்டு இடம்பெற்றுள்ளது. ஆலயத்தின் மடப்பள்ளிக் கூரை வழியாக உள்நுழைந்த திருடர்கள் அந்த அறையின் கதவுகளை உடைத்து ஆலயத்தினுள் நுழைந்துள்ளனர். பின்னர் களஞ்சியத்தின் கதவுகளை உடைத்து உட்சென்று அங்கிருந்த குளிர்பானங்களை பருகியதுடன் பிஸ்கட்டையும் சாப்பிட்டு விட்டு கைவரிசையைக் காட்டியுள்ளனர்.

அந்த அறையிலிருந்த மண்வெட்டி, அலவாங்கு போன்றவற்றால் ஆலய மூலஸ்தானத்திற்குச் செல்லும் கதவை உடைத்து எழுந்தருளி மண்டபத்தில் வைக்கப்பட்டிருந்த பெட்டகத்தை உடைத்து நகைகளைத் திருடியுள்ளனர்.

குறித்த பெட்டகத்திற்கு எட்டு பூட்டுக்கள் போடப்பட்டிருந்தன. அத்தனை பூட்டுக்களையும் உடைத்து பெட்டகத்தைத் திறந்தே நகைகளைத் திருடியுள்ளனர். திருவிழாக் காலங்களில் சுவாமிக்கு அணிவிக்கும் அத்தனை நகைகளும் திருடப்பட்டுள்ளன. அத்துடன் ஸ்ரீதேவி, பூமாதேவி சமேத நாராயணப் பெருமானுக்கு சாத்தப்பட்டிருந்த மூன்று வெள்ளி அங்கிகளும் திருடப்பட்டுள்ளன. ஆலயத்திலிருந்த உண்டியல்களும் உடைக்கப்பட்டு அதற்குள்ளிருந்த பணமும் திருடப்பட்டுள்ளது.

திருடர்கள் மிக நீண்ட நேரம் ஆலயத்திற்குள் தங்கி நின்றிருக்கலாம் என்று நம்பப்படுகின்றது. மாமிசம் சேர்த்து தயாரிக்கப்பட்ட கொத்துரொட்டிப் பார்சல் ஒன்று பிரிக்கப்படாத நிலையில் ஆலயத்தினுள் காணப்பட்டது. திருடர்கள் புகைபிடித்த பின்னர் எரிந்த பீடியின் அடிப் பகுதிகள் எழுந்தருளி மண்டபம் உள்ளிட்ட மண்டபங்களில் காணப்படுகின்றன.

ஆலயத்தின் உள் மண்டபத்தில் வைக்கப்பட்டிருந்த ஏணி மணிக்கோபுரத்தினுள் வைக்கப்பட்டிருக்கின்றது. நகைகளைத் திருடிய பின்னர்திருடர்கள் மணிக்கோபுரம் வழியாக ஏறித் தப்பிச் சென்றிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகின்றது.

நேற்றுக் காலைவேளை வழமையான பூசைக்காக ஆலயத்திற்கு வந்த அர்ச்சகர் ஆலயத்தின் உள் கதவுகள் உடைக்கப்பட்டிருப்பதையும் நகைகள் திருடப்பட்டிருப்பதையும் கண்டு ஆலய பரிபாலன சபைக்கு அறிவித்ததைத் தொடர்ந்து இது தொடர்பாக வட்டுக்கோட்டைப் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டது. ஆலயத்திற்கு வந்த பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டனர். ஆலயத்திற்குள் எவரும் செல்ல வேண்டாமென்று தெரிவித்துள்ள பொலிஸார், விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இதேவேளை, கடந்த 1987 ஆம் ஆண்டும் இந்த ஆலயத்தில் இதேபோன்ற தொரு பாரிய திருட்டு இடம்பெற்றது. இதன்போது பல இலட்சக்கணக்கான ரூபா பெறுமதியான நகைகளும் பொருட்களும் திருடப்பட்டிருந்தன.

No comments

Powered by Blogger.