Header Ads



கிழக்கு மாகாண ஆட்சிக்கு முஸ்லிம் காங்கிரஸ் வழங்கும் ஆதரவை மீள்பரிசீலிக்க வேண்டிய நிலை

கிழக்கு மாகாணத்தில் முஸ்லிம்கள் எதிர்நோக்கும் காணிப் பிரச்சினைக்கு கிழக்கு மாகாண சபை தீர்வு வழங்காமல் தொடர்ந்தும் இழுத்தடிப்புச் செய்யுமானால் மாகாண ஆட்சிக்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் வழங்கி வருகின்ற ஆதரவை மீள்பரிசீலிக்க வேண்டிய துர்ப்பாக்கிய நிலை ஏற்படலாம் என்று  அக்கட்சியின் கிழக்கு மாகாண சபை குழுத் தலைவர் ஏ.எம்.ஜெமீல் எச்சரித்துள்ளார்.

தவிசாளர் ஆரியவதி கலப்பதி தலைமையில் இன்று திங்கட்கிழமை (30) காலை 9.30 மணியளவில் ஆரம்பமாகி இடம்பெற்ற கிழக்கு மாகாண சபையின் மாதாந்த சபை அமர்வில் முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர் ஆர்.எம்.அன்வர்  புல்மோட்டை முஸ்லிம்களின் காணிப் பிரச்சினை தொடர்பாக அவசர பிரேரணை ஒன்றை சமர்ப்பித்திருந்தார்.

இதனை வழிமொழிந்து உரையாற்றியபோதே மு.கா. குழுத் தலைவர் ஏ.எம்.ஜெமீல் மேற்கண்டவாறு தெரிவித்தார். 

அவர் அங்கு மேலும் கூறியதாவது;

"கிழக்கு மாகாண முதலமைச்சர், மக்கள் நலன் கருதி சில நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்ற போதிலும் அவை எதுவும் அமுல்நடத்தப்படுவதாகத் தெரியவில்லை. இந்த மாகாண சபை நிர்வாகம் செயற்றிறனற்று காணப்படுகிறது. 

கிழக்கில் தமிழ், முஸ்லிம் மக்களின் காணிகள் அங்கும் இங்குமாக சுவீகரிக்கப்பட்டு வருகின்ற போதிலும் அவற்றை எமது கிழக்கு மாகாண சபையினால் தடுத்து நிறுத்த முடியாமல் இருக்கிறது.

அந்த வகையில்தான் புல்மோட்டை முஸ்லிம்களின் காணிப் பிரச்சினையும் தீர்வின்றி இழுத்தடிப்பு செய்யப்பட்டு வருகின்றது. இதனை அப்பகுதி சார்பான எமது கட்சியின் உறுப்பினர் அன்வர் உணர்புவூர்வாமக் இந்த சபையில் வெளிப்படுத்தியுள்ளார். 

இவ்வாறான நிலைமை தொடருமாயின் கிழக்கின் ஆட்சிக்கு   முட்டுக் கொடுத்திருக்கின்ற எமது முஸ்லிம் காங்கிரசின் ஆதரவை மீள்பரிசீலிக்க வேண்டிய துர்ப்பாக்கிய நிலைக்கு நாம் தள்ளப்படுவோம் என்பதை அக்கட்சியின் குழுத் தலைவர் என்ற ரீதியில் இந்த சபையில் சொல்லிக் கொள்கின்றேன்.

அத்துடன் இந்த மாகாண சபையின் சட்டம் ஒழுங்கை மீறி, இயல்பு நிலைக்கு பாதிப்பு ஏற்படும் வகையில்- ஆட்சி மாற்றமொன்றுக்கு வழிகோலும் வகையில் நாம் செயற்பட வேண்டியேற்படும் என்றும் எச்சரிக்கிறேன்.

கிழக்கு மாகாண சபையின் இந்த ஆட்சி நிறுவப்பட்டு ஒரு வருடம் கடந்துள்ள போதிலும் உருப்படியாக எதுவும் செய்யாமல் சோர்வு நிலையில் கானப்படுவதானது உறுப்பினர்களாகிய எம்மையும் மக்களையும் பெரும் கவலையடைய செய்துள்ளது. இந்த நிலைமை தொடர்ந்தும் நீடிக்க அனுமதிக்க முடியாது. இது தொடர்பில் நாம் தீர்க்கமான முடிவுகளை மேற்கொள்ள வேண்டும்.

அந்த வகையில் புல்மோட்டை முஸ்லிம்களின் காணிப் பிரச்சினைக்கு இந்த சபை உடனடியாகத் தீர்வு காண முன்வர வேண்டும். அதற்காக ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். இது விடயத்தில் முதலைமைச்சர் தனது அதிகாரங்களை முழுமையாகப் பயன்படுத்த முன்வர  வேண்டும் என வலியுறுத்திக் கேட்டுக் கொள்கின்றேன். 

எமது கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிட்டால் ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அனைவரும் ஒன்றிணைந்து இந்த மாகாண சபைக்கு முன்னால் சத்தியாக்கிரகப் போராட்டத்தில் குதிப்போம் என்று எச்சரிப்பதுடன் அதற்காக உறுப்பினர்கள் அனைவருக்கும் அறைகூவல் விடுக்கின்றேன்.   

இந்த சந்தர்ப்பத்தில் முப்பது ஆசனங்களுடன் வடக்கு மாகாணத்தின் ஆட்சியைக் கைப்பற்றியுள்ள தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கும் அதன் முதலமைச்சர் விக்னேஸ்வரன்   அவர்களுக்கும் எமது கட்சியின் சார்பில் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

அங்கு அமையப் போகின்ற ஆட்சியை முன்மாதிரியாகக் கொண்டு எமது கிழக்கு மாகாண சபையின் ஆட்சியை முன்னெடுப்பதற்கு எமது முதலமைச்சரும் ஏனைய அமைச்சர்களும் தயாராக வேண்டும்" என்றும் ஜெமீல் குறிப்பிட்டார்.

No comments

Powered by Blogger.