சகோதரத்துவம் - ஓர் இஸ்லாமியக் கண்ணோட்டம்
(அபு அரிய்யா)
மனித சமூகத்தின் சிறப்பான வாழ்க்கைக்கென படைத்த இறைவனாலேயே ஒழுங்கு படுத்தப்பட்ட ஒரு நெறிமுறைத் திட்டம்தான் இஸ்லாம். இதில் மனிதனுக்கும் இறைவனுக்குமிடையிலான உறவுகள், தொடர்புகள் மற்றும் மனிதனுக்கும் மனிதனுக்குமிடையிலான உறவுகள், தொடர்புகள் அத்தோடு மனிதனுக்கும் ஏனைய ஜீவராசிகளுக்குமிடையிலான தொடர்புகள் குறித்தும் விரிவான கொள்கையினை இஸ்லாம் போதிக்கின்றது.
இஸ்லாம் எனும் மார்க்கத்தில் ஈமானின் அடிப்படைகளாக போதிக்கப்படும் முக்கிய வணக்கவழிபாடுகளுள் ஒன்றுதான் மனிதனுக்கும் மனிதனுக்குமிடையிலான தொடர்போடு இணைந்திருக்கும் சகோதரத்துவம் எனும் பண்பொழுக்கமாகும். இது ஈமான் பூரணமாவதற்கான நிலையாகவும், தாவாவின் ஒழுங்குமுறையாகவும் அனைத்து வணக்க வழிபாடுகளினதும் அடிப்படையாகவும் மறுமையின் சுபீட்சமாகவும் திகழ்கிறது.
சகோதரத்துவம் எனும் பண்பு உலகில் தோன்றிய அனைத்து மனித சமூகத்திலும் மூன்று வகை நிலையைக் கொண்டு மதிப்பிடப்படுகின்றது.
1. இரத்த உறவு ரீதியாக ஏற்படுத்தப்பட்ட குடும்ப சகோதரத்துவம்.
2. அல்லாஹ்வின் சட்டதிட்டங்களை ஏற்று அவனுக்கு கட்டுப்பட்ட முஸ்லிம்களாக வாழுகின்ற படியால் உருவாகிய கொள்கைச் சகோதரத்துவம் 'மூமின்கள் ஒருவருக்கொருவர் உற்ற சகோதரர்கள்' (குர்ஆன்)
3. உலகில் தோன்றிய மனித சமூகம் அடிப்படையில் ஒரு தாய் தந்தையின் வாரிசுகள் என்பதால் ஏற்பட்ட மனித சகோதரத்துவம். 'ஆதமின் மக்கள் அனைவரும் சகோதரர்கள்' (குர்ஆன்)
இவ்வகையான சகோதரத்துவ நிலைக்குள் பெறுமதியானதும் மறுமையில் வெற்றியையும் அல்லாஹ்வின் திருப்தியையும் தரக்கூடியதுமான சகோதரத்துவம்தான் அல்லாஹ்வின் கொள்கையாகிய இஸ்லாத்தை ஏற்றுக் கொண்ட முஸ்லிம்கள் எனும் சகோதரத்துவமாகும். 'நீங்கள் யாவரும் (ஒன்று சேர்ந்து) அல்லாஹ்வுடைய கயிற்றை பலமாக பற்றிப்பிடித்துக்கொள்ளுங்கள். (உங்களுக்குள் கருத்து வேறுபட்டு) நீங்கள் பிரிந்துவிட வேண்டாம்.....' (குர்ஆன்)
இஸ்லாம் தனது கொள்கையை இவ்வுலகில் வாழவைப்பதற்காக ஏற்படுத்திய மனித சமூகத்துக்குள் இப்புனிதமான பண்பை ஒரு வணக்க வழிபாடாகவே ஏற்படுத்தியிருக்கின்றது. ஒரு சமூகக் கட்டமைப்பில் ஒருவர் சகோதரத்துவ உணர்வின்றி முஸ்லிம்களுக்கிடையிலான தொடர்பை முறித்து வாழ முற்படுவதை பெரும்பாவமாக கருதுகின்றது.
நபி (ஸல்) அவர்கள் 'என் உயிரை தன் கையில் வைத்திருப்பவன் மீது சத்தியமாக! ஈமான் கொள்ளும்வரை நீங்கள் சுவர்க்கத்தில் நுழையமாட்டீர்கள். நீங்கள் ஒருவருக்கொருவர் பரஸ்பரம் அன்பு கொள்ளும்வரை ஈமான் கொண்டவர்களாகமாட்டீர்கள்' (முஸ்லிம்)
இவ்வாறாக இப்பண்பை வலியுறுத்திய நபியவர்கள் கோத்திர வெறிபிடித்து குரோத மனப்பாங்குடன் மிருக உணர்வுகளோடு வாழ்ந்த அந்த ஜாஹிலிய்ய சமூகத்துக்குள் சகோதரத்துவ வாஞ்சையெனும் பண்பைத் தூவி இவ்வுலகையே தமது பண்பொழுக்கத்தாலும் முன்மாதிரியத்தாலும் வழிநடாத்தும் தகுதியை அச்சமூகத்துக்கு ஏற்படுத்திக் கொடுத்தார்கள்.
இதனால்தான் வரலாற்றில் மனித விழுமியம், உரிமை, சுதந்திரம் என்பவற்றின் முழுமையான அடையா ளத்தை இவ்வுலகில் அரங்கேற்றிய பெருமையை அந்த ஸஹாபா சமூகம் பெறுகின்றது.
