Header Ads



PMGG ஆதரவாளர் மீது தாக்குதல்

அமைச்சர் றிசாட் பதியுதீன் தலைமையில் வந்த கும்பலினால் தமது ஆதரவாளர் ஒருவர் இன்று காலை தாக்கப்பட்ட சம்பவத்தினை நல்லாட்சிக்கான மக்கள் இயக்கம் (PMGG) வன்மையாகக் கண்டிக்கின்றது என PMGG விடுத்துள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

மன்னார் மாவட்டத்திலுள்ள சிலாவத்துறை கொக்குப்பறையான் கிராமத்தில் ரோமன் கத்தோலிக தமிழ்க் கலவன் பாடசாலையில் அமைந்துள்ள வாக்குச் சாவடியில் 2393  வாக்காளர்கள் பதிவாகியுள்ளனர். இந்த வாக்குகளை தமது வழமையான தில்லுமுல்லு நடவடிக்கைகள் மூலம் அரசாங்கத்திற்கும், தனக்குமாக வாக்களிக்கச் செய்யும் முயற்சியில் மன்னார் மாவட்ட ஐ.ம.சு. முன்னணி வேட்பாளரும், அமைச்சர் றிஷாத் பதியுத்தீனின் சகோதரருமான றிப்கான் பதியுத்தீன் தனது ஆதரவாளர்களுடன் அந்த வாக்களிப்பு நிலையத்திற்குச் சென்று இன்று காலை முயற்சி செய்துள்ளார்.

எனினும் இவர்களின் இந்த முறைகேடான நடவடிக்கைக்கு ஒத்துழைக்க அந்த வாக்களிப்பு நிலையத்தின் சிரேஷ்ட வாக்களிப்பு நிலைய அதிகாரி மறுப்புத் தெரிவித்து அவர்களை வாக்களிப்பு நிலையத்திலிருந்து வெளியேற்றியுள்ளார்.
இவ்வேளையில் PMGG தலைமையிலான அரசியல் கூட்டமைப்பின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் அவரது ஆதரவாளர்களுடன் அந்த வாக்குச் சாவடிக்குச் சென்றுள்ளார். அங்கு இடம்பெறும் வாக்களிப்பு நிலைமைகளை அவதானித்து சிரேஷ்ட வாக்களிப்பு நிலைய அதிகாரியிடமுள்ள பதிவேட்டிலும் தனது கருத்தினைப் பதிவு செய்து விட்டு வெளியே வருவதற்கிடையில் வெளியில் நின்றிருந்த வேட்பாளர் றிப்கான் அமைச்சர் றிசாஷ் பதியுத்தீனுக்கு இதுபற்றி தகவல் தெரிவித்து அவரை அங்கு வரவழைத்துள்ளார்.
PMGG குழுவினர் வாக்களிப்பு நிலையத்திலிருந்து வெளி வந்து தமது வாகனத்தில் ஏறியிருக்கையில் அமைச்சர் றிஷாத் பதியுத்தீனும் அவரது ஆதரவாளர்கள் சகிதம் அங்கே வந்திறங்கியுள்ளனர். இச்சந்தர்ப்பத்தில் அமைச்சர் றிசாட் பதியுதீனுடன் வருகை தந்த குண்டர் ஒருவர் PMGG குழுவினை நோக்கி தூசன வார்த்தைகளால் திட்டிக்கொண்டு அவர்களின் வாகனத்தை நோக்கி வந்து முன் ஆசனத்தில் அமர்ந்திருந்த PMGG செயற்பாட்டாளர் ஒருவரை தாக்கியுள்ளார். வாகனத்தின் கதவுகளைத் திறந்து ஏனையோரையும் இவர் தாக்க முயற்சித்தபோதிலும் வாகனத்தின் கதவுகள் மூடப்பட்டிருந்ததால் அவரால்  ஏனையோர் மீது கை வைக்க முடியாமற் போனது. இதையடுத்து PMGG குழுவினர் அங்கிருந்து விரைந்து சென்றுவிட்டனர்.

இன்று காலை 11 மணியளவில் நடைபெற்ற இத்தாக்குதல் சம்பவம் அமைச்சர் றிஷாட் பதியுத்தீனின் முன்னிலையிலே நடைபெற்றுள்ளது. தனது தலைமையில் வந்த தனது குண்டர் ஒருவர் இவ்வாறு  Pஆபுபு உறுப்பினர்களை அநாகரிகமாக திட்டுவதனையும், பின்னர் காடைத்தனமான முறையில் தாக்குவதனையும் அமைச்சர் றிசாட் பதியுதீன் நிறுத்துவதற்கோ அல்லது கட்டுப்படுத்துவதற்கோ ஒரு சிறிதும் முயற்சிக்கவில்லை.

ஆக அவரது வழிகாட்டுதலின்பெயரிலேயே இந்த வன்முறைச் சம்பவம் நடந்துள்ளது என இதனை நேரில் கண்ட PMGG உறுப்பினர்கள் தெரிவிக்கின்றனர். பொறுப்புள்ள அரசியல் பதவியில் இருக்கும் அமைச்சர் றிசாட் பதியுதீன் தலைமையில் நடைபெற்ற இந்த அரசியல் காடைத்தனத்தை நல்லாட்சிக்கான மக்கள் இயக்கம் மிக வன்மையாகக் கண்டிக்கின்றது.

இது தொடர்பில் சிலாபத்துறை பொலிஸ் நிலையத்தில் உத்தியோக பூர்வ முறைப்பாடு செய்யப்பட்டிருக்கிறது. இது தொடர்பில் பொலிஸார் உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் எனவும் PMGG வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது.

2 comments:

  1. அரசியல் காடையர்களே...! முடிந்தால் ஜனநாயக ரீதியான சுமூகமான ஒரு தேர்தலை நடாத்தி வென்று காட்டுங்கள், அதுதான் உண்மையான வெற்றி!

    ReplyDelete
  2. அரச குட்டையில் ஊறிய மட்டையாச்சே,
    இவற்றைத்தான் இவர்களிடம் எதிர்பார்க்கமுடியுமே தவிர,நல்ல பண்புகளையல்ல.
    நிச்சயமாக அல்லாஹ் பொறுமையாளர்களுடன்தான் இருக்கின்றான்.

    ReplyDelete

Powered by Blogger.