நமது வாக்குரிமை ஓர் அமானிதம்..!
(A.J.M மக்தூம்)
நாம் அளித்திடும் வாக்குகள் மூலமே முழு சமூகத்தின் மீதான அதிகாரத்தையும் ஒருவரிடமோ, பலரிடமோ ஒப்படைக்கப் படுகிறது. ஆகவே நமக்குள்ள வாக்குரிமை என்பது பெரியதோர் அமானிதமாக இருக்கிறது. வேட்பாளர்கள் நாளை அதிகாரிகளாக வந்து அரங்கேற்றும் அனைத்து அடாவடித் தனங்களுக்கும் நாமும் பொறுப்புக் கூற வேண்டும். அவர்கள் மேற்கொள்ளும் ஊழல், மோசடிகள் அனைத்திலும் நமக்கும் பங்குள்ளது என்பதை புரிந்து கொண்டே ஒருவரை ஆதரிக்கவோ, வெறுக்கவோ வேண்டும். நாம் தெரிந்துக் கொண்டே தகுதியற்ற ஒருவரை ஆதரிக்கும் பொழுது அவர்களின் நாசகார செயல்கள் குறித்து, அவர்கள் சமூகத்துக்கு இழைக்கும் அநீதிகள் குறித்து நாளை மறுமையில் இறைவன் முன்னிலையில் விசாரிக்கப் படுவோம் என்பதை விளங்கிக் கொள்ள வேண்டும்.
இறைத் தூதர் (ஸல்) அவர்கள் பின்வருமாறு கூறினார்கள்: எவரொருவர் சிறந்ததோர் வழிமுறையை அறிமுகம் செய்து வைக்கின்றாரோ அவருக்கு அதற்கான கூலியும், அவரின் வழிக் காட்டலின் பின் அதனை செயற் படுத்தும் அனைவரின் நன்மைகளும் கிடைக்கும். எனினும் அவர்களின் நன்மைகளில் எந்த குறைவும் செய்யப்பட மாட்டாது.
அதே போன்று யார் தீய வழிமுறையை அறிமுகம் செய்து வைக்கின்றாரோ அவருக்கு அதற்கான தீமையும், அவரின் வழிக் காட்டலின் பின் அதனை செயற் படுத்தும் அனைவரின் தீமைகளும் அவர்களின் தீமைகளில் எந்த குறைவும் இன்றி இவருக்கும் ஏற்படும். (முஸ்லிம்)
எமது வாக்குகள் மூலம் நம்மீதும், நம்மை சூழவுல்ல அனைவர் மீதும், சில போது எமது எதிர் கால சந்ததியினர் மீதும் அதிகாரம் செலுத்த நாமே ஒருவரைத் தெரிவு செய்யப் போகிறோம் என்பதை உணர்ந்து கொண்டு, அதற்கு மிகவும் தகுதி வாய்ந்தவர்கள் யார்? யார்? என்பதை அலசி ஆராய்ந்து, அனுபவம், மற்றும் அறிவுள்ளவர்கள் பலருடன் கலந்தாலோசனை (மஷூரா) செய்து கொண்டு, நலவை நாடி இறைவனிடம் பிரார்த்தனை (இஸ்திகாரா) செய்துவிட்டு நமது வாக்குரிமைகளைப் பயன் படுத்த முன்வர வேண்டும்.
இறைவன் தனது திருமறையில் இறைத்தூதர் (ஸல்) அவர்களைப் பார்த்து பின்வருமாறு கட்டளையிடுகிறான்.
தவிர, சகல காரியங்களிலும் அவர்களுடன் கலந்தாலோசனை செய்யும்; பின்னர் (அவை பற்றி) நீர் முடிவு செய்து விட்டால் அல்லாஹ்வின் மீதே பொறுப்பேற்படுத்துவீராக! – நிச்சயமாக அல்லாஹ் தன் மீது பொறுப்பேற்படுத்துவோரை நேசிக்கின்றான். (3:159)
இறைவனின் போதனைக்கு அமைவாக இறைத்தூதர் (ஸல்) அவர்கள் எல்லா காரியங்களிலும் ஆலோசனை செய்யும் வழக்கமுள்ளவர்களாக காணப் பட்டார்கள். தனக்கு நேரடியாக வஹி இறங்கிய போதும் தமது காரியங்களில் மஷூரா செய்யும் வழி முறையை தனது சமூகத்தாருக்கு கற்றுக் கொடுப்பதற்காகவே இவ்வாறு நடைமுறைப் படுத்திக் காட்டியுள்ளார்கள்.
