Header Ads



யார் இந்த ஷஷி விஜேந்திர (அவுப் ஹனிபா) ?

( "Ash Sheikh Shafeek - UK" )

ஷஷி விஜேந்திர (அவுப் ஹனிபா) இவ்வார இலங்கையின் மீடியாக்களிலும்  சமூக இணையத் தளங்களிலும் அதிகம் உச்சரிக்கப் பட்ட வார்த்தை தான் இந்த ஷஷி விஜேந்திர. இவர்  இலங்கையின்  முன்னாள் சிங்கள சினிமா நட்சத்திரம்.  கடந்த வாரம் இவருடன் சிரச டிவி ஒரு சிறப்பு கலந்துரையாடலை நடாத்தி அதனை ஒளிபரப்பியது முதல் இவர் பற்றி பல ஊடகங்களும்  இணையத் தளங்களும் முக்கியத்துவம் கொடுக்க ஆரம்பித்தன.

எனவே எமது   சகோதரர்களில் பலர்  ஆர்வத்தின் காரணமாக பல இல்லாத செய்திகளையெல்லாம் இவர் பற்றி  பரப்பி  விட்டிருப்பதைக் காணக் கிடைத்தது. உண்மையில் அவுப் ஹனிபா  எனது  மிகநெருங்கிய உறவினராகவும் ( எனது சொந்த மைத்துனியின் (மதினியின் ) மகனாகவும்,   சுமார்  12 வருட காலம் என்னுடன் உறவினர் என்பதற்கும் மேலாக  ஒரு நண்பர் போலவே அவர் பழகி வந்திருப்பதால் அவர் பற்றிய சகல விடயங்களையும் எனது சிறு வயது முதலே நன்கு அறிந்து வைத்திருக்கிறேன். பொதுவாகவே ஊடகங்களையும், சமூக இணையத் தளங்களையும் அதிகம் நாட்டம் கொள்ளும் எமது சமூகத்தில் சிலர் அவற்றைப் பயன்படுத்தி நம்பகமற்ற, உண்மைக்குப் புறம்பான, மிகைப் படுத்தப்பட்ட செய்திகளை சமூகத்தில் பரத்தி விடுவதால் உண்மையை அறிந்து கொள்வதில் சமூகம் குழம்பிப் போய்  விடுகிறது. உறுதியாக அறியாத செய்தியொன்று எம்மை வந்து சேரும் போது எவ்வாறு நாம் நடந்து கொள்ள வேண்டும் என்பதை குர் -ஆன், சுன்னஹ் எமக்கு அழகாக வழி காட்டியிருக்க கிடைக்கும் செய்திகளையெல்லாம் சமூகத்தின் காதில் ஊதி விடும் விடயத்தை  எமது இஸ்லாமிய ஊடகங்களும்,சகோதரர்களும் மிகவும் கவனமாக கையாள வேண்டும்.

ஈமான் கொண்டவர்களே : ஒரு தீயவன்(சந்தேகத்துக்கு இடமானவன்) ஒரு செய்தியை உங்களிடம் கொண்டு வரும் போது (அச் செய்தியின் உண்மை நிலை பற்றி ) தெளிவு பெற்றுக் கொள்ளுங்கள் என்று சூரா அல்  ஹுஜுராத்தின் 06 ஆவது வசனம் குறிப்பிடுகிறது. தான் செவியுறும் செய்திகள் அனைத்தையும் (அவற்றின் உண்மை நிலை அறியாது பிறருக்கு) கூறி விடுவதே ஒருவன் பொய்யன் என்பதற்குப் போதுமானதாகும் என்ற ஹதீஸ் சஹீஹான பல ரிவாயத்துக்களில் பதிவாகியுள்ளது. இன்னும் ஏராளமான குர்- ஆன் வசனங்களும், ஹதீஸ்களும் இவ்விடயம் பற்றி கடுமையாக எச்சரித்திருப்பதால்  இன்றைய உலகில் மிகப் பெரும் சக்தியாக உருவெடுத்துள்ள ஊடகங்கள் (குறிப்பாக முஸ்லிம் ஊடகங்கள்) மேற் கூறிய விடயத்தில் மிகவும் கவனமாக நடந்து கொள்ள வேண்டும். மக்கள் உலக நடப்பைப் பற்றி   அறிந்து கொள்வது கட்டாயம் தான். ஆனால் அது பற்றி மக்கள்  அறிந்து கொள்ளாமல் இருப்பதை விட செய்திகளை அவர்கள் பிழையாகப் புரிந்து கொள்வது மிகப் பெரிய கொடுமையும்  அநியாயமும்  ஆகும்  என்பதை ஊடகங்கள் நினைவில்வைத்திருக்க வேண்டும்.


சரி இப்போது விடையத்துக்கு  வருகிறேன். இவ்வாரம் அவுப் ஹனிபா அவர்கள் பற்றி பல சமூக இணையத்தளங்கள் இன்று வரை செய்திகள் வெளியிட்டு வரும் நிலையில் சிலர் இன்று அவர் மாத்தளையில் ஒரு பள்ளி வாசலின் இமாம் என்று எழுதியிருந்தனர். அப்படியானால் அவர் (அவுப் ஹனிபா ) ஒரு ஆலிம் என சொல்ல வருகிறார்கள் போல. இன்னும் சில இணையத் தளங்கள் அவரது மனைவி ஒரு ஆளிமாவாக இருப்பதால்  தான் அவர் படம் நடிப்பதை விட்டார் என்றும், ஒரு இணையத் தளம் அவர் இன்று தப்லீக் ஜமா- அத்தின் அமீர் என்றும் எழுதியிருந்தது. இன்னும் பல .............  உண்மையில் அவர் பற்றிச் சொல்வதாயின் அவரது தாய்,தந்தை இருவரும் (ஹனிபா தம்பதியினர்) கண்டி- கல்ஹின்னையை பிறப்பிடமாகக் கொண்டவர்கள். பின்பு அவர்கள் மாத்தளை கம்பளை போன்ற பகுதிகளில் வசித்ததால் பிள்ளைகளான  அவுப் ஹனிபா, முனவ்வர் ஹனிபா, றோசான்  ஹனிபா ஆகியோரும் அப்  பகுதிகளிலே தமது  ஆரம்ப கால கல்வியைத் தொடர்ந்தனர். பின்பு குடும்பம் கொழும்பு சென்ற போது கல்வியை பிள்ளைகளும்  அங்கே தொடர்ந்தனர். கல்வி கற்ற காலத்தில் அவுப் மிகவும் கூச்ச சுபாவம் கொண்டவராக இருந்துள்ளார்.

