Header Ads



அல்குர்ஆனும், நமது சமூகமும்

(முஹம்மது நியாஸ்)

எல்லாம் வல்ல அல்லாஹ் தனது அடியார்களில் உரிய முறையில் இறை நம்பிக்கை கொண்டு சிறந்த முறையில் தன்னை வணங்கி வழி படுபவர்களுக்கென மறுமையில் பல ஆயத்தங்களை ஏற்படுத்தி வைத்துள்ளான்.அதே நேரம் அந்த ஏற்பாடுகளை அனுபவிப்பதற்கான பல வழி வகைகளையும் தனது தூதர் மூலம் அல்லாஹ் நமக்கு கற்றுத் தந்தும் உள்ளான்.அந்த வகையில் அல்லாஹ்விடத்தில் மிகவும் சிறப்புக்குரிய மறுமையில் அதிகளவில் நன்மைகளை ஈட்டித்தரக்கூடிய ஓர் அமல்தான் புனித வேதமான அல் குர்ஆனை  தினமும் ஓதி வருவதாகும்.

புனித குர்ஆனை ஓதுபவர் அல்லாஹ்விடத்தில் அனுபவிக்கக்காத்திருக்கும் விடயங்களை நாம் எடுத்து நோக்கினால் அதன் பெறுமதியை ஒப்பிடுவதற்கு இவ்வுலகில் ஈடாக ஏதும் கிடையாது.இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.உங்களில் ஒருவர் பாவத்திலும் உறவைத் துண்டிப்பதிலும் ஈடுபடா வண்ணம், புத்ஹான் அல்லது அகீக் என்ற இடத்திற்குச் சென்று கொழுத்த திமில் உடைய இரு பெண் ஒட்டகங்களைக் கொண்டு வர விரும்புவாரா?” என்று கேட்டார்கள். அதற்கு நாங்கள் ”அல்லாஹ்வின் தூதரே! அதை நாங்கள் விரும்புகின்றோம்” என்று பதிலளித்தோம். ”உங்களில் ஒருவர் அதிகாலையில் பள்ளிக்குச் சென்று மகத்துவமும் கண்ணியமும் நிறைந்த அல்லாஹ்வின் வேதத்திலிருந்து இரண்டு வசனங்களை விளங்கவோ அல்லது ஓதவோ கூடாதா? அவ்வாறு சென்று இரு வசனங்களை ஓதுவது இரு பெண் ஒட்டகங்களை விடவும் சிறந்தது. மூன்று வசனங்கள் மூன்று பெண் ஒட்டகங்களை விடச் சிறந்தது. நான்கு வசனங்கள் நான்கு ஒட்டகங்களை விடச் சிறந்தது. இந்த அளவுக்கு வசனங்கள் இதே அளவுக்கு ஆண் ஒட்டகங்களை விடச் சிறந்தது” என்று சொன்னார்கள். அறிவிப்பவர் : (சஹீஹ் முஸ்லிம்)
மேலும் நபியவர்கள் கூறினார்கள்.

அல்குர்ஆனை ஓதுகின்ற(நல்ல)வரின் நிலையானது எலுமிச்சை போன்றதாகும். அதன் சுவையும் நன்று! வாசனையும் நன்று! (நல்லவராக இருந்து) குர்ஆன் ஓதாமல் இருப்பவர், பேரீச்சம்பழத்தைப் போன்றவராவார். அதன் சுவை நன்று அதற்கு வாசனை கிடையாது. தீயவனாகவும் இருந்து கொண்டு குர்ஆனை ஓதிவருகின்றவனின் நிலை துளசிச் செடியின் நிலையை ஒத்திருக்கின்றது. அதன் வாசனை நன்று, சுவையோ கசப்பு! தீமையும் செய்து கொண்டு குர்ஆனையும் ஓதாமல் இருப்பவனின் நிலை குமட்டிக் காயின் நிலையை ஒத்திருக்கின்றது. அதன் சுவையும் கசப்பு, அதற்கு வாசனையும் கிடையாது. (சஹீஹுல் புகாரி:5020)

ஒரு எழுத்துக்குப் பத்து நன்மை!

அல்லாஹ் எப்போதும் தனது அடியானுக்கு நலவையே நாடுகிறான்.இறைவன் ஒருபோதும் தனது அடியார்களை துன்பப்படுத்த விரும்புவதுமில்லை,பணிப்பதுமில்லை.ஏனைய மதங்களைப் போன்று கடவுளுக்காக தன்னை அடித்துக்கொள்வது, தன்னை கூறிய ஆயுதங்களால் குத்திக்கொள்வது,வருத்திக்கொள்வது போன்ற விடயங்களை இஸ்லாம் வன்மையாகக் கண்டிக்கின்றது.எல்லாம் வல்ல இறைவன் தனது அடியார்கள் இவ்வுலகில் செய்கின்ற சிறிய அமல்களுக்குக் கூட மறுமையில் உயர்ந்த பல அந்தஸ்த்துக்களை வைத்திருப்பது இஸ்லாத்தின் தனிப்பெரும் சிறப்புக்களில் ஒன்றாகும்.அந்த வகையில் நபிகள் நாயகம் (ஸல்)கூறினார்கள். 

