லண்டனில் பொம்மை துப்பாக்கியை காட்டிமிரட்டி, வங்கியில் கொள்ளை அடித்த சிறுவன்
லண்டன் வங்கியில் பொம்மை துப்பாக்கியை காட்டி மிரட்டி சிறுவன் கொள்ளையடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இங்கிலாந்து வடமேற்கு லிவர்பூல் பகுதியில் பார்லேஸ் வங்கி உள்ளது. இங்கு கடந்த வெள்ளிக்கிழமை முகமூடியும், பள்ளி சீருடையான வெள்ளை சட்டையும், கறுப்பு பேண்டும் அணிந்து கொண்டு 15 வயது சிறுவன் உள்ளே நுழைந்துள்ளான். நேராக கேஷியர் அறைக்கு சென்று, ‘முட்டாள் தனமாக எதையும் செய்துவிடாதீர்கள். நான் 5 வருடம் ஜெயிலில் இருந்து விட்டு வந்துள்ளேன். இந்த பேக்கில் பணத்தை நிரப்புங்கள்’ என்று கூறியுள்ளான். சிறுவன் கையில் வைத்திருப்பது பொம்மை துப்பாக்கி என்பதை தெரிந்து கொண்ட கேஷியர் பயந்து நடுங்குவது போல் நடித்துள்ளார். அவர் சிறுவனை ஏமாற்றுவதற்காக தன்னிடம் வைத்திருந்த ‘போலியான பணக்கட்டுகளை’ பையில் நிரப்பியுள்ளார். அதை எடுத்துக்கொண்டு அந்த சிறுவன் அவசரமாக வெளியேறி விட்டான்.
இந்த தகவல் சிறுவனின் தாயாருக்கு தெரிவிக்கப்பட்டது. அவனது அறையை சோதனை செய்த போது, எராளமான பணம், பொம்மை துப்பாக்கிகள் இருப்பது தெரியவந்தது. மகனை பிடித்து போலீசில் ஒப்படைத்துள்ளார். போலீசார் வழக்கு பதிவு செய்து சிறுவனை கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். இந்த வினோத வழக்கு லிவர்பூல் கோர்ட்டில் நீதிபதி லா லோமாக்ஸ் முன்பு விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி கூறுகையில் வீடியோ கேம் விளையாடும் பழக்கம் கொண்ட இந்த சிறுவன் விளையாட்டில் வரும் காட்சிகள் போல நிஜமாக செய்து பார்க்க முயன்றுள்ளான். இது தவறு என்று அவனுக்கு தெரியவில்லை என்றார். சிறுவனை சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார்.
Post a Comment