Header Ads



நாட்டு முஸ்லிம்களின் பாதுகாப்புக்காக ஹஜ் செல்வோர் துஆ கேட்க வேண்டும் - உஷ்தாத் அப்துல் ஹலீம்

(ஏ.எஸ்.எம்.இர்ஷாத்)

இந்த வருடம் புனித ஹஜ் கடமையை நிறைவேற்றச் செல்லுபவர்களுக்கான 'ஹஜ் வழிகாட்டல் பயான்' இன்று சனிக்கிழமை கொழும்பு-10 இல் அமைந்துள்ள பெண்கள் கல்வி வட்டத்தில் காரா ட்ரவல்ஸ் அண்ட் டுவர்ஸ் ஏற்பாட்டில் நடைபெற்றது.

இதன்போது அனுபவம் வாய்ந்த உலமாக்களால் சிறப்பான முறையில் ஹஜ் சம்பந்தமாக விளக்கமளிக்கப்பட்டது. மௌலவி உஷ்தாத் அப்துல் ஹலீம்(ஷர்க்கி), மௌலவி ஆதம்பாவா, மௌலவி அர்க்கம் நூர் ஆமித், மௌலவி சலாஹூதீன் ஆகிய உலமாக்கல் ஹாஜிகளுக்கு தேவையான விளக்கங்களை வழங்கினார்கள்.

குறிப்பாக மௌலவி உஷ்தாத் அப்துல் ஹலீம் இங்கு விளக்கமளிக்கையில்:,

ஒவ்வொரு ஹாஜியும் ஹஜ்ஜின்போது முழுமையான ஹஜ்ஜை எவ்வாறு அடைந்து கொள்வது குறித்து விளக்கமளித்தார்.   இரு ஹரம் ஷரீபுகளிலும் மினா, அரபா, முத்தலிபா போன்ற இடங்களில் ஓய்வான நேரங்களை எவ்வாறு சாதகமானதாக பயன்படுத்திக் கொள்ளவது பற்றி கூறினார். தனிமனித வாழ்க்கையில் அனைத்து கட்டங்களிலும் பொறுமையின் அவசியம் வலியுறுத்தப்படுகின்றது. இதுகுறித்த அல்குர்ஆனிய வசனங்கள் ஏராளம் உண்டு. விசேடமாக ஹஜ்ஜின்போது ஒரு ஹாஜி வாத பிரதிவாதங்களில் ஈடுபடாமல் இருப்பதுடன் தீயசெயற்பாடுகளிலிருந்து தவிர்ந்து கொள்ள வேண்டும். புறம்பேசுதல், கோள்சொல்லுதல் முதலிய மனித வாழ்வுக்கு ஒவ்வாதவார்த்தை பிரயோகங்களை தப்பித்தவறியேனும் மொழிந்து விடக்கூடாது. இது நபிகள் ஸல் அவர்களின் அன்பான கட்டளையாகும்.  

நன்மைகள் நிறைந்த ஹஜ்ஜூக்கு சுவர்க்கமே கூலியாகும். நன்மைகள் நிறைந்ததாக நாம் ஹஜ்ஜை ஆக்கிக்கொள்ள வேண்டும்.   பிரத்தியேகமாக நாம் செய்யவேண்டிய நற்கருமங்கள்தான் என்ன என நபிகளாரிடத்தில் வினா எழுப்பப்பட்டபோது நபியவர்கள் சொன்;னார்கள் உணவளித்தல், நல்ல கனிவான பேச்சுக்களை பேசுதல், அறிந்தோருக்கும் அறியாதோருக்கும் சலாம் சொல்லிக் கொள்ளுதல் ஆகிய மூன்று அம்சங்களும் எனக் கூறினார்கள்.  

இது ஒரு ஹாஜியின் ஹஜ் நன்மைகள் நிறைந்ததாக அல்லாஹ்விடத்தில் அங்கீகாரம் பெறுவதற்கான பிரதான காரணமாக அமையும் எனவும் நபி ஸல் அவர்கள் கூறினார்கள்.ஹஜ்ஜூடைய காலங்களில் துஆக்கள், பிரார்த்தனைகள் அங்கீகரிக்கக்கூடிய சந்தர்ப்பங்களை அல்லாஹ் வழங்கியுள்ளான். நமது நாட்டு முஸ்லிம்களின் பாதுகாப்புக்காகவும் முஸ்லிம்களின்மீது தப்பபிப்பிராயம் கொண்டவர்களின் எண்ணங்களில் நல்லெண்ணம் உண்டாவதற்குமான துஆக்களில் ஈடுபடுவதுடன் விசேடமாக அரபு மற்றும் முஸ்லிம் நாடுகளில் இன்று ஏற்பட்டிருக்கின்ற சூழ்ச்சிகள் நீங்கி மனித குலம் ஒற்றுமையாக வாழ்வதற்கு நாம் அனைவரும் ஹஜ்ஜூடைய காலங்களில் புனித இடங்களில் அதிகமதிகமாக துஆ கேட்பதில் ஈடுபடுதல் வேண்டும் எனவும் அவர் தனது உரையில் கேட்டுக் கொண்டார். 


No comments

Powered by Blogger.