அல்லாஹ்வின் வேதத்திலிருந்து ஓர் எழுத்தை ஓதுபவருக்கு ஒரு நன்மை உண்டு! ஒரு நன்மை பத்து நன்மைகளைப் போன்றதாகும். அலிஃப், லாம், மீம் – என்பதை ஓர் எழுத்து என்று சொல்ல மாட்டேன். மாறாக, அலிஃப் ஓரெழுத்து, லாம் ஓரெழுத்து, மீம் ஓரெழுத்து என்று தான் கூறுவேன்” (திர்மிதி)
எனவே புனித வேதமான குர் ஆணை ஓதுவதன் மூலம் மிகவும் இலகுவாக அதிகளவான நன்மைகளை கொள்ளையிடலாம் என்பது இதன் மூலம் தெளிவாகிறது.

மலக்குகள் சூழ்ந்து கொள்வார்கள்

“அல்லாஹ்வுடைய வீடுகளில் ஒரு வீட்டில் மக்கள் ஒன்றாகச் சேர்ந்து அல்லாஹ்வுடைய வேதத்தை ஓதி தங்களுக்கு மத்தியில் அதை ஓதிக் காட்டி,(அதிலிருந்து) பாடம் படிக்கும் போது அமைதி அவர்கள் மீது இறங்காமல் இருக்காது. அவர்களை அருள் அரவணைத்துக் கொள்கின்றது. மலக்குகள் அவர்களைச் சூழ்ந்து விடுகின்றனர். குர்ஆன் ஓதும் அவர்களை அல்லாஹ் தன்னிடம் உள்ள மலக்குகளிடம் நினைவு கூர்கின்றான்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.(முஸ்லிம்)
புனித வேதத்தை இறையில்லங்களில் இருந்து கொண்டு ஓதுகின்ற பொது வானவர்கள் எம்மை சூழ்ந்து கொள்கிறார்கள் என்பது மேலுள்ள நபிமொழியின் விளக்கமாகும்.ஓர் உண்மையான விசுவாசிக்கு இவ்வாறனதொரு சந்தர்ப்பம் கிடைக்குமாக இருந்தால் அவன் இந்த உலகை விடவும் உலகிலுள்ள செல்வங்கள் அனைத்தையும் விடவும் புனித குர்ஆனையே அதிகம் நேசிப்பவனாக இருப்பான் என்பதில் ஐயமில்லை.

அது மாத்திரமல்ல, மேலும் நபியவர்கள் கூறினார்கள்.

“குர்ஆனை நன்கு மனனம் செய்து தங்கு தடையின்றி சரளமாக ஓதுபவர் இறைவனுக்குக் கட்டுப்பட்ட கண்ணியமிக்க வானவத் தூதர்களுடன் இருக்கின்றார். சிரமம் மேற்கொண்டு தட்டுத் தடுமாறி ஓதுபவருக்கு இரு கூலிகள் இருக்கின்றன.(முஸ்லிம்)

புனித குர் ஆணை ஓதுவதன் மூலம் ஓர் அடியான் ஓர் முஃமின் இந்தளவிற்கு சிறப்பிக்கப்டுகிறான் என்றால் இதன் மூலம் வல்ல நாயன் நம்மீது வைத்துள்ள அன்பையும் புனித வேதத்தின் சிறப்பையும் நாம் நன்கு உணர்ந்து கொள்ள முடியும்.

பொறாமை என்பது எதற்காக?

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
இரண்டு விஷயங்களைத் தவிர வேறெதற்காகவும் பொறாமை கொள்ளக் கூடாது.
1. ஒரு மனிதருக்கு அல்லாஹ் வேத ஞானத்தை வழங்கியுள்ளான். அதனை அவர் இரவு நேரங்களில் ஓதி வழிபடுகின்றார்.
2. இன்னொரு மனிதருக்கு அல்லாஹ் செல்வத்தை அளித்துள்ளான். அவர் அதனை இரவு, பகல் எல்லா நேரங்களிலும் தானம் செய்கின்றார்.(சஹீஹுல்புகாரி:5025)

நமது சமூகத்தின் நிலை

இவ்வாறு அல் குர்ஆனின் சிறப்புக்கள் பற்றி அல்லாஹ்வும் அவனது தூதரும் வலியுறுத்தியிருக்க இன்று நமது சமூகம் அவையனைத்தையும் புறந்தள்ளிவிட்டு வெறும் கேளிக்கைகளிலும் பயனில்லாத விடயங்களிலும் பொழுதை கழிக்கக் கூடிய நிலையை நாம் அவதானிக்கிறோம்.அன்றாட வாழ்க்கைக்கு துளியும் பயனில்லாத மாறாக தங்களின் எதிர்காலத்தையே குட்டிச் சுவராக்கிவிடுகின்ற சினிமாக்கள், சீரியல் நாடகங்கள் போன்றவற்றில் தமது பெறுமதியான நேரங்களை கழிக்கின்ற முஸ்லிம் இளைஞர் யுவதிகள் அல்லாஹ் நமக்களித்த நற்பாக்கியங்களுக்கு நன்றி செலுத்துவதற்காக வேண்டியாகினும் புனித குர்ஆனின் வசனங்களை படிக்காமல் இருப்பது தங்களின் மறுமை வாழ்க்கையில் பாரிய நஷ்டத்தை ஏற்படுத்தும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

