Header Ads



கிழக்கில் நீர்க்காகம் தாக்குதல் - வெளிநாடுகளும் பங்கேற்பு

கிழக்கில், இலங்கை இராணுவத்தின் நீர்க்காகம் தாக்குதல் - 4 போர்ப்பயிற்சி வரும் 11ம் நாள் ஆரம்பமாகவுள்ளது. வரும் 11ம் நாள் தொடக்கம் 23ம் நாள் வரையான 13 நாட்கள் நடக்கவுள்ள இந்தப் போர்ப்பயிற்சியில், 2698 சிறிலங்காப் படையினரும், 40 வெளிநாட்டுப் படையினரும் பங்கேற்கவுள்ளனர்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள, கதிரவெளி, திருகோணமடு, தொப்பிகல, நரக்கமுல்லை பகுதிகளில் இந்தப் போர்ப்பயிற்சி நடைபெறவுள்ளது.

இந்தப் போர்ப்பயிற்சியில் இராணுவத்தின் கொமாண்டோ மற்றும் சிறப்புப் படைப்பிரிவுகளும், கடற்படை மற்றும் விமானப்படையின் சிறப்புப்படைப்பிரிவுகளும் பங்கேற்கவுள்ளன.

இந்தியா, பாகிஸ்தான், சீனா, பிறேசில், பங்களாதேஷ், நேபாளம் ஆகிய நாடுகளைச் சேர்ந்த 40 படையினரும் இதில் பங்கேற்கவுள்ளனர்.
 
இராணுவத் தலைமை அதிகாரி மேஜர் ஜெனரல் கிரிசாந்த டி சில்வாவின் மேற்பார்வையின் கீழ் இந்தப் போர்ப்பயிற்சிக்கு பிரிகேடியர் பியால் விக்கிரமரத்ன தலைமை தாங்கவுள்ளார்.

பிரதானமான கடல், தரை,வான் தாக்குதல் போர்ப்பயிற்சிகள் திருகோணமடு, வெருகல், திருகோணமலைப் பகுதிகளில் இடம்பெறும்.

இந்த ஆண்டு போர்ப்பயிற்சி, படகுத்துறைகள் மீதான தாக்குதல், உயர்பெறுமான இலக்குகள் மீதான தாக்குதல், வேவு, இலக்குகள் கண்காணிப்பு, வான்வழி நடவடிக்கைகள், கடல்வழி நடவடிக்கைகள், கடல்வழித் தரையிறக்கம், வழி கண்டறியும் குழுக்கள், எதிரியின் கோட்டைகளில் பராசூட் மூலம் குதித்தல், பதுங்கித் தாக்குதல்கள், தேடுதல் நடவடிக்கைகள், தீவிரவாத முறியடிப்பு மற்றும் பிணைக்கைதிகள் மீட்பு, உள்ளிட்டவற்றை மையப்படுத்தி இடம்பெறவுள்ளது.

போர் முடிவுக்கு வந்த பின்னர், இராணுவம் 2010ம் ஆண்டு, முதல்முறையாக சிலாவத்துறையில் நீர்க்காகம் தாக்குதல்-1 போர்ப்பயிற்சியை நடத்தியது.  அதையடுத்து, திருகோணமலை, தொப்பிக்கல பகுதிகளில் இந்தப் பயிற்சிகள் நடத்தப்பட்டிருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.