Header Ads



லண்டனில் தப்பு செய்த ஹிலாரி கிளிண்டன் - 14 நாட்களுக்குள் அபராதம் செலுத்துவாரா..?

முன்னாள் அமெரிக்க அதிபர் பில் கிளிண்டனின் மனைவியும், அமெரிக்காவின் முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சருமான ஹிலாரி கிளிண்டன் சமீபத்தில் இங்கிலாந்து நாட்டிற்கு சென்றிருந்தார். அமெரிக்காவின் ராஜதந்திர செயல்பாடுகளில் ஒரு புதிய சகாப்தத்தை உருவாக்கியதற்காக ஹிலாரி கிளிண்டனைப் பாராட்டி லண்டனில் செயல்பட்டு வந்த சத்தாம் ஹவுஸ் விருது வழங்கும் நிகழ்ச்சி ஒன்றிற்கு ஏற்பாடு செய்திருந்தது. இது ஒரு அரசு சாராத, லாப நோக்கில்லாமல் இயங்கும் நிறுவனம் ஆகும். 

மத்திய லண்டனில் உள்ள செயின்ட் ஜேம்ஸ் சதுக்கத்திற்கு அருகே இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. தனது பரிவாரங்களுடன் வந்த ஹிலாரி கிளிண்டன் தன்னுடைய மெர்சிடிஸ் காரை அங்கு நிறுத்திவிட்டு விழா நிகழ்ச்சிகளுக்குச் சென்றுவிட்டார். அங்கு காரை நிறுத்துவதற்கு ஒரு மணி நேரத்திற்கு 3.30 பவுண்டு கட்டணம் செலுத்தவேண்டும். ஆனால், அவருடன் வந்த யாரும் இந்தக் கட்டணத்தைச் செலுத்தவில்லை. 

நிகழ்ச்சி முடிந்து வெளியே வந்து காரில் ஏறும்போது அங்கு காவலில் இருந்த போக்குவரத்துக் காவலர் 80 பவுண்டு அபராதம் செலுத்துமாறு கூறியுள்ளார். ஹிலாரியின் கார் அங்கு 45 நிமிடங்கள் நின்றிருந்ததாக வெஸ்ட்மினிஸ்டர் நகரசபையின் உறுப்பினரான டேனியல் அஸ்டைர் கூறினார். உலக அளவில் பிரபலமானவராக இருப்பினும் அனைவருக்கும் விதிமுறைகள் பொதுவானவையே என்றும் அவர் தெரிவித்தார். 

இந்த அபராதத் தொகையை 14 நாட்களுக்குள் கட்டினால் இந்தத் தொகை பாதியாக அதாவது 40 பவுண்டாகக் குறைக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது. தலைநகரின் நெரிசல் மிகுந்த மையப்பகுதியில் தினசரி பத்து பவுண்டு கட்டணம் செலுத்துவதற்கே அமெரிக்க உயர் அதிகாரிகள் மறுக்கின்றனர் என்று லண்டன் மேயர் போரிஸ் ஜான்சன் ஏற்கனவே தெரிவித்துள்ளார். எனவே, ஹிலாரி கிளிண்டன் மறுப்பேதும் சொல்லாமல் இந்த அபராதத்தைக் கட்டுவாரா என்பது கவனிக்க வேண்டிய விஷயமாகின்றது.

No comments

Powered by Blogger.