ஆனால் அந்த ஈமானிய நிலையை இன்றைய எமது சமூகத்தில் காண முடியாமற் போயுள்ளது. ஏனெனில் சகோதரத்துவத்தின் பெறுமானம் உணரப்படாமல் பிரதேசவாதமென்றும் இயக்க வேறுபாடுகளென்றும் அரசியல் கட்சி பேதமெனவும் முரண்பட்டதோடு மட்டுமல்லாமல் வியாபார நடவடிக்i ககளிலும் பாடசாலைகளுக்கிடையிலும் விளையாட்டுக் கழகங்களுக்கிடையிலும் சமூக நிறுவனங்களுக்கு மத்தியிலும் ஒருவருக்கொருவர் முரண்பட்டு சகோதரத்துவ பண்பை இழந்து பலமிழந்த ஒரு சமூகமாக வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.
சகோதரத்துவத்துக்கான வரைவிலக்கணத்தை தெளிவுபடுத்திய இஸ்லாம் ஒருவருக்கொருவர் பொறாமை கொள்ளக்கூடாது. ஒருவருக்கொருவர் போட்டியாக நடந்துகொள்ளக் கூடாது. ஒருவரை ஒருவர் புறக்கணிக்கக்கூடாது. சிலர் சிலரின் விற்பனைக்கெதிராக குறைத்து விற்கக்கூடாது. கடினமாய் பேசி மனதைப் புண்படுத்தக்கூடாது. யாரையும் தாழ்வாக எண்ணக்கூடாது. யாருக்கும் அநீதமி ழைக்கக்கூடாது. யாரையும் இழிவுபடுத்தக் கூடாது. என்றெல்லாம் போதித்ததோடு மூன்று நாட்களுக்கு மேல் ஒரு சகோதரனுடன் பேசாமல் இருப்பவன் இஸ்லாத்தைச் சார்ந்தவனல்லன் என்றும் எச்சரிக்கின்றது. அத்தோடு ஒரு முஸ்லிமுடைய உயிர்இ அவனுடைய செல்வம், அவனுடைய மானம் அடுத்த முஸ்லிமுக்கு ஹராம் எனத் தடுத்திருக்கிறது. இதுவே சகோதரத்துவத்துக்கு இஸ்லாம் கொடுத்த முக்கியத்துவத்துக்கான ஆதாரமாகும்.
நபி (ஸல்) அவர்கள் 'ஒரு முஸ்லிம் அடுத்த முஸ்லிமுடைய சகோதரனாக இருக்கிறான். அடுத்த முஸ்லிமுக்கு அநியாயம் செய்ய மாட்டான். அவனைக் கைவிடமாட்டான் யார் தன் சகோதரனுடைய தேவை யின்போது அவனோடு இருக்கிறானோ அல்லாஹ்வும் அவனுடைய தேவையின் போது அவனோடு இருப்பான். ஒரு முஸ்லிம் இன்னொரு முஸ்லிமுடைய உலக துன்பத்தை நீக்கினால் அல்லாஹ் அந்த முஸ்லிமுடைய மறுமைத் துன்பத்தை நீக்கிவிடுவான். யார் அடுத்த முஸ்லிமுடைய குறைகளை மூடி மறைக்கிறாரோ அந்த முஸ்லிமுடைய குறையை மறுமை நாளில் அல்லாஹ் மறைத்துவிடுவான்'. எனக் கூறினார்கள்.(புஹாரி)
ஈமானுக்கு அடுத்த நிலையாக நோக்கப்படும் ஒரு முஸ்லிமை நேசிக்கும் பண்பை எமக்குள் வளர்த்துக்கொள்ள நாம் முயற்சிக்க வேண்டும். அதனால்தான் இஸ்லாம் அடிப்படை வணக்க வழிபாடுகளான தொழுகை ஸக்காத்இ ஹஜ் போன்ற கடமைகளோடு முஆனகாஇ முஸாபஹாஇ ஸலாம் போன்ற பண்புகளின் முலமும் ககோதரத்துவத்தின் மேன்மையை எமக்குக் கற்றுத் தருகிறது.
ஆகவே, இப்பண்பை உணர்ந்து தொடர்ந்தேர்ச்சியான பிணக்குகள் முரண்பாடுகள் என்பவற்றைக் களைந்து அல்லாஹ்வுக்குச் செய்யவேண்டிய கடமைகளில் எந்தளவு கரிசணையோடும் கவனத்தோடும் நடந்து கொள்கின்றோமோ அதேயளவு அல்லாஹ்வினால் வலியுறுத்தப்பட்ட மனிதர்களுக்குச் செய்ய வேண்டிய கடமைகளிலும் நாம் கவனம் செலுத்த வேண்டும். ஏனெனில் மனிதனுக்குச் செய்யவேண்டிய கடமைகளை தவறிய நிலையில் ஒருபோதும் எம்மால் சுவனம் நுழைய முடியாது.
(பிணக்குகள் நிறைந்த) இழுபறி நிலைகளை நீங்கள் ஏற்படுத்திக்கொள்ள வேண்டாம். நீங்கள் தோல்வியடைவீர்கள். உங்களது பலம் போய்விடும்.'(8:46)
'ஈயத்தால் உருக்கி வார்க்கப்பட்ட அரனைப்போல் அல்லாஹ்வின் பாதையில் ஓரணியாக நின்று போராடுபவர்களையே நிச்சயமாக அவன் நேசிக்கிறான்'. (61:4)
குர்ஆனின் போதனைகள் எம்மை வழிநடாத்தட்டும்.
Post a Comment