அடுத்த மனிதனின் அந்தஸ்தை குறைக்கும் வண்ணம் எழுதுவதை தவிர்க்க வேண்டும் - வைஸ்
கருத்துச் சுதந்திரம் உள்ளது என்பதற்காக நினைத்ததையெல்லாம் சொல்லவோ எழுதவோ முடியாது என சட்டத்துறை வழக்கறிஞரும் ஊடகவியலாளருமான சட்டத்தரணி ஏ.எம்.வைஸ் தெரிவித்தார்.
'சிறந்த ஊடக கலாசாரத்தை நோக்கிய ஊடகத்துறையும் சட்டமும்' எனும் தலைப்பில் 'மாவட்ட அபிவிருத்தியில் பிரதேச ஊடகவியலாளர்களின் பங்களிப்பு' எனும் தொனிப்பொருளில் அரசாங்க தகவல் திணைக்களமும் மட்டக்களப்பு மாவட்ட செயலகமும் இணைந்து ஏற்பாடு செய்த மாவட்ட ஊடகவியலாளர்களுக்கான செயலமர்வில் விரிவுரை நிகழ்த்திய போதே அவர் இதனைத் தெரிவித்தார். தொடர்ந்து அவர் கருத்துத் தெரிவிக்கையில்,
உலகத்திலுள்ள எல்லாவற்றிற்கும் சில சட்டதிட்டங்கள்,விதிகள் உள்ளன.அதேபோன்று ஊடகத்துறைக்கும் சில மட்டுப்படுத்தல்,கட்டுப்பாடு உள்ளன. ஊடகத்துறையைப் பொறுத்த வரையில் ஒவ்வொரு பிரஜைக்கும் தான் கருத்துச் சொல்வதற்கு சுதந்திரம் உண்டு.ஆனால் அதற்காக நினைத்ததையெல்லாம் கருத்தாகவோ செய்தியாகவோ சொல்ல முடியாது.
ஊடகத்துறையில் சமூக வாழ்வுக்கு பாதிப்பான விடயங்கள்,நாட்டின் தேசிய பாதுகாப்புக்கு எதிரான நடவடிக்கைகள்,தவறை தூண்டும் விடயங்கள்,பாலியல் தொடர்பான புகைப்படங்கள்,நீதிமன்றத்தை அவமதிக்கும் விடயங்கள்,அதன் தீர்ப்பை விமர்சித்தல்,பொய்,பாரபட்சம் காட்டி எழுதுதல் உள்ளிட்ட அம்சங்கள் எழுதவோ பிரசுரிக்கவோ முடியாது.
அது மாத்திரமல்ல சில விடயங்கள் சட்டங்கள் என்பதை விட மனிதாபிமானத்துடன் எழுத வேண்டும். அடுத்த மனிதனின் அந்தஸ்தை குறைக்கும் வண்ணம் எழுதுவதை தவிர்க்க வேண்டும். சந்தேக நபர்களாக பிடிக்கப்படும் நபர்களை குற்றவாளிகள் என்று தீர்ப்பளிப்பதோ அவர்களை பாதிக்கும் வகையில் புகைப்படங்களை வெளியிடுவதோ நமக்குரிய வேலையல்ல என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.
பத்திரிகைகளில் வரும் தவறான செய்திகள் அல்லது இவ்வாறு ஊடக சட்டங்களை மீறி எழுதப்படும் விடயங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதற்கு இலங்கை நீதிமன்றங்களுக்கு அதிகாரமுண்டு.
ஆகவே செய்திகளை எழுதும் போது ஊடக சட்டங்களை மதிப்பதுடன் மனிதாபிமானம்,மக்களின் மனநிலை என்பற்றை கவனத்திற்கொண்டு ஊடகத்துறையில்; ஈடுபட வேண்டும் என ஏ.எம்.வைஸ் தெரிவித்தார்.
நல்ல விடயங்களைப்பேசினீர்கள். அளவை மீறும் ஊடகத்துக்கே சட்டம் இருக்கிறது, அதேபோல், உண்மையைக்கூட எழுத முடியாத சுதந்திரமற்ற நிலைமைக்கு எதிராக ஏதும் சட்டங்களுண்டா? ஏனெனில், ஊடகங்கள் உண்மைத்தன்மையை விட்டும் எப்பவோ செத்துவிட்டது, ஆட்சியாளர்களின் சதியும் மிரட்டலும் அடாவடிகளும் இதற்குக்காரணம்.பதில் சொல்லுங்கள்.
ReplyDelete