Header Ads



சவூதி அரேபியாவின் பொது மன்னிப்பைப் பயன்படுத்திக்கொள்ள வேண்டுகோள்

சவூதி அரேபியாவில் சட்ட மீறலாகத் தங்கியோ, முறையான ஆவணங்கள் இன்றியோ பணி செய்து வரும் வெளிநாட்டவர்கள் எவ்வித தண்டனையோ, அபராதமோ இன்றி பொது மன்னிப்பின் கீழ்  தாயகம் திரும்பிட இன்னும் 45 நாள்களே மீதமுள்ள நிலையில், அவ்வாறான நிலையில் உள்ள இந்தியர்கள் இந்த வாய்ப்பைத்  தவறவிடாமல் பயன்படுத்திக் கொள்ளும்படி சவூதி அரேபியாவிற்கான இந்தியத் தூதர் ஹமீது அலீ ராவ் கேட்டுக்கொண்டுள்ளார்.

முதலில், நிபந்தனைகளற்ற பொதுமன்னிப்பை வழங்க முன் வந்ததுடன், மேலும் நான்கு மாதங்களுக்கு சலுகைக் காலத்தை நீட்டித்துத் தந்த சவூதி அரேபிய அரசர் அப்துல்லாஹ் பின் அப்துல் அஸீஸுக்கு இந்தியத் தூதர் தன் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்.

சவூதி மன்னர் அறிவித்திருந்த மூன்று மாத பொதுமன்னிப்புக் காலம் மேலும் நான்கு மாதங்கள் நீட்டிக்கப்பட்டு இந்த அரபிய ஆண்டு(1434 H) இறுதி வரை வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது அறிந்ததே.

இந்தப் பொதுமன்னிப்புத் திட்டம் குறித்த கலந்துரையாடலாக, சில நாள்களுக்கு முன் இந்தியத் தூதரக அரங்கில் இந்திய சமூக சேவகர்களையும், தன்னார்வலர்களையும் நட்பார்ந்த அடிப்படையில் சந்தித்த இந்தியத் தூதர் பொது மன்னிப்பு குறித்த விழிப்புணர்வை உண்டாக்கும்படி இந்தியப் பொதுநலச் சேவகர்களையும், ஊடகப் பிரதிநிதிகளையும் கேட்டுக் கொண்டார்.

இதுவரை, இந்த பொதுமன்னிப்பின் கீழ், இந்தியர்களில் 3,59,997 பேர் தங்கள் பணிகளை முறையான ஆவணங்களுடன் மாற்றிக் கொண்டுள்ளனர். 3,55,035 இந்தியர்கள் தங்கள் பணிப்பெயர்களில் திருத்தம் செய்துள்ளனர் என்றும், 4,66,689 பேர் உரிமங்களைப் புதுப்பித்துள்ளனர் என்றும் அவர் புள்ளி விவரங்களை அளித்தார். மேலும் 88,737 இந்தியர்கள் தாயகம் திரும்புவதன் பொருட்டு அவசரக் கடவுச் சான்று (Emergency Certificate) கேட்டு விண்ணப்பித்துள்ளனர் என்றும் அவர் தெரிவித்தார்.

இந்தப் பொதுமன்னிப்புத் திட்டத்தின் கீழ் இந்தியர்கள் தேவையான மாற்றங்களைப் பெறுவதற்கோ, தாயகம் மீளவோ உதவியாக உள்ள சவூதி உள்துறை அதிகாரிகளுக்கும், பிரதிபலனை எதிர்பாராமல் சக இந்தியர்களின் நலனை உத்தேசித்து களப்பணி ஆற்றி துயர் துடைக்கும் இந்தியத் தன்னார்வ சமூக சேவகர்களுக்கும் இந்தியத் தூதர் தன் நன்றிகளையும் பாராட்டுகளையும் தெரிவித்தார். இந்தப் பொதுமன்னிப்பு பற்றி அறியாமல் இருக்கும் இந்தியர்களிடம் இச்செய்தியை எடுத்துரைக்கும்படியும் இந்தியத் தன்னார்வத் தொண்டர்களையும் ஊடகப் பிரதிநிதிகளையும் அவர் கேட்டுக்கொண்டார்.

சந்திப்பின் போது, இந்தியச் சமூக சேவகர்களின் பல்வேறு வினாக்களுக்கு நட்பார்ந்த முறையில் விடையளித்த இந்தியத் தூதர், சவூதி அரேபியாவில் இந்தியர்களுக்கு இருக்கும் நற்பெயரைக் காத்துக் கொள்ள வேண்டும் என்று அறிவுரை அளித்தார்.

இந்தியத் தூதருடனான இச்சந்திப்பில் 250க்கும் மேற்பட்ட இந்தியச் சமூகத் தன்னார்வலர்கள், பலமொழிச் சமூகங்களிலிருந்தும், குறிப்பாக, கேரள, தமிழகம் உள்ளிட்ட தென்மாநிலத்தவர் கலந்து கொண்டனர். மலையாள அமைப்பின் ஷிஹாப் கொட்டுக்காடு,  ரியாத் தமிழ்ச் சங்க நிர்வாகிகள், செயற்குழு உறுப்பினர்கள், தஃபர்ரஜ் ஜமால்,  தம்மாமிலிருந்து தமிழ்நாடு பெற்றோர் சங்கத் தலைவர் வாசு சிதம்பரம், சர்வதேச இந்தியப் பள்ளியின் தம்மாம் பிரிவின் தலைவர் திருநாவுக்கரசு  உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

சந்திப்பின் போது, இந்தியத் தூதரகம் சார்பில் நல்ல முறையில் சிற்றுண்டி உபசரிப்பும் அளிக்கப்பட்டது. Inne

No comments

Powered by Blogger.