சிரியாவின் அகதிகள்..!
(Tn) இரண்டு மில்லியனுக்கும் அதிகமான சிரிய நாட்டவர்கள் வெளிநாடுகளில் அகதிகளாக தஞ்சம்
புகுந்திருப்பதாக ஐ. நா. அறிவித்துள்ளது. இதன் மூலம் சிரிய அகதிகளின் எண்ணிக்கை ஆறு
மாத காலத்திற்குள் ஒரு மில்லியனால் அதிகரித்துள்ளது.
வேறு எந்த நாட்டையும் விட சிரிய நாட்டவர்களே அதிகம் பேர் இடம்பெயர்ந்திருப்பதாக
ஐ.நா. வின் அகதிகளுக்கான உயர் ஸ்தானிகராலயம் குறிப்பிட்டுள்ளது. இதில் அயல் நாடான
லெபனானில் மாத்திரம் சுமார் 700,000 சிரிய நாட்டவர்கள் தஞ்சம் புகுந்துள்ளனர்.
சிரிய படைகள் நடத்தியதாக குற்றம் சாட்டப்படும் இராசயன ஆயுத தாக்குதலுக்கு எதிராக
சிரியா மீது இராணுவ நடவடிக்கை எடுப்பது குறித்து அமெரிக்காவும் பிரான்ஸ¤ம்
தொடர்ந்து மும்முரம் காட்டி வருகிறது. இதில் அமெரிக்கா திட்டமிட்டிருக்கும் சிரியா
மீதான மட்டுப்படுத்தப்பட்ட இராணுவ நடவடிக்கையை கடந்து ஒரு பரந்துபட்ட நடவடிக்கைக்கு
ஜனாதிபதி பராக் ஒபாமா திட்டமிட்டிருப்பதாக நம்பப்படுகிறது.
சிரிய இராணுவ நடவடிக்கைக்கு கொங்கிரஸ் அவையின் ஆதரவை பெறும் பிரசாரத்தையும்
ஒபாமா தீவிரப்படுத்தியுள்ளார்.
இந்நிலையில் ஐ. நா. வின் அகதிகளுக்கான உயர் ஸ்தானிகராலயம் நேற்று வெளியிட்ட
அறிக்கையில், ‘சிரிய இரத்தக் களரி காரணமாக பெண்கள், குழந்தைகள் மற்றும் ஆண்கள் என
அனைவரும் தமது ஒருசில உடைகளை கொண்ட பொதியுடன் எல்லையை கடந்து வருகிறார்கள்” என்று
விபரிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு தமது வீடுகளை விட்டு வெளியேற
நிர்ப்பந்திக்கப்பட்டோரில் அரைப்பங்கினர் சிறுவர்களாவர். இவர்களில் முக்கால்
வாசிப்பேர் 11 வயதுக்கு கீழ்ப்பட்டவர்கள் என ஐ. நா. கணித்துள்ளது.
சுமார் 118,000 க்கும் குறைவான அகதி சிறுவர்களே தமது கல்வியை ஓரளவுக்காவது தொடர
வாய்ப்பு பெற்றுள்ளனர். இந்த சூழல் எதிர்கால சிரியாவை கட்டியெழுப்புவதில் பெரும்
பாதிப்பை செலுத்தும் என ஐ. நா. எச்சரித்துள்ளது.
சிரியாவுக்கு அருகில் இருக்கும் மிகச் சிறிய நாடான லெபனானிலேயே அதிக சிரிய
நாட்டு அகதிகள் தஞ்சம் புகுந்துள்ளனர். இதன்படி ஆறு லெபனானியரில் ஒருவர் வீதம் அங்கு சிரிய அகதிகள் உள்ளனர். இதற்கு
அடுத்து ஜோர்தான் மற்றும் துருக்கி நாடுகள் இடம் பிடித்துள்ளன.
மறுபுறத்தில் சிரியாவுக்குள் மேலும் 4.25 மில்லியன் பேர் அகதிகளாக
இடம்பெயர்ந்துள்ளனர். எனினும் அகதிகளுக்கான அடிப்படை வசதிகளை செய்து கொடுப்பதில் சர்வதேச தொண்டு
நிறுவனங்கள் சிக்கலை எதிர்கொண்டு வருகின்றன. இதில் அகதிகளுக்கு அடிப்படை
தேவைகளுக்கான நிதியில் 47 வீதம் மாத்திரமே கிடைக்கப்பெற்றிருப்பதாக ஐ.நா.
குறிப்பிட்டுள்ளது. ‘முதல் ஒரு மில்லியன் அகதிகளை எட்டுவதற்கு இரண்டு ஆண்டுகள்
எடுத்துக் கொண்டன. ஆனால் இரண்டாவது மில்லியனை எட்ட ஆறு மாதங்கள் மாத்திரமே
எடுத்துக் கொண்டிருக்கிறது’ என்று ஐ. நா. அகதிகளுக்கான உயர்ஸ்தானிகர் அன்டோனியோ
குட்ரஸ் சுட்டிக்காட்டினார். இது 2013 ஆம் ஆண்டு முடிவில் மூன்று மில்லியனை எட்ட
வாய்ப்பு இருப்பதாக அவர் அச்சம் வெளியிட்டார்.
