Header Ads



ஜெனிவா கூட்டத்தொடரில் பேசப்பட்ட இலங்கை விவகாரம்

சிறிலங்காவில் தன்னைச் சந்தித்த மனிதஉரிமை ஆர்வலர்கள், ஊடகவியலாளர்கள், சிவில் சமூத்தினர் அச்சுறுத்தப்பட்டதற்கு, ஐ.நா மனிதஉரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளை சிறிலங்காவுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ஜெனிவாவில் இன்று 09-09-2013 ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையின் 24வது அமர்வை ஆரம்பித்து வைத்து உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

சிறிலங்கா பயணத்தின் போது, ஒத்துழைப்பு வழங்கிய சிறிலங்கா அரசாங்கத்துக்கு நன்றி தெரிவித்துள்ள அவர், போருக்குப் பிந்திய சிறிலங்காவின் நிலைமையையும், மத சகிப்புத்தன்மை, ஆட்சிமுறைமை, சட்டத்தின் ஆட்சி என்பன உள்ளிட்ட பரந்தளவிலான மனிதஉரிமைகள் நிலைமையையும் கண்காணிப்பதே தனது பயணத்தின் நோக்கம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

சிறிலங்கா பயணம் குறித்த தனது அவதானிப்புகளை, பின்னர் இந்த அமர்வில் சமர்ப்பிக்கப் போவதாக குறிப்பிட்ட நவநீதம்பிள்ளை, சிறிலங்காவின் தன்னைச் சந்தித்த மனிதஉரிமை ஆர்வலர்கள், ஊடகவியலாளர்கள், சிவில் சமூகத்தினரின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதே தனது உடனடிக் கவனமாக உள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.

ஐ.நா மனிதஉரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளையை சந்தித்தவர்கள் அச்சுறுத்தப்பட்டது தொடர்பாக, ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில் பல்வேறு நாடுகளும் கண்டனம் தெரிவித்துள்ளன.

இன்று 09-09-2013 ஆரம்பமான 24வது ஐ.நா மனிதஉரிமைகள் பேரவைக் கூட்டத்தொடரில், சிறிலங்காவில் தன்னை சந்தித்தவர்கள் அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டது தொடர்பாக, ஐ.நா மனிதஉரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை சுட்டிக்காட்டியிருந்தார்.

இதையடுத்து உரையாற்றிய பல்வேறு நாடுகளின் பிரதிநிதிகள், நவநீதம்பிள்ளையை சந்தித்தவர்கள் அச்சுறுத்தப்பட்டதற்காக சிறிலங்கா அரசாங்கத்துக்கு கண்டனம் தெரிவித்தனர்.

ஜெனிவாவுக்கான அமெரிக்கத் தூதுவர் எலீன் சேம்பர்லைன் டோனஹே உரையாற்றும் போது, மனிதஉரிமைகள் விவகாரங்களை எதிர்கொள்வதற்கு, ஐ.நாவின் தொழில்நுட்ப உதவிகளை சிறிலங்கா பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தினார்.

நவநீதம்பிள்ளையின் சிறிலங்கா பயணத்தை வரவேற்றுப் பேசிய அவர், அவரால் சிறிலங்காவில் மனிதஉரிமைகள், நீதித்துறை, ஜனநாயக ஆட்சி குறித்த கவலைகள் தொடர்பாக ஆராய முடிந்ததாகவும் தெரிவித்துள்ளார்.

அதேவேளை நவநீதம்பிள்ளையின் சிறிலங்கா பயணத்தை வரவேற்ற ஐரோப்பிய ஒன்றியத்தின் பிரதிநிதி, நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

நவநீதம்பிள்ளையை சந்தித்தவர்கள் அச்சுறுத்தப்பட்டது தொடர்பாகவும் ஐரோப்பிய ஒன்றியப் பிரதிநிதி கவலை வெளியிட்டார்.

அதேவேளை, ஜேர்மனி பிரதிநிதி உரையாற்றியபோது, நவநீதம்பிள்ளையை சந்தித்தவர்கள் அச்சுறுத்தப்பட்டது குறித்து தாம் திகைப்படைந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

இது சிறிலங்காவில் உள்ள மனிதஉரிமை ஆர்வலர்கள், ஊடகவியலாளர்கள் எதிர்கொள்ளும் அச்சுறுத்தலின் மட்டத்தை வெளிப்படுத்தியுள்ளதாகவும் ஜேர்மனி பிரதிநிதி தெரிவித்துள்ளார்.

இதைடுத்து உரையாற்றிய, ஒஸ்ரியப் பிரதிநிதி, நவநீதம்பிள்ளையின் பயணத்தை அடுத்து, உள்ளூர் மனிதஉரிமை ஆர்வலர்கள் அச்சுறுத்தப்பட்ட சம்பவங்கள் தொடர்பான குற்றச்சாட்டுகள் குறித்து சிறிலங்கா அரசாங்கம் பதிலளிக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

No comments

Powered by Blogger.