இறைவன் தனது நல்லாடியார்களின் பண்புகள் பற்றி குறிப்பிடும் போது பின்வருமாறு கூறுகிறான்:
இன்னும் தங்கள் இறைவன் கட்டளைகளை ஏற்று தொழுகையை (ஒழுங்குப்படி) நிலைநிறுத்துவார்கள் – அன்றியும் தம் காரியங்களைத் தம்மிடையே கலந்தாலோசித்துக் கொள்வர்; மேலும், நாம் அவர்களுக்கு அளித்தவற்றிலிருந்து (தானமாகச்) செலவு செய்வார்கள். (42:38)
பொதுவான காரியங்களில் இவ்வாறு கலந்தாலோசனை செய்வது அவசியமென்றால் நமது முழுப் பொறுப்புக்களையும் நிறைவேற்ற ஓர் அதிகாரியை நியமிக்கும் இந்த விவகாரம் எவ்வளவு பாரதூரமானது என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும்.
மனிதன் எவ்வளவுதான் தனது திறமையை பயன் படுத்தி முடிவுகளை எடுத்தாலும் அடுத்த நிமிடம் என்ன நடக்கும்?, எவ்வாறு நிலைமைகள் மாறும்? எது அவனுக்கு சாதகமாக அமையும்? எது அவனுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும்? என்பதை அவனால் புரிந்துக் கொள்ள முடியாது.
அல்லாஹ் தனது திருமறையில் பின்வருமாறு கூறுகிறான்: “நீங்கள் ஒன்றை வெறுப்பீர்கள்; அது உங்களுக்கு நன்மையாக இருக்கலாம்; நீங்கள் ஒன்றை விரும்புவீர்கள்; அது உங்களுக்கு தீங்காகவும் இருக்கலாம்; நீங்கள் அறிய மாட்டீர்கள் அல்லாஹ்வே மிக அறிந்தவன்” (அல்-குர்ஆன் 2:216)
பிறிதோர் இடத்தில்: “அல்லாஹ் தான் நன்கறிபவன் நீங்கள் அறிய மாட்டீர்கள்” (அல்-குர்ஆன் 2:216) என்று கூறுகிறான்.
எனவேதான் இறைவன் பின்வருமாறு நமக்குக் கட்டளையிடுகிறான்: “பின்னர் (அவை பற்றி) நீர் முடிவு செய்து விட்டால் அல்லாஹ்வின் மீதே பொறுப்பேற்படுத்துவீராக! – நிச்சயமாக அல்லாஹ் தன் மீது பொறுப்பேற்படுத்துவோரை நேசிக்கின்றான்”. (3:159)
இதன் காரணமாகவே இறைத் தூதர் (ஸல்) அவர்கள் “இஸ்திகாரா” எனும் நலவை நாடி இறைவனிடம் பிரார்த்தனை செய்யும் வழிமுறையை பின்வருமாறு கற்றுத் தந்துள்ளார்கள்.
ஜாபிர் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்
நபி (ஸல்) அவர்கள் எங்களுக்கு எல்லா விஷயங்களிலும் நல்லதைத் தேர்ந்தெடுக்கப் பிரார்த்திக்கும் முறையை (இஸ்திகாராவை) குர்ஆனின் அத்தியாயங்களைக் கற்றுத் தருவதைப் போன்று கற்றுத் தருபவர்களாய் இருந்தார்கள்.
(அதன் முறையாவது): நீங்கள் ஒரு காரியத்தைச் செய்ய நினைத்தால் கடமையான தொழுகை அல்லாத (நஃபிலான) இரண்டு ரக்அத்கள் தொழுது கொள்ளுங்கள். பிறகு அல்லாஹ்விடம், பின்வருமாறு பிரார்த்திக்கவும்:
اللَّهُمَّ إنِّي أَسْتَخِيرُكَ بِعِلْمِكَ , وَأَسْتَقْدِرُكَ بِقُدْرَتِكَ , وَأَسْأَلُكَ مِنْ فَضْلِكَ الْعَظِيمِ فَإِنَّكَ تَقْدِرُ وَلا أَقْدِرُ , وَتَعْلَمُ وَلا أَعْلَمُ , وَأَنْتَ عَلامُ الْغُيُوبِ , اللَّهُمَّ إنْ كُنْتَ تَعْلَمُ أَنَّ هَذَا الأَمْرَ (هنا تسمي حاجتك ) خَيْرٌ لِي فِي دِينِي وَمَعَاشِي وَعَاقِبَةِ أَمْرِي أَوْ : عَاجِلِ أَمْرِي وَآجِلِهِ , فَاقْدُرْهُ لِي وَيَسِّرْهُ لِي ثُمَّ بَارِكْ لِي فِيهِ , اللَّهُمَّ وَإِنْ كُنْتَ تَعْلَمُ أَنَّ هَذَا الأَمْرَ (هنا تسمي حاجتك ) شَرٌّ لِي فِي دِينِي وَمَعَاشِي وَعَاقِبَةِ أَمْرِي أَوْ : عَاجِلِ أَمْرِي وَآجِلِهِ , فَاصْرِفْهُ عَنِّي وَاصْرِفْنِي عَنْهُ وَاقْدُرْ لِي الْخَيْرَ حَيْثُ كَانَ ثُمَّ ارْضِنِي بِهِ .