சிரிய ஜனாதிபதி பஷர் அல் அஸாத் அரசுக்கு எதிராக இரண்டு ஆண்டுகளுக்கு முன்
ஆரம்பமான மக்கள் எழுச்சி போராட்டத்தை தொடர்ந்து, அங்கு நீடிக்கும் உள்நாட்டு
யுத்தத்தில் 100,000 க்கும் அதிகமானவர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் கடந்த ஏப்ரல் மாதத்திலிருந்து சிரியாவில் அரசுப் படைகள் 3 முறை
இரசாயன ஆயுதங்களை பயன்படுத்தியதற்கான அசைக்க முடியாத ஆதாரங்கள் தங்களிடம் உள்ளதாக
பிரான்ஸ் பாராளுமன்றத்தில் பிரதமர் ஜேன் மார்க் அய்ரொல்ட் திங்கட்கிழமை அறிக்கை
சமர்ப்பித்துள்ளார்.
சிரியா இராணுவத்திடம் ஆயிரக் கணக்கான தொன்கள் எடை கொண்ட இரசாயன ஆயுதங்கள்
உள்ளதாகவும், இதுவரை குறைந்த பட்சம் 3 முறை இந்த ஆயுதங்களை பயன்படுத்தி அப்பாவி
மக்களை இராணுவம் கொன்று குவித்ததற்கான நம்பத்தகுந்த ஆதாரங்கள் தங்களிடம்
உள்ளதாகவும் பிரான்ஸ் உளவுத் துறையின் தகவல்களை அடிப்படையாகக் கொண்ட 9 பக்க
அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இந்த கொடூர தாக்குதலில் ஈடுபட்ட சிரிய ஜனாதிபதி பஷர் அல் அஸாத்தின் ஆட்சியை
தண்டித்தே தீர வேண்டும் என பிரான்ஸ் அரசு கருதுவதாகவும் அந்த அறிக்கை
குறிப்பிட்டுள்ளது. இரசாயன தாக்குதல் நடந்ததாக கூறப்படும் இடங்களில் இருந்து தடய மாதிரிகளை சேகரித்த
ஐ. நா. சபை அதிகாரிகள் அவற்றை ஆய்வகங்களில் பரிசோதித்து வருகின்றனர்.
அமெரிக்காவின் இராணுவ தாக்குதலில் பங்கேற்பது தொடர்பாக இங்கிலாந்து பிரதமர்
டேவிட் கெமரூன் கொண்டு வந்த தீர்மானம் பாராளுமன்றத்தில் தோல்வியடைந்த நிலையில்,
சிரியா மீதான தாக்குதலில் இங்கிலாந்து பங்கேற்காது என்று அவர் அறிவித்தார்.
அமெரிக்காவுக்கு இராணுவ ரீதியாக இல்லாமல் தார்மீக ஒத்துழைப்பு வழங்க தயார் என
அவுஸ்திரேலியா அறிவித்துள்ளது. இங்கிலாந்து ஒத்துழைப்பு இல்லாவிட்டாலும் சிரியா மீதான அமெரிக்க தாக்குதலில்
எங்கள் நாடும் பங்கேற்கும் என பிரான்ஸ் ஜனாதிபதி பிரான்கோயிஸ் ஹொலண்டே ஏற்கனவே
அறிவித்திருந்தார்.
இந்த அறிவிப்பின் மீதான விவாதமும், வாக்கெடுப்பும் நடத்தப்பட வேண்டும் என
பிரான்ஸ் எதிர்க் கட்சி எம்.பி.க்கள் கூறி வருகின்றனர். ஆனால், வாக்கெடுப்பும்
விவாதமும் தேவையற்றது என்று பிரதமர் மறுத்து வந்தார். எதிர்க் கட்சிகளின் வற்புறுத்தலுக்கிணங்க இன்று புதன்கிழமை பிரான்ஸ்
பாராளுமன்றத்தில் சிரியா மீது தாக்குதல் நடத்துவதா? வேண்டாமா? என வாக்கெடுப்பு
நடைபெற உள்ளது. பிரானஸ் நாட்டின் அரசியலமைப்பு சட்டத்தின்படி எந்த நாட்டின் மீதும் தாக்குதல்
நடத்துவது தொடர்பாகவும் இராணுவத்தின் தலைவராக உள்ள ஜனாதிபதி சுயமாக
முடிவெடுக்கலாம்.
ஆனால் இந்த தாக்குதலுக்கு 3 நாட்கள் முன்னதாக பாராளுமன்றத்துக்கு அறிவிக்க
வேண்டும். அதே தாக்குதல் 4 மாதங்களுக்கு மேல் நீடிக்கக் கூடிய நிலையில்
பாராளுமன்றத்தில் வாக்கெடுப்பு நடத்தி எம்.பி. க்களின் ஆதரவைப் பெற வேண்டும்.
ஜனாதிபதியின் முடிவு வாக்கெடுப்பின் போது தோற்கடிக் கப்பட்டால் தாக்குதல்
நடவடிக்கையை கைவிட வேண்டும் என்பது குறிப்பிடத் தக்கது. மறுபுறத்தில் சிரிய இராணுவ
நடவடிக்கைக்கான அனுமதியை வழங்கும் அமெரிக்க கொங்கிரஸ் அவையின் வாக்கெடுப்பு
எதிர்வரும் செப்டெம்பர் 9 ஆம் திகதி இடம்பெறவுள்ளது.
Post a Comment