Header Ads



முஸ்லிம்கள் சமய வழிபாடுகளில் பங்கேற்பது கூடுதலாகவுள்ளது - மஹிந்த

30 வருடங்களுக்குப் பின்னர் சகல மதங்களுக்கும் சகல உரிமைகளையும் வழங்கி அனைத்து மதங்களையும் பாதுகாத்து கட்டியெழுப்புகின்ற யுகம் தற்போது தான் உருவாக்கப்பட்டுள்ளது என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் தெரிவித்தார். குருநாகல் வாரியபொல பகுதியில் நடைபெற்ற மத நிகழ்வொன்றில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு தொடர்ந்தும் உரையாற்றிய ஜனாதிபதி தமதுரையில் மேலும் தெரிவித்ததாவது :-

அரசியலமைப்பில் சகல மதங்களுக்கும் வழங்கப்பட்டிருக்கும் உரிமையை நாம் ஒருபோதும் பறித்துக்கொள்ளப் போவதில்லை. மாறாக சகல மதங்களையும் பாதுகாத்து அவற்றுக்கான சுதந்திரங்கள் வழங்கப்பட்டுள்ளன. இதில் போட்டிகளுக்கு இடமில்லை. சகல மதங்களும் அவர்களது மதங்களைப் பேணும் சூழல் கட்டியெழுப்பப்பட்டுள்ளது. மதங்களுக்கிடையில் சகவாழ்வுடனான சூழல் மிக முக்கியமானது. நாம் அனைவரும் சகோதரர்களாக செயற்பட வேண்டும்.

புதிதாக மத மாற்றங்களை மேற்கொள்ளுதல் பணத்துக்காக மத மாற்றங்களை மேற்கொள்ள முனையும் சில குழுக்கள் பற்றி என்னிடம் மதத் தலைவர்கள் முறையிட்டுள்ளனர். சில இந்து, கத்தோலிக்க குருக்களும் இது பற்றி என்னிடம் தெரிவித்துள்ளனர். இது விடயத்தில் நாம் அனைவரும் அவதானமாக செயற்பட வேண்டும். சட்டத்தின் மூலம் இதைத் தடுப்பதிலும் பார்க்க, சகல மதத் தலைவர்களும் ஒன்றிணைந்து செயற்பட்டு இதனைத் தடுக்க முடியும். எமது மதத்தைப் பாதுகாப்பது நமது கடமையும் பொறுப்புமாகும்.

சமய நடவடிக்கைகளைப் போன்றே எதிர்கால பரம்பரையை நல்வழிப்படுத்தும் பொறுப்பும் சகல மதத் தலைவர்களுக்கும் உள்ளது. சமயம் பற்றியும் வரலாறு பற்றியும் இளைய சந்ததியினர் அறிந்திருப்பது முக்கியம். அதனால்தான் சமயம் மற்றும் வரலாறை கற்பிப்பது அவசியம் என சர்வதேசப் பாடசாலைகளுக்கும் உத்தரவிட்டுள்ளோம்.

உண்மையில் சமய வழிபாடுகளில் முஸ்லிம்கள், கத்தோலிக்கர்கள் பங்கேற்பது கூடுதலாகவுள்ளது. பெளத்தர்கள் போயா தினத்தில் விடுமுறை வழங்கியும் அன்றைய தினம் விஹாரைக்குப் போவதில்லை. எனினும் முஸ்லிம்கள் வெள்ளிக்கிழமையும் கத்தோலிக்கர்கள் ஞாயிற்றுக்கிழமையும் கட்டாயம் தமது வழிபாட்டுத் தலங்களுக்கு சென்று சமயக் கடமைகளில் ஈடுபடுகின்றனர்.

நாம் நாட்டைக் கட்டியெழுப்ப சமயங்களின் பின்னணி முக்கியமானதாகும். அரச ஊழியர்கள் போயாதினம் விஹாரைக்குப் போக வேண்டுமென்று நாம் சட்டம் அமுல்படுத்த முடியாது. அவர்களே அதனைத் திருத்திக் கொள்ள வேண்டும்.

No comments

Powered by Blogger.