Header Ads



முஸ்லிம்களுக்கு அரசியல் சுயமுகவரி பெற்றுத் தந்த சரித்திர நாயகன்

(ஏ.எல்.ஜுனைதீன்)

  இலங்கையில் வாழும் முஸ்லிம் மக்களைப் பொறுத்த வரையில் செப்டெம்பர் மாதம் 16 ஆம் திகதி மறக்க முடியாத  நாளாகும். முஸ்லிம் மக்களில் பெரும்பான்மையினரால் பெரும் தலைவராக ஏற்றுக் கொள்ளப்பட்ட முஸ்லிம்களின் தனித்துவத்தை பெணுவதற்காக உருவாக்கப்பட்ட ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபகத் தலைவர்  மாமனிதர் எம்.எச்.எம். அஷ்ரஃப் அவர்கள்  இவ்வுலகை விட்டுப் பிரிந்த நாளாகும்.

  முஸ்லிம்களுக்கு அரசியல் சுயமுகவரி பெற்றுத் தந்த சரித்திர நாயகன் மர்ஹும் எம்.எச்.எம். அஷ்ரஃப் மரணித்து (செப்டெம்பர் 16 ஆம் திகதி) இன்றுடன் 12 வருடங்கள் கடந்து விட்டன.

  முஹம்மது உசைன் (உசைன் விதானை)  மதீனா உம்மா ஆகியோர்களுக்கு 1949 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 23 ஆம் திகதி கிழக்கு மாகாணத்தில் உள்ள  சம்மாந்துறையில் இவர் மூன்று சகோதரிகளுடன் பிறந்தார்.

  இவர், தனது ஆரம்பக் கல்வியை கல்முனைக்குடி அல்-அஸ்ஹர் வித்தியாலயத்தில் ஆரம்பித்து இடைநிலைக் கல்வியை கல்முனை பாத்திமா கல்லூரியிலும் உயர் கல்வியை கல்முனை உவெஸ்லி கல்லூரியிலும் தொடர்ந்தார்.

  தனது பாடசாலை வாழ்வில் இன, மத மற்றும் குல பேதமின்றி அனைத்து மாணவர்களுடனும் அன்பாகப் பழகிய இவர், பாடசாலையில் இடம்பெறுகின்ற சகல நடவடிக்கைகளிலும் பங்குபற்றி தனது ஆற்றலை வெளிப்படுத்தினார்.

  இவர்  சிறுவனாக இருந்து ஆரம்ப வகுப்பில் கல்வி கற்கும் போது ஒரு மாணவன்  தனக்கு கதிரையில் ஊசியை வைத்து தன்னை அஷ்ரஃப் காயப்படுத்தி விட்டார்  இவர்தான் எனது கதிரையில் ஊசி வைத்தது. எனத் திடமாக ஆசிரியரிடம் முறையிட்டதற்கு இணங்க ஆசிரியர் மாணவனான அஷ்ரஃபை அழைத்து விசரித்த போது அதற்கு அஷ்ரஃப் நான் கதிரையில் ஊசி வைத்துள்ளேன் என்று அவர் தெரிந்திருந்தால் எப்படி ஐயா அவர் ஊசியுள்ள கதிரையில் அமர்ந்திருப்பார்? அப்படியானால் ஊசியை வைத்ததைக் கண்டேன் என்பது பொய்தானே. அப்படியானால், அவர் எனக்கு எதிராக குற்றம் சுமத்துவதும் தவறு. என்று தனது வாதத்திறமையை வெளிக்காட்டியதைக் கண்ட வகுப்பு ஆசிரியரே  அன்று  அன்னாரின் திறமையைக் கண்டு கொண்டார்.

  தனது எதிர்கால எண்ணம்போல் சட்டத்தரணியான மர்ஹும் அஷ்ரஃப் அவர்கள் பேரியல் இஸ்மாயிலை புகையிரத பயணம் ஒன்றின் போது கண்டு காதலித்து திருமணமும் செய்து கொண்டார். இவ்விருவருக்கும் இடையில் ஓர் ஆண் மகனும் பிறந்தார்.

  சிறந்த பேச்சாற்றல் வன்மையுள்ள சட்டத்தரனியாக, கவிஞனாக, ஊடகவியலாளனாக, மற்றும் சிறந்த அரசியல்வாதி என பல துறைகளிலும் இவர் பாண்டித்தியம் பெற்றிருந்தார்.

  மர்ஹும் அஷ்ரஃப் அவர்கள் தனது வாழ்வில் எழுதிய கவிதைகள் அனைத்தையும் ஒன்று சேர்த்து 600 பக்கங்களைக் கொண்ட 'நான் எனும் நீ' எனும் கவிதைத் தொகுப்பை வெளியிட்டார். இக்கவிதைத் தொகுப்பு இலங்கையில் மாத்திரமின்றி உலகில் வாழும் தமிழ் பேசும் மக்களின் வரவேற்பைப் பெற்ற நூலாக இன்றும் விளங்குகின்றது. தனது எழுத்தாற்றலால் பல நூல்களை எழுதி வெளியிட்டார். ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் 'புதிய வெளிச்சங்கள்' எனும் பாடல் தொகுப்பு இவரால் இயற்றப்பட்டதாகும்.

  மர்ஹும் அஷ்ரஃப் அவர்கள் பல பொருளாதார நெருக்கடிகளுக்கு மத்தியில் தனது சட்டத்துறைக் கல்வியை நிறைவு செய்தார். இளம் சட்டத்தரணியாக வளர்ந்து ஜனாதிபதி சட்டத்தரணியாக வளர்ச்சி பெற்ற இவர் தனது வாதத்திறமையாலும், கணீரென்ற பேச்சாற்றலாலும் தனக்கென ஒரு இடத்தையும் பிடித்துக் கொண்டார்.

