Header Ads



மின் கம்பங்களுக்கு பதிலாக, மின்னும் தன்மையுடைய ஒளிரும் மரங்கள்

வெளிச்சம் தரும் வகையில் சாலை ஓரங்களில் வைக்கப்பட்டுள்ள, மின் கம்பங்களுக்கு பதிலாக, மின்னும் தன்மை உடைய, ஒளிரும் மரங்களை வைப்பதற்கான முயற்சியில், அமெரிக்க ஆய்வாளர் ஈடுபட்டுள்ளார். உலகின் அனைத்து நாடுகளிலும், தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில், போக்குவரத்துக்கு வசதிக்காக, சாலைகளில் வெளிச்சம் தரும் வகையில் மின் கம்பங்கள் வைக்கப்படுகின்றன. இந்த மின் விளக்குகள் எரிவதற்கு, ஏராளமான மின்சாரம் தேவைப்படுகிறது. சான்பிரான்சிஸ்கோவை சேர்ந்த, மரபணுவியல் ஆய்வாளர், ஓம்ரி அமிரான் டிரோரி, ஒளிரும் தன்மை உடைய தாவரங்களை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். இதுகுறித்து ஓம்ரி கூறியதாவது: நெடுஞ்சாலைகளில், ஒளிரும் தாவரங்களை வைப்பதன் மூலம், ஏராளமான மின்சாரத்தை மிச்சப்படுத்துவதோடு இயற்கையையும் பாதுகாக்க முடியும்.

இதற்காக, தாவரங்களின் மரபணு மற்றும் மின்னும் தன்மை உடைய, மின்மினிப் பூச்சிகளின் மரபணுக்களில் ஆய்வு செய்து வருகிறேன். "ஒளிரும் தன்மைக்கு காரணமான ஹார்மோன்களை கண்டறிந்து அவ்வகை ஹார்மோன்களை தாவரங்களில் சுரக்கச் செய்வதின் மூலம், தாவரங்களை ஒளிரச் செய்ய முடியும்' என, ஆய்வாளர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். மரபியல் ரீதியாக ஆழமான ஆய்வு செய்ய வேண்டியிருப்பதால், இன்னும் பல ஆண்டுகள் ஆராய்ச்சிக்குப் பின்னரே, இது நடைமுறையில் சாத்தியமாகும். இந்த ஆராய்ச்சி வெற்றி பெற்றால், மின் தேவைக்கான செலவு குறையும்; சுற்றுப்புறம் மாசடைவதை தவிர்க்கலாம், மின் கசிவால் ஏற்படும் விபத்துகளை தவிர்க்கலாம், மரங்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதன் மூலம், பிராண வாயு உற்பத்தியை அதிகரிக்கலாம் இவ்வாறு, ஓம்ரி கூறினார்.
சம்பாதித்த பணம் அனைத்தையும் இந்த ஆராய்ச்சியில் செலவிடப் போவதாக கூறியுள்ள ஓம்ரி, இதற்காக பெரும் தொகை தேவைப்படுவதால், தன் நண்பர்களிடமும், பொதுமக்களிடமும் நிதி உதவி கோரியுள்ளார்.

இவரின் ஆய்வு வெற்றி அடையுமாயின், ஒளிரும் பூமி சாத்தியமே என, பலரும் கருத்து தெரிவித்துள்ளனர்.

இந்த மரபியல் ரீதியான ஆய்வின் மூலம், தாவரங்களை ஒளிரச் செய்து, அதன் மூலம், கிடைக்கும் ஒளியை, மின் கம்பங்களுக்கு மாற்றாக பயன்படுத்தினால், உலகில் ஒரு பசுமைப் புரட்சியே ஏற்பட வாய்ப்பு உள்ளதாக, ஓம்ரியின் சக ஆய்வாளர்கள் கூறியுள்ளனர். ஓம்ரியின் ஆய்விற்காக, இதுவரை, 3.5 கோடி ரூபாய், நன்கொடையாக கிடைத்துள்ளது. இதற்கு மேலும் தொகை தேவைப்படலாம் என்பதால், ஆராய்ச்சியின் அடுத்த நிலையை அடைந்ததும், நிதி திரட்ட ஓம்ரி திட்டமிட்டுள்ளார். ஓம்ரியின் இந்த கண்டுபிடிப்பு நிறைவேறுமாயின், விண்வெளியிலிருந்து பூமியை காணும்போது, வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டது போல், பூமி ஒளிரும் என, பலரும் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

No comments

Powered by Blogger.