1978 - 1983 களில் பல நாடகங்களில் பங்கு பற்றிய அவர்  1985 ஆம் ஆண்டு  தான் திரைப் பட நடிகரானார். அவரது தாய் அவரின் நடிப்புத் துறைக்கு விருப்பம் காட்ட வில்லை. உண்மையில் அந் நாட்களில் நாம் சிறு பிள்ளைகளாக இருந்த போது எமது குடும்பத்தில் எல்லோரும் அவர் படம் நடிக்கச் சென்றதை ஏசிக் கொண்டிருந்தது நன்றாக ஞாபகம் இருக்கிறது. போதாமைக்கு அவர் தம்பி முனவ்வர் ஹனிபாவும் திரைப் பட இயக்குனரானார். நாம் குடும்பப் பெயராக அவுப் ஹனிபாவை  ஆஜா நானா என்று அழைத்து வந்தோம். 1995 வரை 60 இற்கும் மேற் பட்ட சிங்களத் திரைப் படங்களை  நடித்து வந்த அவர் 90 களின் ஆரம்பத்தில் இலங்கையில்  அழகு ராணிப் போட்டியில் முதலாவது வந்த கிறிஸ்தவப் பெண்ணை தான் திருமணம் செய்தார்.

அக்காலங்களில் எமது தந்தையின் குடும்பமே அவர்களை விட்டும் விலகியிருந்தது. 1996 ஆம் ஆண்டு இலங்கையின் மிகச் சிறந்த தேசிய சினிமா நட்சத்திரம் பட்டம் பெற்றார். இன்னும் பல திரைப் படத்  படைத்துறையின் உயரிய  விருதுகளையும்  பெற்றிருந்தார். தாயின் வற்புறுத்தலாலும், குடும்பத்தினரின் விருப்பமின்மையாலும், குறிப்பாக  தனது கிறிஸ்தவ மனைவி இஸ்லாத்தை சரிவரத் தெரிந்து கொண்டு இவருக்கு புரிய வைத்ததுமே 1996 இன் இறுதிப் பகுதியில் இவரையும் இவரது தம்பியையும் சினிமாத்துறைக்கு முழுக்குப் போடத் தூண்டியது .

அன்று முதல் படிப் படியாக இஸ்லாத்தை நடை முறைப் படுத்திய இவர் சுமார் 17 வருட காலங்களாக எந்த மீடியாக்களுக்கும் முகம் கொடுக்காது இருந்து வந்தார். அவர், மனைவி பிள்ளைகள், அவரது தம்பி தங்கையின் குடும்பங்கள்  என அனைவரும் முழுமையான இஸ்லாமிய வாழ்கை நெறிக்குள் இன்று வந்திருக்கிறார்கள். 04 ஆண்  பிள்ளைகளையும்  ஒரு பெண் பிள்ளையையும் பெற்றுள்ள அவர் அனைத்து ஆண்  பிள்ளைகளையும் நபிமாரின் வாரிசுகளாக ( உலமாக்களாகவும்  ஹாபிழ்களாகவும்) ஆக்குவதில் ஆர்வம் கொண்டுள்ளார். அவரது மூத்த மகன் அப்துர் ரஹ்மான் இன்று குர்- ஆணை முழுமையாக மனனம் செய்த ஹாபிழ் ஆவார். உண்மையில் சினிமாப் பிரியர்களாக இருக்கும் எமது அனைத்து முஸ்லிம் சகோதர சகோதரிகளுக்கும் இவர் மிகச்  சிறந்த உதாரண புருஷர் ஆவார்.

2 comments:

  1. ஏன் ஒரு தனிப்பட்ட மனிதனை அதுவும் அவராகவே பிளையை ஏற்று ஒதுங்கி இருக்கும் வேளையில் விமர்சனங்களும்,விவாதங்களும்!அவர் விடயத்தில் அல்லாஹ் நங்கு அறிந்தவன் ஆக இன்றுள்ள முஸ்லிம்களுக்கு எதிரான சூழ்ச்சிகளை முறியடிப்பது எப்படி என்று சிந்தியுங்கள்,இஸ்லாத்தின் எதிரிகள் இப்படியான சில விடயங்கள் மூலம் ஆதாயம்(முஸ்லிம்களுக்கு எதிரான சூழ்ச்சிகளை மறக்கடிப்பதற்கான ஒரு முயற்சியாக)தேட முட்படுகிறார்களோ என்று நினைக்கத்தோன்றுகிறது, குர்ஆனும், ஹதீஸும்தான் எமது வழிகாட்டி என நாம் நம்பி செயற்படுவோமானால் சூழ்ச்சிகாரர்களின் சூழ்ச்சிகளை அல்லாஹ் முறியடிப்பான்.

    ReplyDelete

Powered by Blogger.