‘அல்லாஹும்ம இன்னீ அஸ்தகீருக பி இல்மிக, வ அஸ்தக்திருக பி குத்ரத்திக்க, வ அஸ்அலுக மின் ஃபழ்லிகல் அழீம். ஃபஇன்னக தக்திரு வலா அக்திரு. வதஃலமு வலா அஃலமு வஅன்த அல்லாமுல் ஃகுயூப். அல்லாஹும்ம இன்குன்த தஃலமு அன்ன ஹாதல் அம்ர் (தேவையைக் குறிப்பிட வேண்டும்) கைருன்லீ ‘ஃபீ தீனி, வமஆஷீ, வ ஆகிபதி அம்ரீ, ஃபீ ஆஜிலி அம்ரீ வஆஜிலிஹி, ஃபக்துர்ஹு லீ. வயஸ்ஸிர்ஹு லீ சும்ம பாரிக்லீ பீஹி. வ இன் குன்த தஃலமு அன்ன ஹாதல் அம்ர (தேவையைக் குறிப்பிட வேண்டும்) ஷர்ருன் லீ ஃபீ தீனீ, வ மஆஷீ, வ ஆகிபதி அம்ரீ, ஃபீ ஆஜிலி அம்ரீ வஆஜிலிஹி, ஃபஸ்ரிஃப்ஹு அன்னீ, வஸ்ரிஃபினீ அன்ஹு, வக்துர் லி யல் கைர ஹைசு கான சும்ம அர்லினீ பீஹ்”
என்று பிரார்த்தித்து, ‘உங்கள் தேவை இன்னதெனக் குறிப்பிடுங்கள்’ என்று கூறினார்கள்.
(பொருள்: இறைவா! நான் உன்னிடம் உனது ஞானத்தைக் கொண்டு நன்மையை யாசிக்கின்றேன்; மேலும் உனது ஆற்றலைக் கொண்டு ஆற்றலை யாசிக்கிறேன்; மேலும் உன்னுடைய மாபெரும் அருளைக் கோருகிறேன். ஏனெனில், ‘நீயே ஆற்றல் மிக்கவன்; எனக்கோ எந்த ஆற்றலும் கிடையாது. நீயே நன்கறிந்தவன்; எனக்கோ எந்த அறிவும் கிடையாது. நீயே மறைவானவற்றை நன்கறிந்தவன். இறைவா! இந்தக் காரியம் எனக்கு ‘என் மார்க்கத்திலும் என் வாழ்க்கையிலும் என் காரியத்தின் முடிவிலும்’ அல்லது ‘என் இம்மை வாழ்விலும் மறுமை வாழ்விலும்’ நன்மையானதாக இருக்குமென நீ அறிந்திருந்தால் அதைச் சாதிப்பதற்குரிய ஆற்றலை எனக்கு வழங்குவாயாக! இந்தக் காரியம் எனக்கு ‘என் மார்க்கத்திலும் வாழ்க்கையிலும் தீமையானதென நீ அறிந்திருந்தால் இக்காரியத்தை என்னைவிட்டுத் திருப்பிவிடுவாயாக! என்னையும் இக்காரியத்தைவிட்டுத் திருப்பிவிடுவாயாக. நன்மை எங்கிருந்தாலும் அதை அடைவதற்குரிய ஆற்றலை எனக்கு வழங்குவாயாக! பிறகு அதில் எனக்குத் திருப்தியை அளித்திடுவாயாக.)
இவ்வாறு இஸ்லாம் நமக்குப் போதிக்கும் வழிமுறையை பின்பற்றி தகுதிவாய்ந்த, சமூகத்துக்கு பலனுள்ள அதிகாரிகளைத் தெரிவு செய்ய எத்தனிப்போமாக, எல்லாம் வல்ல அல்லாஹ் இதற்கு அருள் பாலிப்பானாக. ஆமீன்
இவ்வாறு வாக்களிப்பின் அகமியங்களைப் பற்றி அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா சபையால்தேர்தல் நடைபெறவுள்ள மாகாணங்களில் உள்ள மிம்பர் மேடைகளில் முஸ்லிம் சமூகத்திற்கு எடுத்துரைக்க ஆவன செய்ய வேண்டும்.
ReplyDeleteகுறிப்பாக காசு, பொருள் பண்டங்களைப் பெற்றுக் கொண்டு கோஷ்டி கோஷ்டியாகச் சென்று கள்ள வாக்களிப்புகளில் ஈடுபடும் முஸ்லிம் சகோதர சகோதரிகளுக்கு இதன் தாற்பரியத்தை எடுத்துரைக்க வேண்டும்.
'வாக்களிப்பவர்கள் திருந்தாத வரை தெரிவு செய்யப்படும் மக்கள் பிரதிநிதிகளும் திருந்தவே மாட்டார்கள்'
-புவி றஹ்மதுழ்ழாஹ், காத்தான்குடி-