Header Ads



மாத்தளையில் காதி நீதிமன்றம்

(டாக்டர் ஏ.ஆர்.ஏ. ஹபீஸ்)

மாத்தளையில் நிர்மாணிக்கப்பட்டுள்ள காதி நீதிமன்றம், நீதியமைச்சரும், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவருமான ரவூப் ஹக்கீம் அவர்களால் அண்மையில் உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டது. முன்னர் வீடுகளிலும், பாடசாலைக் கட்டடங்களிலும் இயங்கி வந்த காதி நீதிமன்றங்கள் அமைச்சர் ஹக்கீமின் முயற்சியின் பயனாக, பெரும்பாலும் சுவீகரிக்கப்பட்ட அரச காணிகளில் அவற்றிற்கான நிரந்தரக் கட்டடங்கள் அமைக்கப்பட்டு அவற்றில் செயல்பட்டு வருகின்றன. மாத்தளை காதி நீதிமன்றத்திற்கான காணியை இருவர் அன்பளிப்பாக வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஏற்கனவே 9 காதி நீதிமன்றங்கள் அமைச்சர் ஹக்கீம் முயற்சியால் அவற்றிற்காக புதிதாக நிர்மாணிக்கப்பட்ட கட்டடங்களில் செயல்பட்டு வருகின்றன. வெகுவிரைவில் இறக்காமம், பொத்துவில், வெள்ளை மணல், ஹொரம்பாவ (குளியாபிட்டி) ஆகிய இடங்களில் நிர்மாணிக்கப்பட்டுள்ள காதி நீதிமன்றங்கள் உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்படவுள்ளன.

முஸ்லிம் விவாக, விவாகரத்து சட்டத்தின் கீழ் காதி நீதிமன்றங்களின் ஊடாக கணவன் மனைவி ஆகியோருக்கிடையில் ஏற்படும் திருமணம் தொடர்பான பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்படுகின்றது. அமைச்சர் ஹக்கீம் தமது பதவிக் காலத்திற்குள் முஸ்லிம் விவாக விவாகரத்துச் சட்டத்தில் உரிய திருத்தங்களை மேற்கொள்ளவதில் அதிக கவனம் செலுத்தி வருகிறார். உயர் நீதிமன்ற நீதியரசர் சலீம் மர்சூப் அவர்களின் தலைமையின் கீழ் நியமிக்கப்பட்டுள்ள அதற்கான குழு அறிக்கையை அமைச்சரிடம் கையளித்தவுடன் அதனை சட்டமாக்கும் நடவடிக்கைகள் உரிய முறையில் விரைவுபடுத்தப்படவுள்ளது.


No comments

Powered by Blogger.