Header Ads



காபியை குடிப்பதற்கு பதிலாக, "ஸ்ப்ரே' மூலம் உட்செலுத்திக் கொள்ளும் புதிய முறை

காபியை குடிப்பதற்கு பதிலாக, "ஸ்ப்ரே' மூலம் உட்செலுத்திக் கொள்ளும் புதிய முறையை, அமெரிக்க ஆய்வாளர் கண்டுபிடித்து உள்ளார்.

அமெரிக்காவின், ஹார்வர்டு பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த, உயிர் வேதியியல் துறை ஆய்வாளர், பென் யூ, காபியின் மூலப்பொருளான, "கபின்' பற்றிய ஆராச்சியில் ஈடுபட்டு உள்ளார். இதன் ஒரு பகுதியாக, காபியை குடிப்பதன் மூலம் பெறும் கபினை, ஸ்ப்ரே மூலம் உடலில் உட்செலுத்திக் கொள்ளலாம் என, நிரூபித்துள்ளார். புத்துணர்ச்சிக்காக மக்கள் அதிகம் குடிக்கும் காபியில், கபின் எனும் மூலப் பொருள் உள்ளது. இதுவே, உடலில் புத்துணர்ச்சியை ஏற்படுத்துகிறது.

இதுகுறித்து, பென் யூ கூறியதாவது,

 காபியில் உள்ள மூலப்பொருள், கபினை பிரித்தெடுத்து, அதனுடன் நீர் மூலக்கூறுகள் மற்றும் அமினோ அமிலத்தைச் சேர்த்து, ஸ்ப்ரே ஒன்றை தயாரித்து உள்ளேன். கபின் திரவ வடிவம் பெற, நீர் மூலக்கூறு உதவி செய்கிறது. உடலில், கபின் ஊடுருவிச் செல்ல, அமினோ அமிலங்கள் துணை புரிகின்றன. திரவ வடிவில் தயாரிக்கப்பட்டுள்ள இந்த ஸ்ப்ரே, மனித உடலின், கை மணிக்கட்டு மற்றும் கழுத்துப் பகுதியில் தெளித்துக் கொள்வதின் மூலம், கபின், ரத்த நாளங்களில் ஊடுருவிச் சென்று, ரத்தத்துடன் கலக்கிறது. இதனால், காபி குடிக்கும்போது கிடைக்கும் அதே புத்துணர்வு, ஸ்ப்ரே மூலமும் கிடைக்கிறது. நான்கு முறை, ஸ்ப்ரே செய்வதின் மூலம், ஒரு கோப்பை காபி குடிப்பதின் மூலம் கிடைக்கும் புத்துணர்ச்சியை பெறலாம். எனினும், ஒரு நாளில், ஒருவர், 20 முறைக்கு மேல் ஸ்ப்ரே செய்யக் கூடாது. என்னதான் ஸ்ப்ரே மூலம், கபின் உட்செலுத்தப்பட்டாலும், சூடாகவும், குளிர்ச்சியுடனும், காபி குடித்து பழகிய காபி பிரியர்களுக்கு, அதே போன்ற அனுபவம் கிடைக்குமா என்பதில் சந்தேகமே. எனினும், புத்துணர்ச்சிக்காக காபி குடிப்பவர்களுக்கு, ஸ்ப்ரே நல்ல மாற்றாக அமையும். இவ்வாறு, பென் யூ கூறினார்.

No comments

Powered by Blogger.