Header Ads



அப்பாவி மக்களின் 100 கோடி ரூபா பணத்தை ஏப்பமிட்டது யார்..?

இலங்கையில், மலையகத்தில் அரசினால் நிர்வகிக்கப்படும் தோட்டங்களைச் சேர்ந்த தொழிலாளர்களுக்குச் சேரவேண்டிய சுமார் 100 கோடி ரூபா அளவான ஓய்வுகால கொடுப்பனவுகளைக் கோரி சட்டநடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.

மலையகத்திலுள்ள 400க்கும் மேற்பட்ட தோட்டங்களில் குத்தகை அடிப்படையில் தனியார் நிறுவனங்களிடமுள்ள தோட்டங்கள் தவிர, கண்டி, மாத்தளை மற்றும் மொனராகலை ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த 15 தோட்டங்கள் வரை அரசினாலேயே நிர்வகிக்கப்பட்டு வருகின்றன.

இவ்வாறு இந்த 3 மாவட்டங்களிலும் அரசினால் நிர்வகிக்கப்பட்டுவரும் தோட்டங்களில் தொழிலாளர்களிடமிருந்து அறவிடப்பட்ட சேமலாபம் மற்றும் நம்பிக்கை பொறுப்பு நிதிக் கொடுப்பனவுகளும் (ETF, EPF) ஓய்வூதியக் கொடுப்பனவுகளும் தொழிலாளர்கள் ஓய்வுபெறும் காலத்தில் கடந்த 10 முதல் 15 ஆண்டுகளுக்கும் மேலாக கொடுக்கப்படாமல் இருந்து வந்துள்ளன. 

அரசின் கீழ் உள்ள 3 நிறுவனங்களின் கீழ் இயங்கும் இந்தத் 15 தோட்டங்களும் முறையாக இயங்காதபடியாலேயே தொழிலாளர்களின் கொடுப்பனவுகள் உரிய முறையில் வைப்பிலிடப்படாமல் இருந்துள்ளதாக இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் தலைவரும் பொருளாதார அபிவிருத்தி துணையமைச்சருமான முத்து சிவலிங்கம் பிபிசி.யிடம் தெரிவித்தார்.

தோட்டத் தொழிலாளர்கள் சம்பள உயர்வு, சம்பள பாக்கி போன்றன கோரி கடந்த காலங்களில் பல போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர்.

கண்டி, ஹந்தானை தோட்டத் தொழிலாளர்கள் சார்பில் அண்மையில் தொடரப்பட்ட வழக்கின் தீர்ப்பில் தொழிலாளர்களுக்கான கொடுப்பனவுகளை மீளச் செலுத்துமாறு நீதிமன்றம் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளது.

அந்த உத்தரவை முன்மாதிரியாகக் கொண்டு, ஏனைய தோட்டங்களைச் சேர்ந்த தொழிலாளர்கள் சார்பிலும் வழக்குகள் தாக்கல் செய்து சுமார் 100 கோடி ரூபா அளவான தொழிலாளர்களின் பணத்தை மீளப் பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுக்கவுள்ளதாக இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் கூறுகின்றது.

இதேவேளை, அரச நிர்வாகங்களின் கீழுள்ள தோட்டங்களிலுள்ள பழமையான, பெறுமதி மிக்க மரங்களை வெட்டி விற்று தொழிலாளர்களின் ஓய்வுகால கொடுப்பனவுகளை செலுத்த அரசாங்கம் முன்வந்துள்ளதாகவும் அமைச்சர் முத்து சிவலிங்கம் கூறினார்.

இல்லாவிட்டால் அரச திறைசேரியிலிருந்து பணத்தைப் பெற்றுக்கொடுக்குமாறு நீதிமன்றம் ஊடாக அரசாங்கத்தைக் கோரவுள்ளதாகவும் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் தலைவர் தெரிவித்தார்.

மலையகத்தில் பெரும்பான்மை தொழிலாளர்களை சந்தாதாரர்களாகக் கொண்டுள்ள தொழிற்சங்கமான இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் அரசாங்கக் கூட்டணியில் நீண்டகாலமாக பங்காளிக் கட்சியாக இருந்துவருகின்றமை குறிப்பிடத்தக்கது. bbc

No comments

Powered by Blogger.