  தன்னிடமுள்ள பேச்சாற்றல், வாதத்திறமை, இலக்கிய கலை இரசனை மற்றும் சட்டத்துறை வல்லுநர் என்பனவற்றை இணைத்து இலங்கை வாழ் முஸ்லிம்களுக்காக அரசியலை மேற்கொண்டதனால் இலங்கையின் அரசியலில் தடம்பதித்தார். இவரது அரசியல் பிரவேசமும் அரசியல் நடாத்தும் திறமையும் அனைத்து மக்கள் மத்தியிலும் அன்னாரைப் பிரபல்யப்படுத்தியது.

  பேரினவாதிகளின் கைகளைப் பிடித்துக் கொண்டு அரசியல் மேற்கொண்டால் முஸ்லிம்களின் அரசியல் எதிர்காலம் மழுங்கடிக்கப்பட்டு விடும் என்பதனை தெளிவாக உணர்ந்து கொண்ட மர்ஹும் அஷ்ரஃப் அவர்கள் தமிழ் பேசும் மக்களுக்காக அதிலும் குறிப்பாக இலங்கை வாழ் முஸ்லிம் மக்களுக்காக இம் மக்களின் அரசியல் தனித்துவத்தை நிலை நிறுத்துவதற்காக 'ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்'  என்ற இயக்கத்தை பல புத்திஜீவிகளை ஒன்றிணைத்து 1981 ஆம் ஆண்டில்  தன்னை தலைவராகக் கொண்டு உருவாக்கினார்.

  மர்ஹும் அஷ்ரஃப் அவர்களின் அரசியல் வரலாற்றில் கல்முனையில் ஏற்பட்ட தமிழ் முஸ்லிம் இன முரண்பாடு அன்னாரை கொழும்பு நோக்கி குடிபெயரச் செய்தது. கொழும்பில் சட்டத்தரணி சுஹைர் மற்றும் மர்ஹும் எம்.பி.எம் அஸ்ஹர் ( நவமணி பத்திரிகையின் முன்னாள் ஆசிரியர்) போன்றோர்களுடன் ஒன்றிணைந்து முஸ்லிம்களின் அரசியல் தொடர்பில் பல்வேறு விதமாகச் சிந்தித்தார்.

  காலங்கள் கடந்தன.  முடிவாக அன்னாரினால் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் 1986 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 29 ஆம் திகதி ஒரு இயக்கமாக உருவாக்கப்பட்டு அது பின்னர் 1988 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 11 ஆம் திகதி மரச்சின்னத்துடன் தேர்தல்கள் ஆணையாளரால் அங்கிகரிக்கப்பட்ட கட்சியாகப் பிரகடனப்படுத்தப்பட்டது.

  1989 ஆம் ஆண்டு நாடாளுமன்றம் நுழைந்த மர்ஹும் அஷ்ரஃப் அவர்கள் தனது பேச்சாற்றலாலும் கணீரென்ற குரலினாலும் நாடாளுமன்றத்தையே அதிர வைத்தார். தமிழ் பேசும் மக்களின் குறிப்பாக முஸ்லிம்களின் சுய கெளரவத்திற்காக அன்றைய நாடாளுமன்ற ஆசனத்தை அன்னார் பயன்படுத்திக் கொண்டார்.

  1994 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 1 ஆம் திகதி முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றைச் செய்து அதற்கமைய 16 ஆவது நாடாளுமன்றத் தேர்தலில் 9 ஆசனங்களைப் பெற்று இலங்கையின் அரசியல் வரலாற்றில் சிறுபான்மை இனக் கட்சிகளின் ஆதரவின்றி பெரும்பான்மை இன ஆட்சியாளர்களால் ஆட்சி அமைக்க முடியாது என்பதை நிருபித்துக் காட்டினார்.

  இலங்கை வாழ் முஸ்லிம்களின் கல்வி நிலையில் ஒரு புரட்சியை ஏற்படுத்தும் வகையில் 1995 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 23 ஆம் திகதி தனது பிறந்த நாளில் தென் கிழக்குப் பல்கலைக்கழகத்தை உருவாக்கினார். இது போன்று ஒலுவில் துறைமுகமும் அவரது கனவாக இருந்தது.

  ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஒரு இனவாதக் கட்சி என பெரும்பான்மை இன அரசியல் கட்சிகள்  கருத்துக்கள் தெரிவித்ததனால் இக் கட்சிக்குள் இருந்தே 'தேசிய ஐக்கிய முன்னணி' எனும்  அரசியல் கட்சியை ஆரம்பித்தார்.

  மர்ஹும் அஷ்ரஃப் அவர்கள் சிறந்ததொரு மனிதராக அனைத்து விடயங்களிலும் சிறந்து விளங்கி புரட்சியை ஏற்படுத்தினார்.

  பல பிரிவுகளாகப் பிரிந்து நின்று தற்பொழுது அரசியல் செய்து கொண்டிருக்கும் அணைவரும் ஒரு அணியில்  ஒன்று சேர்ந்து முஸ்லிம் சமூகத்திற்கு எதிரான அநீதிகளுக்கு குரல் கொடுப்பதே மாமனிதர் மர்ஹும் எம்.எச்.எம். அஷ்ரஃப் அவர்களுக்கு நாம் செய்யும் மாபெரும் கைமாறாகும்.

1 comment:

  1. அன்னார் பெற்றுத் தந்த முகவரியை இல்லாதொழிக்கும் சிஷ்யர்களே இன்றைய முஸ்லிம் அரசியல் தளத்தில் உள்ளனர்.

    -புவி றஹ்மதுழ்ழாஹ், காத்தான்குடி-

    ReplyDelete

Powered by Blogger.