அல்லாஹ்த ஆலா தனது திருமறையில் இவ்வாறு கூறுகிறான்.
إِنَّ هَٰذَا الْقُرْآنَ يَهْدِي لِلَّتِي هِيَ أَقْوَمُ وَيُبَشِّرُ الْمُؤْمِنِينَ الَّذِينَ يَعْمَلُونَ الصَّالِحَاتِ أَنَّ لَهُمْ أَجْرًا كَبِيرًا
நிச்சயமாக இந்த குர்ஆன் முற்றிலும் நேராக இருக்கும் நல் வழியைக் காட்டுகிறது; அன்றியும் நற்கருமங்கள் செய்து வரும் முஃமின்களுக்கு, நிச்சயமாக மிகப் பெரும் நற்கூலியுண்டு என்றும் நன்மாராயங் கூறுகிறது.(அல் குர்ஆன்:17:9)

இன்றைய நவீன யுகத்தில் இஸ்லாத்தை ஒழிக்க வேண்டுமென்று கங்கணம் கட்டிக்கொண்டு அலைகின்ற யூத கிறிஸ்தவ மதத்தைச் சேர்ந்த மேற்கத்தேய நடிகர்கள்,ஆய்வாளர்கள் என பலதரப்பட்டவர்களும் அல் குர்ஆனின் வார்த்தைகளால் கவரப்பட்டு அவற்றை ஆய்வு செய்து இஸ்லாத்தை ஏற்று வரக்கூடிய செய்திகளை அவ்வப்போது சர்வதேச ஊடகங்கள் வாயிலாக நாம் அறிந்து கொள்கிறோம்.ஏன் நமது இலங்கை நாட்டில்கூட பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த “கருணா ரத்ன ஹேரத்” என்னும் மிகப்பெரும் அறிஞர் அல் குர்ஆனின் வார்த்தைகளை மிகவும் உன்னிப்புடன் ஆய்வு செய்து அதன் மூலம் “முஸ்லிம் நீதிய”(முஸ்லிம் சட்டம்) என்னும் சிங்கள மொழியிலான மிகப்பெரிய சட்ட நூலை வடிவமைத்துள்ளார்.இதனை தமிழ் மொழியில் மொழிபெயர்ப்பதற்கான முயற்சிகள் தற்போது நடந்தவண்ணமுள்ளன.

இருந்தாலும் பரிதாபம், முஸ்லிம் அல்லாதவர்கள் இஸ்லாத்தையும் அதன் வேதநூலையும் படிக்கின்ற, ஆய்வுகளை மேற்கொள்கின்ற அளவிற்கு நமது சமூகம் அதில் பாராமுகமாகவேயுள்ளது.பரம்பரை பரம்பரையாக இஸ்லாத்தில் கால் பதித்துள்ள நமது சமூகத்தை உற்று நோக்கினால் நமக்கும் அல் குர்ஆனுக்கும் இடையிலான இடைவெளி மிகவும் அதிகமாகவே காணப்படுகிறது.

எனவே இந்நிலையிலிருந்து நம் சமூகத்தை மீட்டெடுத்து இஸ்லாத்தையும் அதன் சிறப்புக்களையும் விளங்கி அறிந்து பின்பற்றுவதற்கு எல்லாம் வல்ல அல்லாஹுதஆலா எமக்குத் துணை புரிய வேண்டும்.அத்தோடு இன்றைய காலகட்டத்தில் இஸ்லாத்தின் எதிரிகள் அல் குர்ஆனின் வசனங்களை முற்றிலும் முரணாக விளங்கிக் கொண்டு மாற்றுமத மக்களிடையில் அவ்வாறே பிரச்சாரம் செய்து புனித இஸ்லாத்தைப் பற்றிய தவறான எண்ணங்களை விதைக்க முற்படுகின்றனர்.

இவ் இழிசெயல்களை முறியடிக்க வேண்டுமாயின் முஸ்லிம் சமூகத்திலுள்ள ஒவ்வொருவரும் அல் குர்ஆனின் வசனங்களை உணர்ந்து படித்து அதற்குரிய விளக்கங்களை கற்றுக்கொள்வதற்கு முன்வர வேண்டும்.அதன் மூலமே தற்போது நிலவுகின்ற முஸ்லிம்களுக்கு எதிரான அடக்கு முறைகளை மன தைரியத்துடன் எதிர்கொள்ள முடியும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை.அய்யாமுல் ஜாஹிலிய்யா காலத்தில் வாழ்ந்த மக்களையே அல் குர்ஆன் மனிதப் புனிதர்களாக மாற்றியமைத்தது என்றால் இக்காலத்திலுள்ள மக்களை மாற்றியமைப்பதில் அவ்வளவு சிரமங்கள் இருப்பதாக தெரியவில்லை.(அல்லாஹ் போதுமானவன்)

No comments

Powered by Blogger.